Blog

நிலைத்திருப்பைப் பேண கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் தேவைப்படும் மாற்றம்

abiraami

Jan 24, 2022

0

‘காலநிலை மாற்றத்தால் அதிக பாதிப்பை எதிர்நோக்கும்  நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது’ (Global Climate Risk Index)

‘முறையற்ற திட்டமிடல்களாலும், வினைத்திறனற்ற அபிவிருத்தி செயற்பாடுகளாலும்  இயற்கை வளங்கள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன’ (Daily FT) 

‘இலங்கையில் 5ல் 1 (20.4%) பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு நெருங்கிய துணையினால் பாலியல் மற்றும்/அல்லது உடல் ரீதியான வன்முறையை அனுபவிகின்றனர் (Intimate partner violence) (பெண்களின் நல்வாழ்வு கணக்கெடுப்பு). இவ்வாறு நாளுக்கு நாள் நீடித்து நிற்கும் தன்மையற்ற செயற்பாடுகள் உலகெங்கிலும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. மனித வளம், இயற்கை வளம் என அனைத்தும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றமை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. 

எந்தவொரு விடயமும் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றத்தைச்  சந்திக்க வேண்டியுள்ளது. அன்று ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்த பூமியில் இன்று 7.9 பில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்(2022).   சனத்தொகைக்கேற்ப பூமியில் மனிதத் தேவைகள் எண்ணிலடங்காதவையாக இருக்க,  வளங்கள் வரையறைக்குட்பட்டவையாகவே இருக்கின்றன. எனவே அவ் வளங்களை அதீத சுரண்டல்களிலிருந்து பாதுகாத்து, வினைதிறனுடன்  பயன்படுத்தி எதிர்காலச் சந்ததியினருக்கு கையளிப்பது அவசியமாகிறது. இதனையே நீடித்து நிற்கும் தன்மை என்கிறோம்.  இத்தன்மை எல்லாத்துறைகளும் உள்ளடக்கப்படுவது அவசியமாகிறது, குறிப்பாக மக்களின் வாழ்வில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் நீடித்து நிற்கும் தன்மையை உள்ளடக்கியவையாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. 

பாடசாலை முதல் உயர்கல்வி வரை நிலைத்து நிற்கும் எண்ணக்கருவை உள்ளடக்கியதான, அதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்துவதாக  பாடத்திட்டங்கள் சீர்திருத்தம் (Curriculum reform) செய்யப்பட வேண்டியது   அவசியமாகிறது. அதனுடன் அதற்கான தனிப்பட்ட சிறப்புப் படிப்புகளும் மேம்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. இணையத்தளங்களில் காணப்படும் சில பாடநெறிகள்  நிலைத்து நிற்கும் எண்ணக்கருவை உள்ளடக்கியதாக இருந்த போதும் பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள் என்பனவற்றின் பாடத்திட்டங்களிலும் நிலைத்து நிற்கும் எண்ணக்கரு ஒன்றிணைக்கப்படுவது இன்றைய தேவைப்பாடாகும். இருந்த போதிலும் இலங்கை போன்ற நாடுகளில் நிறுவன ரீதியாகவோ அல்லது கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிப்பட்ட நபர்கள் ரீதியாகவோ  இதனை நடைமுறைப்படுத்த முன்வராத தன்மை என்பது சவாலான ஒன்றாக அமைகிறது. உதாரணமாக ‘பால் சார்ந்த கல்வி’ (sex education) இன்றளவில் பாடசாலைகளில் கற்பிக்கப்படுகிறதா  என்பது கேள்விக்குறியே. இதனை விட பொருளாதாரம் சார் கல்வி பாடசாலைகளில் கட்டாயமானதொன்றாக இல்லாமை என்பது அது பற்றிய விழிப்புணர்வு அற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்கக் கூடும், இது தனிப்பட்ட மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் எதிர்மறையான விளைவை  ஏற்படுத்தவல்லது. 

ஆகையால் நிலைத்தன்மையை நோக்கிய உயர்கல்வியின் மாற்றம் என்பது பல்துறை சார்  அணுகுமுறையை  ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும் (cleaner production, 2018). உதாரணமாக, பொருளாதாரத்தை முன்னிறுத்தி விறகுகளைப்  பயன்படுத்துவது , காலநிலை மாற்றத்திற்கு வித்திடுகிறது என்பதை பற்றியும் அறிந்திருந்தல். இதன் மூலம் வினைத்திறனாக வளங்களை பயன்படுத்துவது தொடர்பில் சிந்திக்கவும் (critical thinking), அதற்கான மாற்று தீர்வுகளை உருவாக்கவும் (problem solving) கற்றல் வழிவகுப்பதாக அமைதல் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக கற்றவற்றை நடைமுறைப்படுத்தும் ஆற்றல் மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்குவதாக கல்வி செயல்பாடுகள் அமைய வேண்டும். இதற்காக, கற்றலின் (Higher education) ஒரு பகுதியாக நிலைத்திருப்புக்கு  / நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கு பணியாற்றும் நிறுவனங்களில் (local and International NGO) பயிற்சி வழங்கப்படுவது (Internship) சிறப்பானதாகும். அது மாத்திரமின்றி உயர் கல்வி நிறுவனங்களில் காலநிலை மாற்றம், வறுமை, பால்நிலை சமத்துவமின்மை போன்ற நிலைத்திருப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் விடயங்கள் பற்றி விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள்  மேற்கொள்ளப்படுவதும், அதற்கு மாணவ சமுதாயத்தின்  அல்லது இளைஞர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதும் அவசியமாகிறது. 

எனவே பாடத்திட்டங்களை மாற்றத்துக்கு உட்படுத்துவதோடு,  ‘திறன் மேம்பாடு மற்றும் வலுவாக்கல்’ மூலம் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடியோருக்கு (stakeholders) மாற்றத்தின் தேவை பற்றிய அறிவையும், முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தல் அவசியமாகிறது. இவ்வாறு கல்வியுடன் தொடர்புடைய பிற பங்குதார்களையும் இணைத்த பங்கேற்பு அணுகுமுறை மூலம் நிலைத்து நிற்கும் தன்மையை  வலியுறுத்தும் கல்விக்கான மாற்றத்தை அடைய முடியும்.

About the Author:

Share This Entry