16 Days Of Activism

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை : நம் பலத்தை நமக்குள் பகிர்ந்து கொள்கிறோம்

zumana

Nov 25, 2021

0

பொதுவாக பாலின ரீதியான வன்முறை (Gender Based Violence -GBV) என்பது ஆண் அல்லது பெண் என ஓர் மனிதனின் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு எதிராக இடம்பெறும் அனைத்து வன்முறைகளையும் உள்ளடக்கியதாகவே அமைகின்றது. ஒரு தனி மனிதனின் வாழ்க்கை வட்டத்தில் அவனது ஆரம்பம் முதல் இறுதி வரையில் ஏதோ ஒரு வகையில் பாலின வன்முறைக்கு முகங்கொடுத்த கசப்பான அனுபவத்தை சுமந்த வண்ணமே பயணிக்க வேண்டி இருப்பது இரவுகளும் பகலாகிப் போன இன்றைய நவீன வாழ்க்கை முறையின் இருண்ட பகுதி என்று கூறுவது பொருத்தமானதாகவே அமையும்.

காலங்கள் மாறினாலும் தொழிநுட்பங்கள் சாதனைகள் தாண்டி சாதனைகளை நிகழ்த்தினாலும் தொன்று தொட்டு வந்த கலாசாரம் புது முகங்களை அங்கீகரித்துக் கொண்டாலும் மனித மனப்பாங்கும்(Attitude) அவனது நடத்தையும் (Behaviour) சீராகாத வரை உள்ளங்கள் பண்படாத வரை மனிதம் தொலைத்து மனிதன் தேடி திரியும்  நல்வாழ்வு கிடைப்பது ஐயம் என்பதை இன்றைய உலகினை யுத்தமாக,பாலியல் வன்கொடுமையாக , இனவாத-நிறவாத-மதவாத-ஜாதிவாத கலவரங்களாக ஆட்சி செய்யும் வன்முறை எனும் எஜமான் தெளிவாகவே உணர்த்தி வருகிறது.

வன்முறை வன்முறையையே தூண்டும் என்ற வகையில் இவ் வலைப்பின்னலில் இருந்து கருவழிக்கப்பட வேண்டிய மாபெரும் சமூக பிரச்சினையாக, மனித உரிமை மீறலின் இன்னுமோர் அத்தியாயமாக பாலின ரீதியான வன்முறை அடையாளங் காணப்படுகின்றது.பாலியல் மற்றும் பாலின ரீதியான வன்முறை(Sexual and Gender Based Violence) என்பது ஒரு நபரின் விருப்பத்திற்கு எதிராக அவர்கள் மீது புரியப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் குறிக்கும். இது பாலின விதிமுறைகள் மற்றும் சமமற்ற அதிகாரமுடைய உறவு முறைகளையும் அடிப்படையாகக் கொண்டது.

பால் நிலை வன்முறை பற்றிய முதல் உத்தியோகபூர்வ வரைவிலக்கணம் 1993 ஆம் ஆண்டின் பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உறுதிமொழியில் வெளியிடப்பட்டது. அதன்படி  பாலின ரீதியான வன்முறை (Gender Based Violence)என்பது, “பாலின ரீதியான வன்முறைக்கு உள்ளாக்கக் கூடிய அச்சுறுத்தல்கள், வற்புறுத்தல்கள் ,தன் சுய விருப்பத்துடன் செயல்படக் கூடிய சுதந்திரத்தை இழக்க வைக்கும் எந்தவொரு உடலியல்,பாலியல் மற்றும் உளவியல் ரீதியான தீங்கும்(குறிப்பாக பெண்களுக்கெதிரான) பாலின வன்முறையாக கருதப்படும்.அவை பொது அல்லது தனியார் இடங்களில் இடம்பெற்றாலும் சரியே.

இவ் வரைவிலக்கணம் பாலினம் சார்ந்த வன்முறையை தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. எனினும் பாலின ரீதியான வன்முறைகளை ஆண்களும் அனுபவித்துக் கொண்டிருக்கும் இவ்வுலகில் இது பெண்களுக்கெதிரானது மட்டுமே என வரையறைப்படுத்துவது நேர் முரணானது. என்றபோதிலும் இதற்கு ஆதரவான மட்டுப்படுத்தப்பட்ட ஆதாரங்களும் பாதிப்படையும் ஆண்களின் குறைவான வீதமும் ஒப்பீட்டளவில் பெண்கள் எதிர்நோக்கும் அளவிலான வன்முறைகளை ஆண்கள் எதிர்கொள்வதில்லை என்ற கருத்தையே ஆமோதித்து நிற்கின்றன.

2013 ஆம் ஆண்டின் உலக சுகாதார தாபனத்தின் பல்நாட்டு கணிப்பீட்டின் படி,3 பெண்களில் ஒரு பெண் தன் வாழ்நாளில் பாலியல்/உடலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக தன் மீதான தன்னம்பிக்கையை இழத்தல் ,சுயபெறுமதியை உணராது போதல், உள அதிர்ச்சி, தற்கொலை அதேபோல் கொலை செய்யப்படல் என ஒருவரது நல் வாழ்வில் பாரிய தாக்கங்களை பாலினம் சார் வன்முறைகள் ஏற்படுத்துகின்றன.

பல்மத பல்லின கலாசாரம் கொண்ட ,குறைந்த முதல் மத்திய வருவாய் கொண்ட மக்கள் வாழும் வளர்ச்சி அடைந்து வருகின்ற நாடு என்ற வகையில் இலங்கையின் சமூக அமைப்பானது ஆணுக்கென தனியான வழமைகள் பெண்ணுக்கான தனியான வரையரைகள் என்றே ஒழுங்கமைந்துள்ளது.இக் கண்ணோட்டமானது இயல்பாகவே பாலின அடிப்படையிலான ஏற்றத்தாழ்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.இது வலிமையுடையோர் பலவீனர்களை கட்டுப்படுத்தும் நியதியாக மாறவே சமூகத்தில் பெரிதாக முன்னிறுத்தப்படாத இப் பாலினம் சார்ந்த வன்முறையின் ஆபத்தான முகம் மூன்று தசாப்த கால யுத்த முடிவோடு சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் வேறூன்றி இருப்பது வெளிப்படுத்தப்பட்டது.இதற்கிணைவாக நாட்டின் இராணுவமயமாக்கல் மற்றும் குற்றவாளிகள் அனுபவித்த தண்டனைகள் என்பன இந் நிலைமையை மேலும் மோசமான நிலைக்கு கொண்டு சென்றதோடு வன்முறை கலாசாரம் இயல்பான ஒன்றாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது.

உலக சுகாதார தாபனத்தின் தரவுகளுக்கமைய உலகிலேயே பாலினம் சார் வன்முறைகள் அதிகமாக இடம்பெறும் வலயமாக தென் கிழக்காசிய நாடுகள் இனங்காணப்பட்டுள்ளன.என்ற போதிலும் இவ் வன்முறை சார் சரியான தரவுகளை பெற தேசிய அளவிலான தரவு சேகரிப்பு பொறிமுறைகளின் குறைபாடு காரணமாக இலங்கையில் நிகழும் பாலின ரீதியான வன்முறைகளின் பரிமாணம் சரியாக கணிக்கப்படவில்லை என்றே கூற வேண்டும்.

இவை சார் ஆய்வுக் கணிப்பீடுகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கிடைக்கப் பெறுகின்ற போதிலும், 2011 ஆம் ஆண்டின் 11 மாவட்டங்களை உள்ளடக்கிய கணக்கெடுப்பின் படி 51.2% ஆன ஆண்கள் மற்றும் பெண்கள் தம் வீட்டில் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் (Domestic violence).

UNFPA ஆல் நடாத்தப்பட்ட மிக அண்மைய ஆய்வின் படி 90% பெண்கள் பொது போக்குவரத்தின் போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் (UNFPA 2017).மேலும் இலங்கையின் 22 வயதிற்குட்பட்ட 1322 இளங்கலை பட்டதாரிகளுக்கிடையில் (41%-ஆண் : 58%-பெண்) நடாத்தப்பட்ட ஆய்வின் படி அவர்களில் 44% ஆனோர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதோடு அதில் 36% ஆனோர் உடலியல் துஷ்பிரயோகத்துக்கு முகங் கொடுத்துள்ளனர்.மேலும் 2013 இல் நடாத்தப்பட்ட இன்னுமொரு ஆய்வின் படி, 3 ஆண்களில் ஓர் ஆணேனும் தன் நெருங்கிய உறவொன்றை (Intimate Partner Violence) பாலியல் மற்றும்/அல்லது உடலியல் வன்முறைக்கு உட்படுத்தி உள்ளதுடன் 20% ஆனோர் தம் நெருக்கமான உறவுக்கெதிராக பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள அதே நேரம் 28% ஆன ஆண்களும் தம் வாழ் நாளில் பாலியல் வன்முறைக்குள்ளாகி உள்ளனர்.

இவ்வாறான நிலையில் இங்கு தரவாக அடையாப்படுத்தப்படுகின்ற ஒவ்வொரு நபரும் உயிரும் உணர்ச்சியும் ஒன்றித்த சுதந்திரமாக வாழ உரிமையளிக்கப்பட்டுள்ள மனிதர்கள் என்பதை உணர வேண்டியது அவசியமாகும். உண்மையில் இவ் வன்முறைகளுக்கான பின்னணி காரணிகள் என்ன?,பாலியல் பலாத்காரம், துன்புறுத்தல்,கற்பழிப்பு, வற்புறுத்தல்,உளவியல் சார் துஷ்பிரயோகம்,கட்டாய இள வயதுத் திருமணம், பாலின ரீதியான சிசுக்கொலை உட்பட அனைத்து பாரபட்சமான பாலின விதிமுறைகளை ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி நாளுக்கு நாள் முகங்கொடுத்த போதிலும் அவர்களுக்கு இடம்பெற்ற அநீதி வெளிக்கொண்டு வரப்படாது மறைக்கப்பட்டு அல்லது நீதி மறுக்கப்படுவது ஏன்?, சமூக, கலாசார ,குடும்ப, பொருளாதார, உளவியல் ரீதியாக இதனால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன? போன்ற கேள்விகள் சமூகத்தினல் எழுப்பப்பட வேண்டிய அவசியம் ஒவ்வொரு நொடியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

இன்றைய காலகட்டத்தில் குற்றமிழைத்தவர் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு இடையிலான அதிகார வேறுபாடே பால் நிலை சார் வன்முறைக்கான அடிப்படை காரணமாகும். இது தவிர சமுக,மத,பண்பாட்டு காரணிகள், தனிப்பட்ட பழக்கங்கள் மற்றும் நடத்தைகள்,பொருளாதார காரணிகள், சட்ட-சுகாதார முறைமையின் குறைபாடு/பலவீனத்தன்மை உட்பட சூழ்நிலை சார் காரணிகள் என பல்வேறுபட்ட முகங்கள் ஒன்றிணைந்து பாலினம் சார் வன்முறையின் கோர நிலையை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

குறிப்பாக பாதிக்கப்பட்டவர் மீது அதிகாரம்/கட்டுப்பாடு விதிக்கப்படுவது அல்லது அந்தரங்கமானவை , நெருக்கமான உறவினர் என்பதன் காரணமாக இவ் உண்மை வன்முறை சம்பவங்கள் மறைக்கப்படுகின்றன. மேலும் பாதிக்கப்பட்டவர் மீதே குற்றம் சுமத்தப்படல்,சமூகக் கூருணர்வின்மை, ஆணாதிக்க உளப்பாங்கு அதேபோல் சமூக வழக்காறுகளும் பாலினம் சார் எதிர்பார்ப்புகளும் பாலினம் சார் வன்முறைகள் நிகழ்வதற்கான சமூக சாதக நிலையை உருவாக்குகின்றன.

அறியாமை, மது மற்றும் போதைப் பொருட் பாவனை, சமூக புறக்கணிப்பு, வறுமை உட்பட பொருளாதார தங்கியிருத்தல் என்பன நிலைமையை மேலும் மோசமாக்குவதுடன் யுத்த நிலைமை,சட்ட மற்றும் காவல் துறையின் ஒழுங்கற்ற நடவடிக்கைகள், சட்ட-சுகாதார-பாதுகாப்பு முறைமைகளின் சேவைகளின் தரம் போதாமை என்பன பாலினம் சார்ந்த வன்முறைகள் அதிகரித்து செல்வதற்கு ஏதுவாக அமைகின்றதோடு குறிப்பாக இவற்றை மீறி பாதிக்கப்பட்டோர் நீதி தேடி நீதிமன்றத்தை நாடும் போது அங்கு தாமதமாக வழங்கப்படும் நீதி மற்றும் சட்ட முறையின் வெற்றிடங்கள் என்பன தடைகளை தாண்டி அநீதியை எதிர்த்து முன்வரும் பாதிக்கப்பட்டவரின் கடைசித்  துளி எதிர்பார்ப்பையும் வீணடித்து விடுகின்றன. பாலினம் சார்ந்த வன்முறைக்குட்பட்டோர் தம் வாழ்க்கை முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தாக்கங்களையும் விளைவுகளையும் எதிர்கொள்ள நேரிடுகின்றனர்.

உடலியல் ரீதியாக காயப்படுத்தப்படல்,அங்கவீனமாகல்,பாலியல் நோய்கள் முதற் கொண்டு பாதிக்கப்பட்டு மரணம் வரை கொண்டு செல்லப்படுகின்றனர். மனதளவில் அதிகம் பாதிக்கப்படும் இவர்கள் மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தம், ஆவேசம், கவலை, பிறர் மீதான நம்பிக்கையை இழத்தல்,தனிமை, பிந்தைய மன உளைச்சல் என தற்கொலை வரையான உளவியல் தாக்கங்களை இவை ஏற்படுத்துகின்றன.

தனிப்பட்ட முறையில் பாதிப்புக்குள்ளாகும் இவர்களின் மன உறுதி சிதைக்கப்படுவதால் பலவீனமானவர்களாக மாறும் நிலையானது குடும்பத்தின் கட்டமைப்பில் சிதறலை ஏற்படுத்தி விவாகரத்துக்கு காரணமாக அமைவதோடு குழந்தை பராமரிப்பு, குடும்ப பொருளாதார கட்டமைப்பு என்பன சிதைவடைகின்றன.

இவ்வாறான நிலை சமூகத்தில் இனம்புரியா ஓர் அச்சத்தை தோற்றுவிப்பதோடு இச்சமூக அவல நிலையினை இழிவளவாக்க சமூக பொறுப்புணர்ச்சியும் விழிப்புணர்ச்சி செயல்முறைகளும் சட்ட வழிமுறைகளும் வலுப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவையாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் இலங்கையானது வன்முறைகளை ஒழிப்பதை மையமாகக் கொண்டு பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதன் மூலமாக சர்வதேச தரத்தை பேணும் வகையில் பொறுப்பு மற்றும் பேணுதலில் தன் வகிபங்கை வழங்க உறுதி அளித்துள்ளது.

இவற்றோடு இணைந்ததாக இலங்கையை பொறுத்த வரையில் பாலினம் சார்ந்த வன்முறைக்கெதிராக குரல் கொடுக்க மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு ,WIN (Women In Need)போன்ற அரச மற்றும் அரச சார்பற்ற தாபனங்கள்,சிவில் சமூக அமைப்புகள் அதேபோல் சமூக குழுக்கள் முன்வந்துள்ளமையானது பாலின ரீதியான வன்முறைகளை குறைப்பதற்கான பாதையில் ஓர் நேர்மையான அறிகுறி என்றே குறிப்பிட வேண்டும்.

குறிப்பாக பாலின வன்முறைகளின் தாக்கத்தை இழிவளவாக்கவும் ,பாலின வன்முறைகள் இடம்பெறாது தடுக்கவும் இலங்கையின் சட்டங்களும் கொள்கைகளும் புதிய நுட்பங்களை உள்வாங்குவதும் அவை மறுசீரமைக்கப்பட வேண்டியதும் அவசியமாகின்றது.இவ்வாறான நிலைகளை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை எதிர்கொள்கின்ற விதம் மேம்படுத்தப்பட வேண்டும். பாதிக்கட்டோர் சரியாக இனங்காணப்பட்டு உளவியல் தேவை முதற் கொண்டு முறையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். கால தாமதமற்ற நியாயமான நீதி வழங்கப்பட வேண்டும்.

இதனோடு இணைந்து சமூக விழிப்புணர்வு மற்றும் பாலின வன்முறைக்கு எதிரான அணிதிரட்டல் ஊடகங்களின் துணையுடன் சமூகத்தின் ஒவ்வோர் எல்லைக்கும் சென்றடையும் வகையில் பாடசாலை,பல்கலைக்கழகங்கள் இணைந்ததாக பாதுகாப்பு உத்திகளுடனான செயலமர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ் வழிமுறையில் ஆண்கள்,பெண்கள் என ஒருமித்த பங்குதாரர்களாக பணியாற்றும் போதே சிறந்த மாற்றத்தை உருவாக்கிட முடியும்.சமூகம் என்பது  ஆண்-பெண் என அனைவருக்குமான வாழ்வியல் தரிப்பிடமே அன்றி ஒன்று இன்னொன்றை துன்புறுத்த எவ்வித உரிமையுமில்லை.ஒவ்வோர் தனிமனிதனினதும் பெறுமானம் மதிக்கப்பட வேண்டும். மனிதநேயத்தை பாரம்பரியமாகவே ஏற்று வாழும் இலங்கையில் வழிகாட்டலும் அறிவும் சரியாக கொண்டு சேர்க்கப்பட்டால் பாலினம் சார்ந்த வன்முறைகளுக்கு இடப்பட்டுள்ள தொடர்புள்ளிகள் முற்றுப்புள்ளிகளாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது திண்ணம்.

About the Author:

Share This Entry