Blog

இலங்கையில் பால்நிலை : ஒரு பகுப்பாய்வுக் கண்ணோட்டம்

admin

Apr 12, 2022

0

காலம் காலம் தொட்டு பெண்கள் அடக்கு முறை சூழலிலே வாழ்ந்து வருகின்றார்கள். காலம் காலமாய் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான சமனில்லா செல்வாக்கே பெண்களுக்கெதிரான வன்முறையாகும். இது ஆண்களை விட பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற  நிலைக்கு தள்ளப்படும் இக்கட்டான செயலொன்றாகும். உலகிலுள்ள பிரச்சினைகளில் ஒன்றாக பெண்களுக்கெதிரான வன்முறை காணப்படுகின்றது. தினம் தினம் உலகிலுள்ள மூன்று பெண்களில் ஒருவர் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றார் என ஆய்வுகளே கூறுகின்றன.

பெண்ணாணவள்  மென்மையானவள்; பூப் போன்றவள் என்ற காலம் மாறி தற்போதுள்ள நாகரிக காலமானது அவளை  கருவிலே சிதைத்துக்கொண்டிருக்கின்றது. ஆண்களும் பெண்களும் நிகரானவர்கள் என்று கூறுகின்ற வார்த்தை வெறும் வார்த்தைகளாக மட்டுமே காணப்படுகின்றது. இவள் பல போராட்டத்திற்கு மத்தியில் பிறந்து பிள்ளைப்பருவத்தை எட்டி இளமைப்பருவத்தை அடைந்து  முதியவர் ஆகும் வரைக்கும் குடும்பத்தால், சமூகத்தால், பாடசாலைகளில், தொழில் புரியும் இடங்களில், போக்குவரத்தின் போது என எல்லா இடங்களிலும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றாள். 

1993 பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிப்பதற்கான பிரகடமானது, பொது அல்லது தனி வாழ்க்கையில்  பெண்களை அச்சுறுத்துகின்ற செயல், வற்புறுத்தல் அல்லது தன்னிச்சையாக சுதந்திரத்தை பறித்தல்  உள்ளடங்கலாக உடல் பாலியல் மற்றும் உள ரீதியாக பெண்களுக்கு தீங்கு அல்லது துன்பம் விளைவிக்கும் அல்லது விளைவிக்க கூடிய எந்தவொரு பால்நிலை சார் வன்முறை செயலையும் குறிக்கும் என வரைவிலக்கணப்படுத்துகின்றது.

பெண்கள் என்பதால் பாலினத்தை முதன்மை காரணியாகக் கொண்டு பாகுபாடுள்ள சட்டங்கள், ஆதரவளிக்காத அமைப்புக்கள், சாதி ரீதியான பாகுபாடு, ஏழ்மை, தீங்கு விளைவிக்கும் பாலின நெறிகள், கல்வியறிவின்மை, உறவுகளில் அதிகளவான சமத்துவம் இன்மை மற்றும் சிறு வயதில் குடும்பத்திற்குள் எதிர் கொள்ள வேண்டிய வன்முறைகள் போன்ற காரணிகள் பெண்களுக்கெதிரான வன்முறைக்கு ஏதுவாய் அமைகின்றன.

கலாச்சாரம் என்ற பெயரில் ஆணாதிக்க சமூகத்தால் அமுலாக்கப்படுகின்ற சட்ட முறைமைகளை புறக்கணிப்பதாலே இவ் வன்முறைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. திருமண உறவுகளில் நடக்கும் பாலியல் வன்முறைகளையும் வன்முறையாக கருதமுடியாது என நீதி மன்றமே சொல்கின்றது எனில், நம்முடைய கலாச்சாரம் எத்தகையது என புரிந்து கொள்ள முடிகின்றது.

இப்போதுள்ள உலக நெருக்கடி பல உயிர்கள், வியாபாரங்கள் போன்றவற்றை அழித்து விட்டது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் நம் கண்ணுக்கு தெரியாத உண்மை உலகெங்கிலும் குடும்பங்களுக்கிடையே அமைதியாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. ஆண்கள் தங்கள் நிலை மறந்து  தங்களிடமுள்ள கோபம், வெறுப்பு, அவமானம் போன்றவற்றை ஒன்றுமறியா பெண் குழந்தைகள், பெண்கள்  மீது காட்டுகின்றார்கள். வீட்டில் வன்முறைக்கு உட்படுத்தப்படும் பெண் தனது கருத்து நிராகரிக்கப்படும் அல்லது அவமானத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும் என தமக்குள்ளேயே நினைத்து வெளியிடங்களில் பேசுவதில்லை. 

இலங்கையில் வசித்து வரும் மூன்றாம் பால்நிலை  சமூகத்தினரும்  பாரபட்சத்தை எதிர் கொண்டுவருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த நாற்பது வயதுடைய மூன்றாம் பாலினர் ஒருவரிடம் தொழிலுக்கான நேர்முகத் தேர்வின் போது அவரது தகைமைகளை பற்றி கேட்காது, அவரது பாலினத்தை பற்றிய கேள்வியே முதலாவதாக கேட்கப்பட்டதான சம்பவங்களும் ஏராளம். படித்த சமூகமே இவர்கள் தொடர்பான புரிந்துணர்வை கொண்டிராதது கவலைக்குரியது.  அவர்களது உணர்வு, சந்தித்த சவால்கள் அத்தனையும் தாண்டி வந்தாலும் சமூகத்தின் பொறுப்பற்ற நிலையால் பின்னோக்கியே தள்ளப்படுகின்றார்கள் என்பதே உண்மை.

இலங்கையில் அண்மைக் காலமாக சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான சம்பவங்கள் நாளாந்தம் நம் காதினை வந்தடைகின்றன. இதற்கான காரணம் என்ன? பல்வேறுபட்ட சமூகக் காரணங்களை அடுக்கிக் கொண்டு சென்றாலும் உண்மையானதும் அடிப்படையானதுமான காரணியாக மாணவர்களுக்கு பால்நிலைக் கல்வி தொடர்பான அறிவின்மையாகும். மேலைத்தேய நாடுகளில் பால்நிலைக் கல்வியின் அவசியம் உணரப்பட்டு முறைசார்ந்த கல்வியினூடாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் பால்நிலை பற்றிய நோக்கானது பெரும்பாலும் சமத்துவமற்ற ரீதியில் காணப்படுகின்றது. பெண் என்பவள் பல தடைகளை தாண்டி சகல துறைகளிலும் உயர் இடத்திற்கு  வந்திருந்தாலும் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களாக காணப்படுகின்றனர் என்பதே யதார்த்தமான உண்மையாகும். 

இலங்கையை பொறுத்த வரையில் பெண்கள் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக தெளிவு இன்மையால் இவ்வாறான பால்நிலை தொடர்பான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். ஓரரறிவு முதல் ஐந்தறிவு படைத்த உயிரினங்களிடையே பெண்ணுரிமைக்கான  சுதந்திரம் காணப்படுகின்றது. இருப்பினும் எம்மைப் போன்ற ஆறறிவுள்ள உயிரினங்கள் வாழ்கின்ற உயரிய உலகில் பெண்ணுரிமைக்கான நீதி கிடைப்பதில்லை. அதற்கு காரணம் மனிதர்கள் மத்தியிலுள்ள சுயநலமே.

About the Author:

admin

Thirukumar Premakumar

Share This Entry

Array