Blog

பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு : ஒரு சிறப்பு பார்வை

admin

Apr 12, 2022

0

பெண்களுக்கெதிரான வன்முறை என்பது பெண்களுக்கு உடல் மற்றும் உளரீதியான அல்லது பாலியல் அடிப்படையில் தீங்கினை விளைவிக்கும் அல்லது வருத்தத்தை விளைவிக்கும் செயல்கள் மற்றும் பொதுவாழ்வில் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் என்பவற்றை குறிக்கின்றன. இது இரண்டு நிலைகளில் காணப்படும். அதாவது, வன்முறைக்குட்படுத்தப்படுவோர், வன்முறையை மேற்கொள்பவர் என்பனவாகும். பெண்களுக்கெதிரான வன்முறையினால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாதிக்கப்படுவாரானால் அவர் பல்வேறு எதிர்மறையான கர்ப்பம்சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். (குழந்தை இறந்து பிறத்தல், நிறை குறைவான பிள்ளைகள் பிறத்தல்). மேலும் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கான காரணங்களாக, கல்வி மற்றும் வேலைசார் விடயங்கள் அதாவது குறைவான எழுத்தறிவு வீதம் மற்றும் பெண்களுக்கான கல்வி நடவடிக்கைகளில் அனுமதியின்மை (உதாரணம்:ஆப்கானிஸ்தான்), தொடர்ச்சியாக ஒதுக்கிவைக்கும் தன்மை, பெண்களை இரண்டாம்தர பிரஜையாகக் கருதுதல், ஆணாதிக்கம், புரிந்துணர்வின்மை, பொருளாதாரப் பிரச்சினைகள் ,சீதனப் பிரச்சினைகள், சமய சமூகக் கட்டுப்பாடுகள், வறுமை, பெண்களை வலிமை குறைந்தவர்களாகக் கருதுதல், பெண்களைப் பாலியல் பொருளாகக் கருதுதல், அதிகார ஆதிக்கம் போன்றன காணப்படுகின்றன. 

பெண்களுக்கெதிரான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை நோக்கின்,  பொதுவிடயங்களில் குறைந்த ஈடுபாடு, தனிமையை நாடுதல், மனச்சோர்வு, மௌனமாக இருத்தல், அடிக்கடி கோபப்படுதல், பொறுமையற்றிருத்தல், சமூக செயற்பாடுகளில் குறைந்த ஈடுபாடு, தற்கொலை முயற்சி போன்றன தன்மைகளை கொண்டவர்களாக அவர்கள் இருப்பர். 

பெண்களுக்கெதிரான வன்முறை வடிவங்களாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம். 

  1. கொலை :- வன்முறை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் அதே குடும்ப உறுப்பினர்களால் கொலைசெய்யப்படல்.  
  2. துன்புறுத்துதல் :- பேசுதல், புறக்கணித்தல், உடல் ரீதியான துன்புறுத்தல், பாலியல் ரீதியான துன்புறுத்தல்.
  3. இளவயதுத் திருமணம் :- திருமண வயதை அடையும் முன்னரே திருமணம் செய்து வைத்தல். இதன் மூலம் பெண்களே அதிகம் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். (உதாரணம் : தென்னாசிய நாடுகள்)
  4. கௌரவக் கொலைகள் :- குறிப்பிட்ட சில காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தமது குடும்பத்திற்குத் தீங்கு அல்லது களங்கம் ஏற்படுத்தும் வகையில் குடும்ப உறுப்பினர் ஒருவர் செயற்படுவாராக இருந்தால் அந்த குடும்பத்தைச் சார்ந்த ஒரு நபரால் அவர் கொலை செய்யப்படுதல் கௌரவக் கொலைகள் எனப்படுகின்றது. உதாரணம் :  சவுதி அரேபியா, பாகிஸ்தான். 
  5. சீதனம் :- தென்னாசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் அதிகமாக இடம்பெறுகின்றது. 
  6. வீட்டு வன்முறைகள் :- ஒரு வீட்டுச் சூழலுக்குட்பட்டதாகும். இது குறிப்பாக மனவெழுச்சி, பாலியல் மற்றும் பொருளதார ரீதியாக வெளிப்படுத்தப்படும். 

இவற்றுடன் பாலியல் ரீதியான தொந்தரவு, பாலியல் வன்புணர்வு, திருமண வாழ்க்கையில் பாலியல் குற்றங்கள், பாலியல் காட்சிப்பொருளாகப் பயன்படுத்துதல், தாய்மையைப் புறக்கணித்தல், தகாப்புணர்ச்சி  போன்றவற்றையும் குறிப்பிடலாம்.

பெண்களுக்கெதிரான வன்முறையின் விளைவுகளை நோக்குகையில், பெண்கள் உடல்,உள,சமூக ரீதியான விளைவுகளை எதிர்கொள்கின்றனர். அந்த வகையில் மன அழுத்தம், மனச்சோர்வு என்பவற்றிற்கு உட்படுதல், அவர்கள் சமூகத்தில் இடம்பெறுகின்ற எந்தவொரு சமூக நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள மாட்டார்கள், எப்பொழுதும் தனிமையையே விரும்புவார்கள், அவர்கள் ஆண்கள் மீது வெறுப்பு, பயம், கோவம் போன்ற உணர்வுகளை கொண்டவர்களாக காணப்படுவார்கள். அதாவது உதாரணத்திற்கு கூறப்போனால், வீட்டு வன்முறையோ அல்லது பாலியல் வன்முறையோ இடம்பெற்றால் அனைத்து ஆண்களும் இதே இயல்புகளைக்கொண்டவர்கள்தான் என பெண்கள் ஆண்களிடம் உதவிகளை கேட்கவோ அல்லது பெறவோ விரும்ப மாட்டார்கள்.

அத்துடன் அதிகமாக பெண்களின் தற்கொலை, கொலை, நோய் ஏற்படல் போன்றவற்றிக்கு காரணமாக இது அமைகின்றது. உதாரணமாக ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உட்பட்டால் அப்பெண் கொலை செய்யப்படுவாள் (வித்தியாவின் கொலை ), அத்தோடு அதனை தாங்க முடியாமல் பெண்கள் தற்கொலை செய்ய  தூண்டப்படுகின்றனர். அதாவது ஓர் ஆய்வில் பெண்கள் தமது நெருங்கிய உறவினர்களால் வன்முறைக்கு உட்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்  எனக் கூறுகின்றனர்.

அத்துடன் குடும்பப் பிரிவுகள் மற்றும் முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன. அதன் மூலம் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிப்படைகின்றது. உதாரணமாக பிள்ளைகள் பாடசாலை இடைவிலகல்,  சிறுவயதில் தொழில் புரிதல், பிள்ளைகள் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட ஒருவராக வளர்த்தல் போன்ற விளைவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. உதாரணமாக வீட்டுவன்முறை இடம்பெறும் போது கணவன் குடித்து விட்டு மனைவிக்கு அடிக்கும் போது அங்கு வீட்டு வன்முறை ஏற்படுகின்றது. அதனால் அவர்களின் பிள்ளைகளும் அதனை பார்த்து வளர்க்கின்றனர். அங்கு பொருளாதார சிக்கல்களும் ஏற்படுகின்றது.

அத்துடன் பெண்கள் சமூகத்தில் சமூகப்புறமொதுக்கலுக்கு உட்படுகின்றனர். எவ்வளவு தான் பெண் தவறு இழைக்காது இருந்தாலும் பெண்ணையே பழிசொல்கின்ற சமூகத்திற்கு பெண் உட்படல், தாழ்வுமனப்பாங்கு, அடிக்கடி கோவப்படுதல்,பொறுமையற்று இருத்தல்,கல்வியில் ஈடுபாடு குறைவாக இருத்தல், நண்பர்களுடன் ஒதுங்கி இருத்தல் என்பனவும் பாலியல் வன்முறையினால் ஏற்படுகின்ற விளைவுகளாக கொள்ளப்படுகின்றன. 

பெண்களுக்கு எதிரான வன்முறையினால் ஏற்படும் மேற்குறிப்பிட்டது போன்ற விளைவுகளை தடுப்பதற்கான வழிமுறைகளை கையாளல் அவசியமாகின்றது. அவ்வாறான தடுப்பு நடவடிக்கைகளை நோக்குவோமாயின் தமக்கு ஏற்படும் பெரும்பாலான வன்முறைகளை தடுக்கும் ஆயுதம் பெண்களான அவர்கள் கையிலேயே உள்ளது. அதாவது இலங்கை போன்ற கீழைத்தேச நாடுகளிலே பண்பாட்டுமரபுகள் இறுக்கமாக  பின்பற்றப்படுகிறது. பெண்கள் இம் மரபுகளுக்கு அதிகம் கட்டுப்படுவதால் அவர்கள் ( கணவனே கண்கண்ட தெய்வம் என்ற போக்கிலும், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழமொழிக்கு ஏற்பவும்) வன்முறைகளை சுவீகரித்துக்கொள்ளும் தன்மை , குடும்ப சீர்குலைவு ஏற்படும் என்ற பயஉணர்வு போன்றவற்றிலிருந்து வெளிவருதல் வன்முறைத்தடுப்புக்கான முக்கிய மாற்றமாகும்.  எனவே பெண்கள் தங்களுக்கு ஏற்படும் வன்முறையை வன்முறையாக உணர்ந்து அதை வெளிப்படுத்த மனதளவில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம்.

மேலும் பால்நிலை சமத்துவத்தை ஏற்படுத்தி, பெண்கள் மனித உரிமையை அனுபவிக்க வழிசமைக்கும் வகையிலான விழிப்புணர்வுகளை (கலந்துரையாடல்,நாடகம், பேட்டி,சுவரொட்டி, பாடசாலை மட்ட விழிப்புணர்வு) ஏற்படுத்தல் மற்றும் இவ்வன்முறைகள் தொடர்பான இறுக்கமான சட்டங்களை பின்பற்றல் என்பனவும் பாலின வன்முறைக்கு எதிரான  சிறந்த அணுகுமுறைகள் ஆகும். அதாவது இலங்கையில் காணப்படுகின்ற ( 1956ம் ஆண்டு 56ம் இலக்க சட்டம், 2005ம் ஆண்டு  34ம் இலக்க வீட்டு வன்முறைச்சட்டம் , CEDAW போன்ற சர்வதேச சட்டங்கள்) போன்றவற்றை சரியான வகையில் நடைமுறைப்படுத்தல், மற்றும் பெண்களுக்கு இச்சட்டங்களை அணுகும் வழிமுறைகள் பற்றிய அறிவினை வழங்கல், நீதிமன்ற அணுகுமுறைகளை இலகுபடுத்தல், காரியாலயங்களில் விசேட கொள்கை திட்டத்தை ஆக்கல்  போன்ற சட்ட நடைமுறைகளை பலப்படுத்தல் என்பன  முதன்மை பெறுகின்றன. மேலும் ஆண்கள் மட்டத்தில் பெண்களுக்கான சமத்துவத்தை வழங்கும் எண்ணப்பாங்கினை உருவாக்கல் வன்முறையை தானாக இல்லாமல்  செய்யும் வழிமுறையாகும். நேர்மை, பொறுப்புணர்ச்சி,பொறுப்புக்களை பகிர்தல், மதித்தல், நம்பிக்கை கொள்ளல் மற்றும் உதவிசெய்தல் போன்ற  மாற்றங்களை ஆண்கள் ஏற்படுத்தல் என்பன வன்முறையை மறைமுகமாக தடுக்கின்றது.

அதேபோல பெண்கள் சமூக ரீதியில் ஒன்றிணைந்து  செயற்படல் ஊடாக அவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க முடியும். அதாவது பெண்கள் அமைப்புக்களின் செயற்பாடுகள், பெருந்தோட்டத்துறையில் செயற்படும் சிவில் அமைப்புக்களின் பணிகள் , இளைஞர் அமைப்புக்களின் செயற்பாடுகள் பெண்களுக்கெதிரான வன்முறையை  சிறந்த வகையில் கையாளுகின்றன. இவை வன்முறைத்தடுப்புக்கு முக்கிய பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான வழிமுறைகள் ஊடாக வன்முறைகளை தடுக்கவும் குறைக்கவும் முடியும். எனவே சமூகத்தில் உள்ள அனைவரும் பெண்களுக்கெதிரான வன்முறை  தொடர்பான அறிவினை அறிந்திருந்தல் அவசியம். அதாவது பெண்களுக்கெதிரான வன்முறையின் காரணங்கள் விளைவுகளை தடுப்புமுறைகள் என்பன பற்றிய தெளிவினை ஆண்களும் பெண்களும் அறிந்து கொள்ளும் போது, பெண்களுக்கெதிரான வன்முறை என்ற பாரிய சமூக பிரச்சினையிலிருந்து விடுபட உதவும்.

இருபத்தோராம் நூற்றாண்டில் அபிவிருத்தி, சமத்துவம், சாதனைகள் என்று உலகளாவிய ரீதியில் முன்னேற்றங்களையும் மேம்பாடுகளையும் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நாம் இன்னும் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளில் முழுமையான தீர்வை எட்டவில்லை என்பதே நிதர்சனம். குறிப்பாக இலங்கையானது பெண்களைப் பொறுத்தவரையிலும் பெண்களுக்கான அபிவிருத்தி வீச்சிற்குள் இருக்கின்ற பல நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்குகையில்  பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சமூக அளவில் பெண்கள் பொருளாதார ரீதியாக வினைத்திறன் அற்றவர்களாகவும், பலவீனமானவர்களுமாகவே சித்தரிக்கப்படும் எண்ணப்பாங்கு நிலவி வருகிறது. தினம்தோறும் பெண்களுடைய வாழ்வு வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் பல வெவ்வேறுபட்ட சவால்களுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. இன்று பரவலாக பெண்விடுதலை மற்றும் பெண்ணுரிமை குறித்து பேசப்பட்ட போதிலும் அது அறிவுபூர்வமான மற்றும் அனைத்து வகைகளிலும் தெளிவான அம்சமாக அடிமட்ட மக்கள் மத்தியில் சென்றடையவில்லை என்றே குறிப்பிடமுடியும். பெண்களுக்கான பல ஜனநாயக உரிமைகளான கல்வி, தொழில் வாய்ப்பு, வாக்குரிமை போன்றவை ஆசியாவிலேயே உயர்ந்த அளவில் இலங்கையில் காணப்படுகின்ற போதிலும் இன்னும் பலதரப்பட்ட பிரச்சினைகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன. பெண்ணொருவர் குறிப்பிட்ட வயதுப் பருவத்தில் தான் வன்முறைகளை எதிர்கொள்கின்றனர் என்ற பிறழ்வான எண்ணக்கரு பரவலாக நிலவி வருகிறது. ஆயினும் ஒவ்வொரு வயதுக்குழுக்களிலுமுள்ள பெண்கள் பல்வேறு வகைப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க வேண்டி உள்ளது என்ற உண்மை நிலை உணர்ந்து அதை தடுப்பதற்கான அல்லது குறைப்பதற்கான விடயங்கள் மேற்கொள்ளப்படல் அவசியமாகும்.

About the Author:

admin

Thirukumar Premakumar

Share This Entry