Blog

பெண்ணின் வலிச்சரிதம்

admin

Apr 20, 2022

0

அன்றோர் நாள் என் தாயின் கருவில்

முட்டிமோதி எட்டிப்பார்த்தேன் உலகைக்காண

அன்று புரியவில்லை வாழ்க்கையின் சவால்கள்

இன்று புரிந்தது வாழ்க்கையே சவால் என்று

காலமும் ஓடியது கஸ்டமும் துரத்தியது

பெண்ணாக பிறந்ததனால் நாமென்ன பிழை செய்தோம்

மானமென்னும் வலைப்பந்து எமையெல்லாம் பந்தாட

கலாச்சார நச்சுவட்டம் நமை வந்து துண்டாட

சமுகத்தின் போக்காக சாஸ்திரங்கள் உலாவர

காலத்தின் கயிற்றுக்குள் கட்டுண்டோம் அடிமைகளாய்

காலத்தின் கட்டாயம் கடமைகளை கையேற்க

குடும்பத்தின் சுமையெல்லாம் என்னோடு கூடவர

பொறுப்பென்னும் புதைக்குழியில் மாட்டிய யானை போல்

வாழ்க்கை சக்கரமோ சவாலோடு ஓடியது

தெருவெல்லாம் பருவமகன் வழி மறிக்க

வீட்டிற்குள் வறுமையென்னும் குடைபிடிக்க

வறுமைக்கு வெள்ளையடிக்க தொடங்கிவிட்டேன்

தொழில் என்னும் பாதையில் சவாலான பயணத்தை

அதிகாலை எழுந்தவுடன் அவசரமாய் புறப்பட்டு

அலுவலகம் வந்து விட்டால் மேலதிகாரி அடக்குமுறை

சக தொழிலாளி அறை கூவல் – அத்தனையும் சமாளித்து சாயங்காலம் 

ஆனவுடன் பேருந்தில் அடைப்பட்டு வீடு சென்று சேரும்வரை 

இரவோடும் பகலோடும் என்வாழ்க்கை – போராட 

புது விடியல் வருமென்று புத்துணர்வாய் காத்திருந்தேன்

காலத்தின் சூழ்நிலையில் கைதியாய் நான்மாற

கல்யாணம் எனும் பெயரில் வந்ததொரு கைவிலங்கு

நல்ல விலை கொடுத்து நாயை விற்பார் ஆனால்

அந்த நாயிடம் யோசனை கேட்பதில்லை

மானிடராய் பிறந்துவிட்ட மங்கையர் எம் இனமதுவும்

விலைபொருளாய் மாறிவிடும் சமுகத்தின் ஓட்டத்தில்

விழா எடுத்து விற்றுவிடும் விதிவந்து விளையாடும்

அச்சாணி இல்லாது அசைகின்ற தேர் போல

அப்படியும் இப்படியும் தட்டு தடுமாறி

வாழ்க்கையின் ஓட்டத்தில் வந்துவிட்டேன் ஒருமாறி

அன்று நான் குழந்தையாய் இன்று நான் தாயாக

காலம் என்னும் கடலதனில் கரை வந்து சேர்ந்தாலும்

ஆணி அரைந்தாற் போல் வாழ்க்கை சவாலது

வாட்டி வதைக்கின்றது

விதியோடு விளையாடி விண்செல்லும் ஆசையில்லை

மண்ணுக்குள் போகும் வரை மற்றவர்கள் தூற்றாத

மகளீராய் வாழ்ந்திடனும் மங்கையரே

மறுபிறவி வேண்டாமடா மானிடனே!

About the Author:

admin

Thirukumar Premakumar

Share This Entry

Array