16 Days Of Activism

பொது வாழ்வில் உள்ள பெண்களிற்கு ஆன்லைன் பாலியல் ரீதியான வன்முறையின் தாக்கம்.

admin

Dec 08, 2021

0

பெண்களிற்கு எதிரான வன்முறை என்பது, பெண்களிற்கு எதிராக முதன்மையாக அல்லது தனிப்பட்ட முறையில் நிகழ்த்தப்படும் வன்முறைச்செயல்களை மொத்தமாக குறிப்பிடுகின்றது.

பெண்கள், சிறுமிகளிற்கு எதிரான வன்முறைச்செயல்கள் உலகெங்கிலும் பரந்துபட்ட அளவில் ஒவ்வொரு நாளும் யாரோ ஒரு பெண்ணிற்கெதிராக இடம்பெற்ற வண்ணமே காணப்படுகின்றது. இவ்வன்முறைச்செயல்கள் பல்வேறு வகையில் வித்தியாசமான வயதுக்குழு மட்டங்களிற்கெதிராக இடம்பெறுகின்றன. உதாரணமாக தனிநபரினாலோ, வீட்டுச்சூழலிலோ, அரசினா லோ, சமூகத்தினாலோ, பணிபுரியும் இடத்திலோ அல்லது பாடசாலைச்சூழலிலோ பெண்கள் பல்வேறு வகைகளில் வன்முறைக்கு உள்ளாகி வருவது யாம் அனைவரும் அறிந்த ஓர் விடயமே.

இவ்வாறு பல்வேறுபட்ட வன்முறைச்செயல்களை நேருக்கு நேராக எதிர்கொண்ட பெண்ணினத்தவர் இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனினூடாக மறைமுகமான வகையில் பல்வேறு வகையான வன்முறைச்செயலிற்கு ஆளாகின்றனர். இதில் பாலியல் ரீதியான வன்முறையே பிரதானமானதாகக் காணப்படுகின்றது.

கடந்த இரு வருடங்களாக தொடர்ந்துகொண்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையாக கொரோனா வைரஸ் தொற்று காணப்படுகின்றது. இதன்மூலமாக பொதுமக்கள் பல்வேறுபட்ட இன்னல்களிற்கு முகங்கொடுத்தாலும் கூட ஓர் ஆறுதல் நிலையாக இந்நிலை பெற்றோர்களிற்கும் சக பெண்களிற்கும் காணப்பட்டது. காரணம் என்னவென்றால் அன்றாடம் பெண்கள் பணிபுரியும் இடத்திலோ பாடசாலை சூழலிலோ பேரூந்திலோ அல்லது ஏனைய இடங்களிலோ வன்முறையிற்கும் பாலியல் வல்லுறவிற்கும் உட்படுத்தப்பட்டனர். இவ்வைரஸ் தொற்று காரணமாக அனைவரும் தங்களுடைய பணிவிடங்களையும் பாடசாலை மாணவர்கள் அவர்களது பாடத்திட்டங்களை ஆன்லைன்ளிலும் Zoom தொழினுட்பத்தினூடாகவும் மேற்க்கொண்டு வந்தனர்.

இதன்மூலமாக பெண்கள் அன்றாடம் முகங்கொடுத்த பாலியல் ரீதியான வன்முறையிலிருந்து விடுபட்டதாக நினைத்து ஆறுதலடைந்தனர். ஆனால் பெண்கள் நேருக்கு நேராக முகங்கொடுத்த பாலியல் ரீதியான வன்முறைச்செயல்களைக் காட்டிலும் அதிகமாக ஆன்லைன் மூலமாக பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகின்றனர்.

இந்நவீன காலகட்டத்தில் வீட்டுக்கொரு தொலைபேசி என்ற நிலை மாறி நபருக்கொரு தொலைபேசி என்ற நிலை வந்துவிட்டது. இதனாலேயே அதிகளவிலான பெண்கள் ஆன்லைனினூடாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இன்றைய காலத்தில் பாடசாலை மாணவர்கள் Zoom தொழினுட்பத்தின் மூலமாக தங்களது கல்வியினைத் தொடரும் போது ஆசிரியர்களினாலோ அல்லது சக மாணவர்களினாலோ அதிகளவிலான பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். தனிப்பட்ட முறையில் பெண்களிற்கு பாலியல் ரீரியான புகைப்படங்களை ஆன்லைனில் சமூக வலைத்தளங்களினூடாக அனுப்புதல், பால்நிலை தொடர்பாக அவதூறான சொற்களைக் கதைத்தல், மேலும் பாடசாலை புள்ளித்திட்டங்களினை உயர்வாகப் போடுவேன் என்ற மிரட்டலினால் அந்தரங்க வீடியோ, புகைப்படங்களை அனுப்ப சொல்லிக் கேட்டல் போன்ற செயல்களினூடாக பெண் பாடசாலை மட்ட மாணவர்கள் ஆன்லைனூடாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர்.

மேலும் பொது வாழ்வில் வீட்டுப்பெண்கள் கூட ஆன்லைனின் ஊடாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். சமூக வலைத்தளங்களில் காணொளி, புகைப்படங்களினை வெளியிடும் போதோ அல்லது டிக்டாக் மூலமாக பல பெண்கள் தங்களது வாழ்வில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். சில சமயங்களில் பெண்கள் விளையாட்டுத்தனமாக தன்னுடைய தனிப்பட்ட விடயங்களை தொலைபேசியில் பதிவு செய்து வைத்திருக்கும் போது அது ஆன்லைன் மூலம் பிறிதொரு நபரினால் களவாடப்பட்டு அப்பெண் பல இன்னல்களை எதிர்நோக்கி இறுதியில் அவ் ஆடவனின் இச்சைக்கு அடிபணியும் செயலோ அல்லது தற்கொலை செய்து கொள்ளும் செயலோ இன்றும் நடந்து கொண்டுதான் வருகின்றன. உதாரணமாக:- இது நாம் அனைவரும் கேள்விப்பட்ட விடயமே – டொல்பின் கேம். ( Dolphin Game ) என்ற ஒரு ஆன்லைன் விளையாட்டின் மூலம் தொலைபேசியில் உள்ள அந்தரங்க விடயங்கள் உட்பட அனைத்து விடயங்களும் களவாடப்பட்டு அதன் ஊடாக பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைக்கும் தற்கொலைக்கும் தூண்டப்பட்ட காரியம் நாம் யாவரும் அறிந்ததே.

மேலும் இளம்வயதுப் பெண்களில் பாரியளவிலானோர் காதல் எனும் போர்வையினால் நாளாந்தம் யாரோ ஒருவரினால் பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகின்றனர். முகப்புத்தகத்தில் வேறொருவரினைப் போலவோ அல்லது இன்னும் ஒரு பெண்ணினைப் போலவோ கதைத்து நண்பர்களானவுடன் தங்களது புகைப்படங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இதன்மூலமாக பல சவால்களுக்கு முகங்கொடுத்து இறுதியில் பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகின்றனர்.

எனவே ஒரு கருத்துக்கணிப்பின் படி, பொதுவாழ்க்கையில் உள்ள பெண்கள் அதிகளவிலானோர் ஆன்லைன் பாலியல் ரீதியான வன்முறைக்கு நாளாந்தம் உட்பட்டு வந்துள்ளனர். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சாதாரண குடும்ப பெண்கள் மாத்திரமின்றி பாடசாலை மாணவர்கள் உட்பட அனைத்து வயது மட்ட பெண்குழுவினரும் வெவ்வேறு வகையான பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகி வருகின்றனர் என்பது தெட்டத்தெளிவான உண்மையே. நான்கு சுவர்களிற்குள்ளும் இருக்கும் போதே ஒரு பெண் எங்கோ இருக்கும் ஒரு நபரினால் பாலியல் ரீதியான வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதுவே இன்றைய நிஜம். வளர்ந்து வரும் காலகட்டமானது பெண்ணானவள் நேருக்கு நேர் பாலியல் வன்முறைக்கு ஆளாகிய காலத்தினை விடுத்து ஆன்லைன் மூலமாக பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகிக்கொண்டு வருகின்றனர். இறுதியில் இவ்விடயம் ஒரு பெண்ணிணை மனநிலை ரீதியாக பாதித்து அவளினை தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டுகின்றது.

ஆன்லைன் மூலமாக பல பெண்கள் எதிர்நோக்கும் இன்றைய சவாலாக இவ் பாலியல் ரீதியான வன்முறையே காணப்படுகின்றது. இதிலிருந்து மீண்டு வர வழி தெரியாமல் மீண்டும் மீண்டும் அதன் உள்ளே சென்று மாய்ந்து கொண்டும் சீரழிவிற்கும் உள்ளாகி வருகின்றது இன்றைய பெண் சமுதாயம்.

எழுதியவர் :
உதயகுமார் திலக்சிகா
இளங்கலை மாணவி
களனிப் பல்கலைக்கழகம்

About the Author:

admin

Thirukumar Premakumar

Share This Entry