Blog

மனித உரிமைப் பரிந்துரைப்பாளர்களாக இளைஞர்கள்

Dec 10, 2021

0

‘இலங்கையர் ஒருவர் பாகிஸ்தானில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு அடித்துக்கொல்லப்பட்டார்’ (BBC News), ‘இந்தியாவில் உத்தரபிரதேசம் மனித உரிமை மீறல்களின் மையமாக, தொடர்ச்சியாக 3வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது’ (National Human Rights Commission, India (NHRC). ‘மியன்மாரில் இராணுவம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்துப் போராடியதற்காக கைது செய்யப்பட்ட பெண்கள், தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் கூறுகின்றனர்’ (BBC News) – இவை போன்ற மனித உரிமை மீறல்களை செய்திகளாக கேள்விப்படுகிறோம். இவற்றை விடவும் வெளி உலகிற்கு தெரிய வராமலே பலர் மனித உரிமை மீறல்களால் அவதிப்படுகின்றமையை மறுக்க முடியாது.அதிலும் குறிப்பாக கோவிட் தொற்றுக் காலத்தில் தனிமைப்படுத்தல் போன்ற மனித உரிமைக் கட்டுப்பாடுகளுக்கும்  பாதகமான மனநல விளைவுகளுக்கும்  இடையே ஒரு வலுவான தொடர்பு ஆவணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில் மனித உரிமை பற்றிய அடிப்படை புரிதலை அனைவரும் பெற்றிருப்பதை உறுதி செய்வதுடன், இவற்றிற்கான தீர்வுகள் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.

மனித உரிமை என்பது இனம், பால், வயது, நாடு, நிறம் போன்ற பாரபட்சங்களைக் கடந்து அனைவருக்கும் பொதுவான  சர்வதேச ரீதியான உரிமைகளாக இருந்தபோதும், வரலாற்றின் சுவடுகளில் மனித உரிமை மீறல்கள்  நடந்துள்ளதுடன், தற்போதும் மனித கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர்களை வேலைக்கமர்த்தல், அடிமைப்படுத்தல், நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகள், சுகாதாரம், தண்ணீர், உணவு மற்றும் சமூக பாதுகாப்புக்கான அணுகல் இல்லாமை போன்ற மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இத்தகைய உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தி மனித உரிமைகளைப்  பாதுகாக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையினால் மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம் (Universal Declaration of Human Rights – UDHR )  1948 இல் உருவாக்கப்பட்டது. இதுவே மனித உரிமை காப்பிற்கான முதலாவது சர்வதேச பொறிமுறையாகக் கருதப்படுகிறது. பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும்  சிவில், அரசியல் உரிமைகளாக மனித உரிமைகள் இங்கு வகைப்படுத்தப்படுள்ளதுடன் வேலை,  கல்விக்கான உரிமை, விரும்பிய இனம், மதத்தை பின்பற்றும் உரிமை  போன்றன பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளாகவும், அடிமைத்தனம் மற்றும் சித்திரவதையில் இருந்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் போன்றன   சிவில், அரசியல் உரிமைகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தைத் தொடர்ந்து மனித உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு உலகளாவிய மற்றும் நாடுகள் சார்ந்து சமவாயங்கள், பிரகடனங்கள், அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இருந்த போதிலும்  இன்றும் மனித உரிமை மீறல்களின் மத்தியில் பல மனிதர்கள் இன்னல்மிக்க வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

எனவே, இத்தகைய சூழலில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டும், உள்ளூர் மட்டத்திலோ / தேசிய ரீதியாகவோ / சர்வதேச ரீதியாகவோ மனித உரிமைகள் சார் பிரச்சனைகளின் அடிப்படையை அறிந்து நீண்டகாலம் நிலைத்து நிற்கக்கூடிய தீர்வுகளைப் பெறவும் மாற்றம் தேவைப்படுகிறது. அத்தகைய மாற்றத்திற்கான அழைப்பாகவே  பரிந்துரைப்பு (Advocacy) அமைகிறது. நாட்டின் அபிவிருத்தியின் அனைத்து அம்சங்களிலும் உரிமைகளை பிரதானப்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வையும் புரிதலையும் உருவாக்க பரிந்துரைப்பு தேவைப்படுகிறது. இது  தலைவர்கள் ,தீர்மானம் எடுப்பவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தல், தேசிய கொள்கைகளில் செல்வாக்கு செலுத்தல், தேசிய, சர்வதேச மனித உரிமை பொறிமுறைகளுக்குள் தேவையான  மாற்றங்களை ஏற்படுத்தல், இளைஞர்களுடன் இணைந்து செயலாற்றல்  போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. 

இத்தகைய  பரிந்துரைப்பில்  பரிந்துரைப்பாளராக (Advocates)  எவரும் செயற்பட முடிந்த போதும், இதில் குறிப்பாக இளைஞர்களின் பங்கேற்பு அவசியமாகிறது. காரணம் இளைஞர்கள்  வளர்ந்து வரும் வலுவான  குடித்தொகையாகவும், உலக சனத்தொகையில் 25% ஆனவர்களாவும்  (New tactics in human rights,2014) இருப்பதுடன், அதில் ஒரு பகுதியினர் செயலூக்கமும், சமூக மாற்றம் குறித்த அவா உடையவர்களாகவும், அதற்கு நேர்மாறாக மற்றைய பகுதியினர்  தவறாக  வழி நடத்தப்படக்கூடியவர்களாவும்  காணப்படுகின்றனர். எனவே,  மனித உரிமைகளை மேம்படுத்தவும் , நல் சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும்   இளைஞர்களை வலுப்படுத்துதல் அவசியமாகிறது. இதன் மூலம் அவர்கள் பரிந்துரைப்பாளர்களாக செயற்பட வழி அமைக்கப்படுகிறது. அவர்களின்  திறன், ஊக்கம் மற்றும் அவர்களுக்கான வாய்ப்புக்களை மேம்படுத்தல் (Capacity, Motivation and Opportunity) மூலம் இளைஞர் பரிந்துரைப்பு (Youth advocacy) சாத்தியமாகின்றது. 

               இங்கு  திறன் என்பது இளைஞர்கள் திறம்பட பங்கேற்க தேவையான அறிவு, திறன்கள், அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளையும், உந்துதல் என்பது தனிப்பட்ட இளைஞர்கள் பங்கேற்கும் விருப்பம் அல்லது விருப்பம், மேலும் நீண்ட காலத்திற்கான  ஈடுபாடு அல்லது செயலில் ஈடுபடுவதையும், வாய்ப்பு என்பது இளைஞர்கள் திறம்பட பங்கேற்கக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் குறிக்கிறது. எனவே, இளைஞர்களின் தொடர்பாடல் திறன், தலைமைத்துவ பண்பு, தொடர்பாடல் வலையமைப்பு, தொழிநுட்ப திறன் போன்றவற்றை மேம்படுத்தி ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்களை ‘Youth Advocates’ ஆக்க முடிவதுடன், இதன் மூலம் சமூகத்தில் மனித உரிமை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்களை தயார்படுத்த முடிகிறது. 

தற்போதைய கோவிட் தொற்றுக் காலத்தில்  இளைஞர்களிடையே  தற்கொலை முயற்சிகள் அதிகரித்துள்ளமையை  (Center for Disease Control and Prevention data) இனங்காணமுடிகிறது.  ‘என்ன வாழ்க்கை இது?’ என்ற விரக்தியில் உயிரை மாய்ப்பவர்களாக இளைய சமுதாயம் உருமாறி வருவது வருத்தத்திற்குரியது. அவற்றை தடுக்க முடியாமையை எண்ணி வருந்துவதை விட,  மனித உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களால் சமூகத்தில் மனித உரிமை காப்பாளர்களாகச் செயற்பட முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள்  விதைப்பது அவசியமாகிறது.

About the Author:

Share This Entry

Array