Sri Lanka

இலங்கையில் 2015–2019 போருக்குப் பின்னரான காலப்பகுதியில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் முயற்சிகள்: கற்றுக்கொண்ட பாடங்கள்

Saranya

Nov 21, 2022

0

நூல் பற்றிய மதிப்புரை

ஜனநாயகம் என்பது இன்று பலராலும் பகுப்பாய்வு செய்யும் தலைப்பாக மாறியுள்ளது. ஜனநாயகமானது ஒரு நிர்வாக அமைப்பு மட்டுமல்ல, அது ஒரு சித்தாந்தமாகவும் கலாசாரத்தின் ஒரு வடிவமாகவும் வாழ்க்கை மற்றும் சிந்தனை முறையாகவும் விளக்கப்படுகின்றது. இது பல்வேறு சூழல்களில் பல பரிமாணங்கள் மற்றும் பல்வேறு வடிவங்களுடன் தொடர்ந்து உருவாகி வரும் கருத்தாகும். அந்தவகையில் இலங்கையில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பல், வலுவூட்டல் மற்றும் நிலைப்படுத்தல் தொடர்பான விவாதங்கள் நீண்ட காலமாக கலந்துரையாடப்பட்டு வருகின்றன. சிவில் யுத்தத்தின் பின்னர் ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் நிலைப்பாட்டில் இலங்கை பல சவால்களை எதிர்கொண்டது எனலாம்.    

மேற்கண்ட விடயங்களை மேலும் ஆய்வு செய்யும் விதமாக மூலோபாயக் கற்கைகளுக்கான பிராந்திய நிலையத்தினால் (RCSS) “இலங்கையில் 2015–2019 போருக்குப் பின்னரான காலப்பகுதியில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் முயற்சிகள்: கற்றுக்கொண்ட பாடங்கள்” (Post-war Democracy Building Initiatives in Sri Lanka 2015 – 2019: Lessons Learned) என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவ் ஆய்விற்கு பல ஆய்வாளர்களின் பங்களிப்பு இருந்ததுடன், தென் கரோலின் பல்கலைக்கழகம் இவ் ஆய்விற்கு நிதியுதவியும் வழங்கியுள்ளது. இலங்கையில் 2015-2019 வரையான காலப்பகுதியானது தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் (National Unity Government) ஒரு தனித்துவமான ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொண்ட காலமாகவும் சவால்கள் பலவற்றை சந்தித்த காலமாகவும் காணப்படுகின்றது. இது போருக்குப் பிந்தைய சூழலில் முக்கியமான முதல் அரசியல் சீர்திருத்த முன்முயற்சியைக் குறித்தது. மேலும், முதன்முறையில், பாரம்பரியமாக அரசியல் போட்டியாளர்களாக இருந்த இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் 2015இல் அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் கட்சிகளாக மாறியது. இந்தப் பின்னணியில், ஆரம்பத்தில் அரசியல் சீர்திருத்தங்களுக்கு மக்கள் ஆதரவு இருந்த போதிலும், 2015-2019 ஆண்டு ஜனநாயக சீர்திருத்த நடுப்பகுதியில் ஏன் அவை நிறுத்தப்பட்டது என்பதை ஆராயும் நோக்கிலேயே இவ் ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் ஆய்வானது கோட்பாட்டு ரீதியான மற்றும் பகுப்பாய்வு ஆய்வாகும். இவ் ஆய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புவியியல் பகுதிகளில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் கோட்பாட்டு ரீதியான இலக்கிய மீளாய்விற்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள், கொள்கை அறிக்கைகள், அரசியல் மற்றும் சிவில் தலைவர்களின் அறிவிப்புகள், பாராளுமன்ற, பொது மற்றும் ஊடக விவாதங்கள் மற்றும் பல்வேறு குழுக்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றிலிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வாய்வில் தனிநபர் நேர்காணல்கள் மற்றும் குழுக்கலந்துரையாடல்கள் மூலமும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அரசியல் தலைமை அதிகாரிகள், நம்பிக்கை குழுக்கள், சிவில் மற்றும் அரசியல் ஆர்வலர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் போன்றோரிடம் நேர்காணல்கள் மேற்கொள்ளப்பட்டன. வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய பிரதேசங்கள் என அனைத்து மாவட்டங்களிலும் நேர்காணலுக்கான பங்கேற்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

ஆய்வறிக்கையானது ஒன்பது அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இவ் அத்தியாயங்களின் முக்கிய அம்சங்களை நோக்கினால், முதல் மற்றும் இறுதி அத்தியாயங்கள் அறிமுகம் மற்றும் முடிவுரையாக காணப்படுகின்றது. இரண்டாவது அத்தியாயமானது 2009-2014 காலகட்டத்தில் நாட்டில் இடம்பெற்ற அரசியல் உரையாடலில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் நிகழ்ச்சி நிரலை முன்னுக்கு கொண்டு வந்த ஆட்சியின் சர்வாதிகார போக்குகள், அரசியல் ஊழல்கள் போன்றவற்றை பற்றி எடுத்துக்காட்டுகிறது.

மூன்றாவது அத்தியாயமானது தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளின் முக்கிய கூறுகளையும் அவற்றின் பரிணாம வளர்ச்சியையும் பற்றி குறிப்பிடுகின்றது. நான்காவது அத்தியாயமானது ஜனநாயகமயமாக்கல் செயல்முறை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பதில்களில் செல்வாக்கு செலுத்தும் வெளி வகிபங்காளர்கள் ஆற்றிய பங்கு பற்றி கவனம் செலுத்துகிறது. தேசிய நல்லிணக்கத்தை அடைவதற்கான வழியில் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் எடுத்த முன்முயற்சி ஐந்தாவது அத்தியாயத்தின் நோக்கத்தை அடையாளம் காட்டுகின்றது. தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் உரையாடலில் முக்கியமான காரணியாக சிவில் சமூகமும் அதன் தலையீடும் காணப்பட்டது. அந்தவகையில் ஜனாதிபதித் தேர்தலின் போதும் அதற்குப் பின்னரும் சிவில் சமூகத்தின் பங்கு தொடர்பில் ஆறாவது அத்தியாயம் கவனம் செலுத்தியுள்ளது. 2015-2019 காலகட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் அரசியல் முன்னுரிமைகள் மாற்றம் பற்றி அத்தியாயம் ஏழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எட்டாவது அத்தியாயத்தில் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பதவிக்காலத்தின் பிற்பகுதியில் ஜனநாயகத்திற்கான சமூக மற்றும் அரசியல் கூட்டணிகளின் நெருக்கடி மற்றும் சிதைவு பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இவ் ஆய்வறிக்கையின் முடிவுரையில், 2015-2019 காலப்பகுதியில் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பிய அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட முக்கிய பாடங்களை அடையாளம் காணுவதை பற்றி தெளிவுபடுத்தியுள்ளது. 

இலங்கை அரசியல் வரலாற்றில் 2015ஆம் ஆண்டானது முக்கிய பல மாற்றங்களை ஏற்படுத்திய ஆண்டாகும். புதிய அரசியலமைப்பு உருவாக்க கலந்துரையாடல்கள், ஜனநாயக நிலைப்பாடு, அரசியலமைப்பை வலுப்படுத்தல், அரசியலலைப்பு சீர்திருத்தங்களை உருவாக்கல், சர்வதேச ரீதியான பிரதிபலிப்புக்கள், சர்வதேச பிரதிநிதிகள் பலரின் வருகை போன்ற பல விடயங்கள் இலங்கை அரசியலில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 2009ஆம் ஆண்டு போரின் முடிவில் இலங்கை காலனித்துவ அரசியல் வரலாற்றுப் பரிணாமத்தில் ஒரு தீர்க்கமான வரலாற்றுக் கட்டத்தில் இருந்தது. மேலும் இலங்கை அடைந்த எதிர்மறையான சமாதானத்திலிருந்து ஒரு நேர்மறையான சமாதானத்தை நோக்கி நகர்வதற்கான அரசியல் சீர்திருத்தங்களை தொடர்வதற்கான வாய்ப்பையும் பெற்றிருந்தது எனலாம். 

இலங்கையின் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் ஜனநாயக சீர்திருத்தங்களை ஆரம்பித்து அனைவரையும் உள்ளடக்கிய வலுவான அரசை உருவாக்குவதே அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கத்திற்கு முக்கிய பொறுப்பாக இருந்தது. இருப்பினும், சமநிலைத் தடைகளை அகற்றி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிப்பதே அவ் அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது. இவ்வாறான காரணிகளால் ஆட்சி மிகவும் பாதுகாப்பதற்றதாகவும் ஜனநாயக சீர்திருத்தங்களை அமைப்பதில் அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. இவ்வாறான காரணிகளாலேயே போருக்குப் பிந்தைய இலங்கைக்கான பாதுகாப்புக் கொள்கையை மறுசீரமைப்பதற்கும் வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்பைக் கட்டியெழுப்பும் பொறிமுறைகளை மறுசீரமைப்பதற்கான தேவை 2015ஆம் ஆண்டளவில் அதிகமாக உணரப்பட்டது.  

2015ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் கருத்துப்படி, நாட்டில் நல்லாட்சியை உறுதிசெய்து ஜனநாயகத்தை சிறப்பாக கட்டியெழுப்பும் நோக்கம் சிறப்பானதாகும். மேலும், தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் நிகழ்ச்சி நிரலின் முக்கிய அரசியல் கூறுகளாக 100 நாள் திட்டம், 19ஆம் சீர்திருத்தம், ஊடக சுதந்திரம், தகவலறியும் உரிமை, புதிய அரசியலமைப்பு உருவாக்கம், அரசியலமைப்பு சபையின் மறுசீரமைப்பு, மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்துதல், பிரதிநிதித்துவ அமைப்புகளை வலுப்படுத்துதல், மீள்நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதி, இலஞ்ச ஊழலை எதிர்த்தல் போன்ற பல விடயங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேற்குறித்த விடயங்கள் பற்றி முழுமையாகவும் தெளிவாகவும் இவ் ஆய்வறிக்கையின் அத்தியாயங்களில் கலந்துரையாடப்பட்டுள்ளன.    

யுத்தத்தின் பின்னரான ஆட்சிகளின் ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளுடன் ஒப்பிடுகையில், தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகள் தனித்துவமானவையாக இருப்பினும், அச் செயன்முறையில் பலவீனங்களும் காணப்பட்டதை நாம் மறுக்கவியலாது. இலங்கையில்  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிந்தமை ஜனநாயகத்திற்கு பெரியதொரு சவாலாக காணப்பட்;டது. அந்தவலையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க முடியாமை, கடந்த ஆட்சியில் காணப்பட்ட ஊழல் மோசடிகளை சரிசெய்ய தவறியமை, இலங்கையின் நலனுக்காக பொருளாதாரத்தை உயர்த்துவதில் ஏற்பட்ட தோல்வி, அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுகளில் முன்னேற்றமில்லாமை, நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதில் ஏற்பட்ட தோல்வி போன்ற விடயங்கள் 2015-2019 காலப்பகுதியில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டின் குறைபாடுகளாக குறிப்பிட முடியும். இது குறித்த உதாரணங்கள் மற்றும் பகுப்பாய்வு இவ் ஆய்வறிக்கையில் கலந்துரையாடப்பட்டமை சிறப்பானதாகும்.

இக்காலப்பகுதியில் இலங்கையில் ஜனநாயக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வெளி செயற்பாட்டாளர்களின் உறவு அதிகம் காணப்பட்டது. அந்தவகையில் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கமானது அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல முக்கிய சர்வதேச நிறுவனங்களுடனும் நாடுகளுடனும் தனது உறவினை வலுப்படுத்திக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டது. 2015-2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் கீழ் தேசிய நல்லிணக்கம் (National Reconciliation) என்பது முக்கிய கருப்பொருளாகவும் தேவையாகவும் காணப்பட்டது. இலங்கையில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவது ஒரு சிக்கலான செயல்முறையாகும். அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் சில முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தன.

இருப்பினும், இனங்களாகப் பிரிந்துள்ள அரசியல் குழுக்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் மற்றும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை அரசியலுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் என்பன தேசிய நல்லிணக்கத்தின் வெற்றிக்கு முக்கிய தடைகளாக இருந்தமை மறுக்கவியலாத உண்மையாகும். மேலும் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது இலங்கை மக்கள் மத்தியில் பாரியதொரு அதிர்ச்சியை மாத்திரமன்றி அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலில் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியது. மேலும் இச் சம்பவம் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் இன சகவாழ்வுக்கான நிலைப்பாட்டையும் கேள்விக்குறியாக்கியது. இக் குறைபாடுகள் நல்லிணக்கத்தின் முன்னேற்றத்தில் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தியது. தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் தனது அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மற்றொரு செல்வாக்கற்ற அரசாங்கமாக மாறிய அம்சங்கள் பற்றியும் இவ் அறிக்கை சிறப்பாக ஆராய்ந்துள்ளது.

சிவில் சமூகமென்பது ஒரு நாட்டின் பாதுகாவலனைப் போன்றது. 2015-2019 காலப்பகுதியில் சிவில் சமூகத்தின் பெரும் பகுதியினர் அரசாங்கத்தில் இணைந்து செயற்பட்டதை அவதானிக்ககூடியதாக உள்ளது. இக் காலத்தில் சிவில் சமூகமானது இலங்கையில் ஜனநாயகத்தை ஒருங்கிணைப்பதிலும் பலப்படுத்துவதிலும் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது. சிவில் சமூகத்தின் பங்களிப்பு குறித்தும் அதன் விழுமியங்கள் குறுகிய தனிப்பட்ட நலன்களைக் கடந்து சமூக நலன்களை நெறிமுறையாக ஏற்றுக்கொள்வது குறித்தும் இவ் ஆய்வறிக்கை கலந்துரையாடியுள்ளது. மேலும் இவ் அறிக்கைக்கு சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் பகுப்பாய்வின் அடிப்படையில் முக்கிய சில கற்றுக்கொண்ட பாடங்கள் பற்றிய விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு பாரிய ஆலோசணைகளின்றி உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டமை, ஜனநாயக சீர்திருத்த நிகழ்ச்சி நிரல், ஜனநாயக உரிமைகளுக்கான தற்போதைய சமூகப் போராட்டங்கள் மற்றும் நடைமுறைகளுடன் தொடர்பில்லாமல் இருந்தமை, இது சீர்திருத்த திட்டங்களுக்கு மக்கள் ஆதரவையும் சட்டப்பூர்வத்தையும் பெறத் தவறியமை, இக்காலத்தில் இருந்த அரசியல் கூட்டணிகள் இடையே மோதல்கள், தகராறுகள் மற்றும் பிளவுகள் காணப்பட்டமை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் கீழ் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதில் இலங்கையின் அனுபவங்கள் பல படிப்பினைகளை எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. போருக்குப் பின்னரான சூழலில் தேசிய நல்லிணக்கம், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, அனைவரையும் உள்ளடக்கிய அரசை கட்டியெழுப்புதல் என்பன ஜனநாயகக் கட்டமைப்பில் முக்கிய விடயங்கள் என உணர்ந்து செயற்பட்ட 2015-2019 காலகட்டத்தின் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கமானது தனது பலவீனங்களால் எதிர்கொண்ட சவால்களை பற்றியும் ஜனநாயக கட்டியெழுப்பலுக்கு செய்யக்கூடிய மற்றும் செய்யகூடாத விடயங்கள் பற்றிய அனுபவத்தை வழங்குவதுடன் அது எதிர்கால இலங்கையின் ஜனநாயக நிலைப்பாட்டிற்கு உறுதுணையாகவும் காணப்படுகின்றது.

About the Author:

Saranya

Yalini Saranya

Share This Entry

Array