Single Project Image

The story of Ceylon Africans

 

சிலோன் ஆபிரிக்க மக்களின் வாழ்வியல்

(மருகிப்போன சிலோன் ஆபிரிக்க மக்களின் வாழ்வியல் வரலாறு)

பல்லினத் தன்மையினைக் கொண்ட இலங்கையில் 19 இனங்களுக்குள் ஒன்றாக சிலோன் ஆபிரிக்க இனமும் கொள்ளப்படுகின்றது. சமூகத்தில் பரவலாக அறியப்படாத மற்றும் புறமொதுக்குதலுக்கு உள்ளாகும் ஒரு இனக் குழுமமாக இவர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் இலங்கையில் மன்னார்> நீர்கொழும்பு> மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை முதலான இடங்களில் பரவி வாழ்கின்றனர். காலனித்துவத்துவக் காலத்தில் சிறு சிறு வேலைகளைச் செய்வதற்காக மேற்கு ஆபிரிக்காவின் ஐந்து நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டு இங்கு குடியமர்த்தப்பட்டவர்களே இவ் இன மக்களாக கொள்ளப்படுகின்றனர். இவர்களது குடிவரவு இரு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றது.

  1. 1505 ஆம் ஆண்டளவில் போரத்துக்கேயரின் காலத்தில் சிந்து மன்னர்களுக்கு எதிராக போராட, பாந்து அடிமைகளாக காணப்பட்ட அவர்களை தொழிலாளர்கள் மற்றும் வீரர்களாக அழைத்து வந்தனர்.
    2. 1815 ஆம் ஆண்டளவில் கண்டிய கலவரத்தின் போது பிரித்தாணியப் படைகளில் பணிபுரியவென வரவழைக்கப்பட்டனர்.

இதன் போது குடும்பம் குடும்பமாக வரவழைக்கப்பட்டமையால் அவர்களது நிலைத்திருப்பின் நீடித்த தன்மை ஏற்பட்டது. இவர்களில் சிலர் திரும்பி சொந்த நாட்டிற்குச் சென்ற போதும் ஒரு சில குழுவினர் இங்கேயே தங்கிவிட்டிருந்தார்கள். இங்கேயே தங்கிய மேற்கு ஆபிரிக்க மக்களின் வழித்தோன்றல்களே இன்று “இலங்கை ஆபிரிக்கர்களாக அறியப்படுகின்றனர். 1817 ஆம் ஆண்டளவில் ராஜ நாயக்க எனும் மன்னனால் தொழில்துறைகள் வழங்கப்பட்டு நிரந்தரக் குடிகளானார்கள். ஆரம்பத்தில் சட்டபூர்வமாக குடிமக்களாகக் கருதப்படாத போதும் இன்று குடியுரிமையுள்ள பிரஜையாகக் கொள்ளப்படுகின்றனர். அது மட்டுமல்லாது ஏனைய குடிமக்களைப் போலவே அரசியல் சமூக பொருளாதார ரீதியான உரிமைகள் பெற்று வாழ்கின்றனர்.
மன்னார் சிராம்பியடியினை மையமாகக் கொண்ட பகுதியில், 80 தொடக்கம் 90 வரையான மக்களினை உள்ளடக்கிய 22 குடும்பங்கள் காணப்படுகின்றன. தமது பூர்வீக நாட்டு மொழியினை(போர்த்துக்கேசு) பயன்படுத்துவதில் விருப்பம் கொண்டிருந்த போதும் கல்வி மற்றும் ஏனைய சமூகத் தேவைகளின் பொருட்டு சுதேச மொழியினைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சிங்கள மொழியினையே அதிகம் பேசுவதுடன் தமிழ் மொழி தொடர்பான புலமையும் கொண்டுள்ளனர். தமது சுதேச கலாசார நிகழ்வுகளின் போது தமது பூர்வீக மொழியிலான பாடல்களினைக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக தம் கலாசார நிகழ்வுகளின் போது ஆபிரிக்க கிரியோல் மற்றும் இலங்கை ஆபிரிக்க மஞ்சா மொழிகளிலேயே பாடல்களைப் பாடுகின்றனர். இது அவர்களது தனித்துவ அடையாளமாகக் காணப்பட்ட போதும் அதனை நடைமுறை வாழ்க்கை முறையில் பிரயோகிப்பதில் பல இடர்பாடுகளை எதிர் நோக்குகின்றனர்.
இலங்கையின் கலாசார கூறுகளில் ஒன்றான நடனக் கலையில் தமக்கான தனித்துவமான இடத்தினைக் கொண்டு காணப்படுகின்றனர். பைலா முறையுடன் காஃப்ரிங்கனா மற்றும் மங்கா முதலான கலாசார நடனப்பாணிகளை தமக்கே உரிய சிறப்பம்சமாகக் கொண்டுள்ளனர். இலங்கையின் கலாசார நிகழ்வுகளின் வரிகையில் இவர்களின் நடனம் பிரதான இடம்வகிக்கின்றது. இந் நடனம் வட்ட வடிவமாக சுழன்று சுழன்று ஒரு தாளக் கட்டில் கால்கள் குதித்தொழுவது பார்பதற்கு ரம்மியமான உணர்வினை தருகின்றது. அத்துடன் பைலா இசையில் இமைந்த மெட்டுக்கள் உற்சாகமளிக்கின்றன. உள்ளுர ஒரு விதமான சோக இழைகளால் பின்னப்பட்டிருந்த போதும் அவற்றில் உள்ள “துள்ளல் உடல் மொழிகள்” ஆட்டக்காரரினுள் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்தி நடனத்தை அழகாகக் கொண்டு வருகின்றது.
இவர்களது பூர்வீக மக்களாக> ஆபிரிக்க நாட்டு ஏரிக்கரையில் உள்ள பூர்வீகக் குடிகள் காணப்படுகின்றனர். தற்போதுள்ள இலங்கை ஆபிரிக்கர்களான இவர்கள் தமது பூர்வீக நாட்டிற்குச் சென்று பார்வையிட்டு வருவதில் ஆர்வம் காட்டுகின்றார்கள். வாழ்நாளில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் தம் பூர்வீக நாடான ஆபிரிக்காவிற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். ஆனாலும் இலங்கையினையே தமது தாய்நாடாக கருதுவதுடன் ஆபிரிக்காவிற்குச் சென்று நிரந்தரமாக வாழ்வதையும் அவர்கள் விரும்பவில்லை. ஆனாலும் இலங்கையில் ஒரு சில இடர்பாடுகளை இவர்கள் தமது நாளாந்த வாழ்க்கை முறையில் எதிர் நோக்க வேண்டியுள்ளது.
இவர்களது அடிப்படை வாழ்வாதாரமாக இவர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். உதாரணமாக:- நூடில்ஸ் கொம்பெனி, புகையிலை பதநிடும் நிறுவனம் போன்றவற்றிலும், கடைகளிலும் பெரும்பாலானவர்கள் வேலை செய்கின்றார்கள். சிலர் உயர் கல்வி கற்று அரசாங்க அலுவலகங்களிலும் பணிபுரிகின்றனர். மற்றும் வீட்டிலேயே கோழி வளர்ப்பு மற்றும் வீட்டுத் தோட்டம் மூலம் தம் அன்றாட ஜீவநோபாயத்தினை வடிவமைத்துக் கொள்கின்றார்கள். பொதுவாக தொழில்துறைகளின் நிமித்தம் பெரும்பாலானவர்கள் தம் சொந்த இடங்களில் இருந்து தூர இடங்களிலேயே தனித்தோ குழுவாகவோ வாழ்ந்து வருகின்றனர்.
அரசியல் ரீதியாக சட்டபூர்வமான உரிமையினைக் கொண்டிருக்கின்றார்கள். சாதாரண குடிமக்களுக்கு உரிய அனைத்து விதமான உரிமைகளையும் பெற்றுக் காணப்படுகின்றனர். அவர்களும் உள்நாட்டுக் குடிமக்களாகக் கொள்ளப்பட்ட போதும் சமூக ரீதியாக வெளித் தோற்றத்தினை மையமாகக் கொண்டு புறமொதுக்கப்படுகின்றனர். குறிப்பாக புத்தளம் கலாசார நிகழ்வுகளுக்காக ஆற்றுகை மேற்கொள்ள இவர்கள் அழைக்கப்பட்ட போதும், கலாசார நிகழ்வு ஆற்றுகை செய்வோருக்காக வழங்கப்படும், அடையாள அட்டை இன்றுவரை இவர்களுக்கு வழங்கப்படவில்லை. அத்துடன் குறித்த கலையினது அபிவிருத்திக்கான செயற்பாடுகள் மற்றும் உதவிகளும் இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை. சில அரசியல்வாதிகள் இவர்களுக்கான நடனத்திற்கு வேண்டிய இசைக் கருவிகள் வழங்கப்பட்ட போதும் அது அவர்களுக்கு பொருத்தம் இல்லாத இசைக் கருவிகளாக அமைந்தது.
அது மட்டுமல்லாது அரசாங்கத்தினால் அவர்களது அடிப்படை தேவைகள் சார்ந்த தேவைகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக வீட்டு வசதிகள்> குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் போன்றனவற்றினை தாமாக நிறைவேற்றியுள்ளனர். சில சந்தர்பங்களில் அரசு சார்பற்ற மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறிப்பாக ஜேர்மன் தூதரகத்தினால் வீட்டுமனைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ் அடிப்படையிலேயே தமது வாழ்கை முறையினை மேற்கொள்வதற்கான வதிவிடவசதியினைக் கொண்டிகின்றனர். வீட்டினை சுத்தமாகவும் சுகாதாரம் நிறைந்த இடமாக பேணுவதில் அதிக அக்கறை கொள்கின்றனர்.
கோழி> நாய்> பூனை மற்றும் நன்நீர் மீன் போன்றவற்றினை முயையே தமது ஜீவனோபாயம்> காவல் மற்றும் பொழுதுபோக்கு காரணிகளின் அடிப்படையில் வளர்க்கின்றதுடன்> உயிரினங்களுடன் ஒன்றித்த வாழ்வியலை கடைப்பிடிக்கின்றனர். அத்துடன் வீட்டுத்தோட்டம், பூந்தோட்டம் போன்றனவற்றினை பேணுவதன் மூலமும் சூழலுடன் ஒன்றிணைந்த வாழ்வினை மேற்கொள்கின்றனர்.
அவர்களது பூர்விக நாட்டு உணவாக கிழங்கு, முட்டை,தானியம் போன்றன காணப்பட்ட போதும் அவர்கள் சுதேச நாட்டு வழக்க முறைகளுக்கு அமைய “சோறு கறியினையே” பிரதான உணவாகக் கொள்கின்றனர். அத்துடன் வீட்டில் கோழிகளை வளர்த்து அதிலிருந்து பெறும் உணவுகளைப் பயன்படுத்திக் கொள்வதுடன்> வாழ்வாதாரமாகவும் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
சூழல் ரீதியான சரியான புரிதலுடன் சுமூகமான வாழ்வாதாரத்தினைப் பேணிக் கொள்கின்றனர். குறிப்பாக ஆச்சி> அக்கா என உறவுகளை அயலவர்களாகக் கொண்டிருப்பதுடன்> ஏனைய இனக் குழுமங்களுடனும் சேர்ந்து வாழ்கின்றனர். குறிப்பாக அரசியல் பொது நிறுவனங்களினால் புறமொதுக்கப்பபட்டுவந்தாலும்> தம்மைச் சுழவுள்ள ஏனைய சமூகக் கட்டமைப்புடனும், இனக் குழுக்களுடனும் சுமூகமான உறவுகளைப் பேணிவருகின்றனர். உதாரணமாக:-நான் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது அயல் வீட்டில் இருந்த சிங்கள இனக் குழுவினைச் சேர்ந்த பெண் ஒருவர் சாதாரண பாணியில் உரையாடிவிட்டுச் சென்றதனை அவதானிக்க முடிந்தது.
அவர்களுக்கான தனியான உடையமைவு> அலங்கார முறைகள்> அணிகலன்கள் முறை போன்றவற்றினை பிரத்தியோகமாகக் கொண்டுள்ளார்கள். சாதாரண நாட்களில் இலங்கையர்களுக்கு உரிய ஆடைகளை அணிந்த போதும் சில கலாசார நிகழ்வுகளின் போது தமது பிரத்தியோகமான முறையினைக் கையாள்கின்றனர். குறிப்பாக தம் இனக் குழுவினுள்ளான திருமண நிகழ்வுகளின் போதும்> கலாசார சடங்கு முறைகளின் போதும்> நடன நிகழ்வுகளிலும் அணியவென பிரத்தியோகமான உடைகளைக் கொண்டு காணப்படுகின்றனர். அதனை “சிமோனாசா” என அழைக்கின்றனர். இவ் ஆடை அணிகலன்களைக் அவர்களே தமக்கு ஏற்றால் போல் வடிவமைத்துக் கொள்கின்றனர். ஆயினும் கலப்புத் திருமணங்களின் போது பொதுவாக பெரும்பான்மை இனக் குழுக்குழுவின் உடை முறைகளையே பின்பற்றுகின்றனர்.

பொதுவாக இலங்கையின் ஏனைய மக்களை விட ஆயுட்காலம் கூடியவர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். இயற்கையான வாழ்கை முறை, எளிமையான வாழ்வியல் என அனைத்து விடயங்களிலும் சுகாதார ரீதியான தெளிவான பார்வையுடன் இருப்பதனால் அவர்களது ஆயுட்காலம் சராசரியாக 85 – 90 வரையாக இனங்காணப்பட்டுள்ளது. பெண் தலைமைக் குடும்பங்களாகவே இவர்களது வாழ்வியல் முறை அமைகின்றது. குறிப்பாக 85 வயது கொண்ட பெண் மூதாட்டி ஒருவரின் வழிநடத்தலின் அடிப்படையிலேயே இவர்களது அன்றாட வாழ்வியல் அமைகின்றது. குடும்பங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் மற்றும் குடும்பங்களினை பராமரித்தல் மற்றும் பாரம்பரிய கலைகளை பேணல் மற்றும் வளர்தெடுத்தல்> பாரம்பரிய மொழி மற்றும் வாழ்வியலை எதிர்கால சந்ததிகளிடம் கடத்தல் முதலான பிரதான பங்கினை பெண்களே எடுத்துக்கொள்கின்றார்கள்.
பொதுவாக ஆரம்பத்தில் ஆபிர்க்க பழங்குடி மதங்களையே பின்பற்றினார்கள். இன்று கத்தோலிக்க மதங்களையே பரவலாகப் பின்பற்றுவதுடன் கலப்புத் திருமணங்களின் அடியாக பௌத்த மற்றும் ஏனைய மதங்களையும் பின்பற்றுகின்றனர். அலங்கை ஆபிரிக்க குடிமக்களாக கருதப்பட்ட போதும் அடிப்படை நாளாந்த வாழ்வில் சில இடர்பாடுகளை எதிர் நோக்குகின்றனர். குறிப்பாக புறம்மொதுக்கப்படல் மற்றும் அழிவடையும் தறுவாயில் உள்ள இனக்குழுக்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
உடல் தோற்றமும், உடல் மொழியும் ஆபிரிக்க நாட்டு மக்களைப் போலவே உள்ளமையால் புத்தளம், நீர்கொழும்பு மட்டக்கப்பு திரருகோணமலை ஆகியவற்றின் ஒரு சில பிரதேசங்கள் தவிர ஏனைய இலங்கை வாழ் மக்கள் இவர்களை அன்னியராகவே நோக்குகின்றனர். இதனால் குடிமக்கள் என்ற வகைப்பாட்டினுள் உள்ள உரிமைகளை வழங்குவதில், ஏனைய மக்கள்; தயக்கம் காட்டுகின்றனர்.
அரசியல் யாப்பு ரீதியாக அவ் இனக் குழு இலங்கை ஆபிரிக்கர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் பெரும்பாண்மையானர்கள் இவர்களை காஃபீர்கள் (மத்திய கிழக்கு நாடுகளில் அடிமையாக காணப்பட்ட ஆபிரிக்க மக்களை குறிக்க கொச்சையாக மத்திய கிழக்கு நாட்டவர்கள் பயன்படுத்திய சொல்) எனவே அழைக்கின்றனர். என குறிப்பிட்டிருந்தார்கள். அவர்களால் இது விரும்பப்படாத போதும் அனைத்து சமூகத்தினாலும் கூட அதனைப் புரிந்து கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது. ஆனாலும் சில ஆய்வுகளில் “இலங்கையில் தென்னாபிரிக்காவில் உள்ளதனைப் போல எந்தவிதமான இன ஒடுக்குமுறை அர்தங்களும் கற்பிதம் செய்யப்படவில்லை. கீழைத்தேசங்களிற்கு புலம்பெயர்ந்த ஆபிரிக்கர்களைக் குறிக்க பயன்படுத்தப்டும் சாதாரண சொல்லாடலாகவே நோக்கப்படுகின்றது” எனக் குறிப்பிடப்படுகின்றது. எவ்வாறு குறிப்பிடப்பட்ட போதும் இன்று காஃபீர்கள் என இனங்காணப்படுவதனை குறித்த சமூக மக்கள் விரும்புவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலத்தில் தத் தம் இனக்குழுக்களுள் மட்டும் திருமண உறவுகளை மேற்கொண்டவர்கள் தற்போது ஏனைய இனக் குழுமங்களிடையேயும் கலப்புத் திருமண உறவுகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக சிங்கள மற்றும் தமிழ் மக்களுடன் தமது திருமண உறவுகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறான கலப்புத் திருமணங்களை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் குழந்தைகளும் சிங்கள் அல்லது தமிழ் இனக் குழுவாகத் தம்மினை அடையாளப்படுத்துவதனையே விரும்புகின்றனர். அதனால் உத்தியோகபூர்வப் பதிவுகளில் இருந்து தவிர்க்கப்படுகின்றனர். இதனால் இவ் இனக் குழுவினரது அருகிவரும் தன்மையும், வருங்காலத்தில் இவ் இனக் குழுவினர் அழிந்து போவதற்கான வாய்ப்புக்களும் அதிகளவாக உள்ளது.
உதாரணமாக பிள்ளைகள் புத்தளம் இல்லாது நீர் கொழும்பு கொழும்பு போன்ற தலைநகரங்களை மையப்படுத்திய இடங்களில் கல்வி மற்றும் தொழில்துறைகளின் நிமித்தம் வாழ்கின்றனர். இதனால் அவர்கள் தம் சுய அடையாளங்களில் இருந்து விலகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் குறைந்ததது 60,000 இலங்கை ஆபிரிக்கர்கள் வாழ்ந்த போதும் இன்று கணிசமானளவில் குறைந்துள்ளனர். இன்று கிட்டத்தட்ட 500 இலங்கை ஆபிரிக்கர்களே இலங்கைத் தீவு முழுவதிலும் உள்ளனர். அதுமட்டுமல்லாது ஒருங்கிணைந்து காணப்படாமையால் சரியாக கணிப்பிடுவது என்பது பாரிய சவாலாக உள்ளது. பல்வேறு பிரதேசங்களிலும் சிதறி வாழும் இவ் இனக் குழுவினர் சில சந்தர்பங்களில் சந்தித்துக் கொண்ட போதும் ஒரு சமூகமாக இதுவரை காலமும் ஒன்றிணையவில்லை. இது இவ் இனக் குழு அழிந்து வரும் தறுவாயில் இருப்பதற்கான பிரதானமான காரணியாக அடையாயம் காணப்படுகின்றது. குறிப்பாக “பேராசிரியர் ஷிஹான் டி செல்வா ஜெயசூரியவின்” ஆய்வின் அடிப்படையில், இவர்கள் உள்நாட்டில் விரவி இருப்பதனால் காணாமல் போகும் ஆபத்து அதிகம் உள்ளதாக அடையாளப்படுத்தினார்.
இவர்களது சனத்தொகை இழப்போடு, பாரம்பரிய கலைவடிவங்களும் அருகிப் போகின்றது. ஆரம்ப காலங்களில் தம் அடையாளமாகக் கொண்டிருந்த கலைவடிவங்களை இன்றைய சந்ததியினர் பயில்வதில்லை. வாத்தியக் கருவிகளினதும், உடையமைப்புக்களதும் பற்றாக்குறை மற்றும் புதிய சந்ததிகள் கல்வி நடவடிக்கைகள் சார்ந்து வேலைப் பளுவுடன் இருப்பதனாலும் கலைகளை கற்றுக் கொள்வதென்பது சாத்தியமில்லாது போகின்றது. மற்றும் நவீனமயமாக்கலினால் பாரம்பரியங்கள் சார்து அக்கறை காட்டுவதுமில்லை. கலாசார தேவைகளின் நிமித்தம் சில நிகழ்வுகளில் இவர்களது கலைக்கும் ஒரு இடம் வழங்கப்பட்ட போதும் அக் கலைகளோ கலைஞர்களதோ விருத்தி சார்ந்து எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இவை சார்ந்த அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பார்வையும் சரியான நடவடிக்கைகளும் அவசியமான உணரப்படுகின்றன.
இவர்கள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் ஆவணப்படுத்தல்கள் என்பன சமூகத்தில் பரவலான மட்டங்களில் இடம் பெற்றுள்ளது என்பது திருப்திகரமானதாகத் தோன்றினாலும்> அவை அனைத்தும் அவர்களின் கலை வடிவங்களின் அழகியலை எடுத்துக்காட்டுவதாக அமைவதுடன்> எதிர்காலத்தில் அழிந்து போகக் கூடியவொரு இனமாக அடையாளப்படுத்திவிட்டு கடந்து செல்லும் தன்மை காணப்படுகின்றது. இது ஆரோக்கியமான விடயங்களல்ல.
ஐந்து தலைமுறைகளாக இலங்கையில் வாழும் இவர்களது இனக்குழுவின் அழிவு தொடர்பாக சமூகத்தில் உள்ள நாம் அனைவரும் பொறுப்புடையவர்களாக உள்ளோம். இதனால் இவ் இனக் குழுக்களை அழிவிலிருந்து மீட்டு மீண்டும் இலங்கையின் பல்வகைமைத் தன்மையின் நிலைத்திருப்பினை உறுதி செய்வதும் இலங்கை ஆபிரிக்க மக்களின் அரசியல்> பொருளாதார> சமூக வாழ்வியலினை சரியான முறையில் பேணுவது அவசியமானது.

கே.விதுர்ஸா

புத்தளம்

மேலே தரப்பட்டுள்ள கட்டுரையின் தகவல்கள் மற்றும் தரவு யாவும் எமது நிறுவனத்தின் புலமைசார் சொத்து அல்ல என்பதுடன் இவ் கட்டுரையை எழுதிய நபரையே அது சாரும். இது எமது நிறுவனத்தின் கீழ் செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றின் பகுதியாகவே வெளியிடப்படுகின்றமையும் குறிப்பிடப்படல் வேண்டும்.