Single Project Image

The Story of Dangerous Rotti

“ஆபத்து ரொட்டி”

(கிழக்கிலங்கையில் மருவிப்போன பாரம்பரிய உணவுப்பரிமாற்ற முறைமை)

கிழக்கிலங்கை மக்களிடையே “ஆபத்து ரொட்டி” எனும் உணவுப் பரிமாற்ற முறைமை மிகப் பிரபல்யம் அடைந்திருந்தது. தற்போதைய நவீன யுகத்தில் இவ்வுணவுப்பழக்க முறைமை முற்றாக மருவிப்போயுள்ளதை எதிர்கால சந்ததிகளுக்கு தெரியப்படுத்தி ஆவணப்படுத்தும் நோக்கில் இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இலங்கையில் குறிப்பாக கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களிடத்தில் ஒரு பிரபல்யமான பாரம்பரிய உணவு பரிமாற்ற முறையாக ஆபத்து ரொட்டி பகிர்ந்தளிக்கும் முறைமை இருந்து வந்துள்ளது. கோதுமை ரொட்டியை பிரதான உணவாக கொண்ட அராபிய தேசத்து மக்களின் வர்த்தக நோக்கத்துடனான இலங்கை வருகை மூலம் இலங்கை வாழ் முஸ்லிம்களிடையே ரொட்டி உணவாக உட்கொள்ளும் பழக்கம் உருவானது.

இலங்கையரின் பிரதான உணவு நெல்லரிசிச் சோறாகும். இருந்த போதிலும் அரபு தேசத்து மக்களின் பழக்கத்தை ஒட்டியதாக இலங்கை வாழ் முஸ்லிம்களிடத்தில் ரொட்டி ஒரு உப உணவாக உட்கொள்ளப்பட்டு வந்தது. இதனை காலையில், மாலையில் அல்லது இரவு ஆகாரமாகவும் உட்கொண்டனர். பிற்காலத்தில் இது கிழமைகளில் ஒரு நாள், மாதத்தில் ஒருநாள் அல்லது வருடத்தில் நாள்குறிக்கப்பட்டு ரொட்டி சுட்டு உண்ணும் அத்துடன் பரிமாறும் பழக்கம் இருந்து வந்தது. அத்துடன் விசேட வைபவங்கள், பண்டிகைகள், மரண வீடுகள் என்று ரொட்டி சுட்டு உண்ணும், பகிரும் பழக்கம் நிகழ்வுகளை மையப்படுத்தியும் உருவானது.

பொதுவாக முஸ்லிம்களின் விருந்தோம்பல் பண்பானது இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி செய்யப்படும் ஒரு ஆத்மீக செயற்பாடாகும். இங்கு பசித்திருப்போருக்கு, குடும்பத்தவர்களுக்கு, அயலவர்களுக்கு, நண்பர்களுக்கு, ஏழைகளுக்கு மற்றும் யாசகம் கேட்டு வருவோருக்கு என்று உணவளிக்கும் பழக்கம் அவர்களிடத்தில் இயல்பாகவே காணப்படுகிறது.

உணவளிக்கும் பழக்கவழக்கத்தின் போது பண்டைய காலத்திலிருந்து ரொட்டி சுட்டு பகிரும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த உணவு பகிர்தலின் போது பசித்தோருக்கு உணவளிப்பதன் மூலம் அதன் பிரதிபலனாக தங்களது பொருளாதார வளம் பரக்கத் பெறும் (செல்வம் பெருகும்) என்ற இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாட்டோடு ஒன்றிணைந்த செயற்பாடாக நம்பினார்கள்.

ஏழைகளின் வயிற்றுப்பசியை உணர்ந்து உணவளித்தல் என்பது சாதி, மத, இன, சமூக பாகுபாடுகள் களைவதற்கு கிடைத்த அரியதொரு வாய்ப்பாகும். அன்றைய காலகட்டத்தில் இனங்கள் மிக நெருக்கமாக உறவுகளோடு உள்ளங்கள் ஒன்றிணைந்ததாக இருந்தன என வரலாறுகள் சான்று பகர்கின்றன. இவற்றுக்கெல்லாம் உணவு பகிர்தல் முறையும் பாரிய செல்வாக்கு செலுத்தியமை வரலாறு.

இவ்வாறான பின்னணியில்தான் இவ்வுணவு பகிர்தல் முறையில் உருவாகிய ரொட்டி சுட்டுப்பகிரும் முறை பின் நாட்களில் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தடுக்கும் அல்லது நீக்கும் என நம்பப்பட்டது. பிறரின் பொறாமை, கண்ணூறு (கண் திருஷ்டி), பிரயாணங்கள் போது ஏற்படும் ஆபத்துகள், குழந்தைகளுக்கு ஏற்படும் தீங்குகள், விஷ ஜந்துக்களின் தீங்குகள், கொடிய ஆபத்தான விலங்குகளின் தீண்டுதல்கள், பேய் பிசாசு சாத்தானின் தீங்குகள் போன்றவற்றை தடுக்கும் ஒரு வல்லமை இந்த ரொட்டி சுட்டு பகிர்வதன் மூலம் ஏற்படும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் உருவானது. அவ்வாறு ஆபத்துகளை நீக்குவதால் இது மக்கள் மத்தியில் “ஆபத்து ரொட்டி” என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

உறவினர்கள், அயலவர்கள், ஏழைகள், யாசகர்கள் ஆகியோர் மட்டுமல்லாது பறவைகள் மீதும் இரக்கம் கொண்டு வீட்டு முற்றத்தில் வரக்கூடிய காகம், புறா போன்ற பறவையினங்களுக்கும் ரொட்டியை பிய்த்து வீசுவார்கள் இதன்போது அவை கூட்டாக வந்து சாப்பிடும். இதுவும் அவர்களுக்கு மன ஆறுதலை பெற்றுக்கொடுத்தது.

குடும்பத்திலுள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கைப்பிடி மாவு சேர்த்து ரொட்டி சுடுவார்கள். வாராவாரம் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் மாலை வேளையில் (கிராமத்தது பழக்கத்தில் இநேரத்தை “வெள்ளிக்கிழமைநாத்து” என்பார்கள்) அஸருக்கும் மஹரிபுக்கும் இடையில் இதனை சுடுவார்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரதும் தலையை மூன்று முறை சுற்றி (ஆரார்த்தி எடுத்து) ஆபத்துக்கள் நீங்க இறைவனை பிரார்த்தித்து தாய்மார்கள் ரொட்டியை பகிர்ந்தளிப்பார்கள். இவ்வாறு சுடப்பட்ட முதலாவது ரொட்டியை வெள்ளைப்புடைவையால் சுற்றி, பன் தட்டொன்றில் வைத்து, சில்லறை குற்றி காசு ஒன்றும் குத்தி தனது வீட்டிற்கு மிக்க கிட்டிய பள்ளிவாசலின் மோதினார் (முஅத்தினார்), ஆலிம் அல்லது லெவ்வைக்கு கொடுப்பார்கள்.

இங்கு ஆலிம் லெவ்வைக்கு கொடுப்பதன் நோக்கம் இஸ்லாமிய மார்க்கத்தில் அவர்கள் அதீத ஈடுபாடு கொண்டவர்கள் என்பதனால் அவர்கள் இந்த ரொட்டியை உண்ட பின்னர் குறித்த குடும்பத்துக்காகவும் அவர்களின் உறவினர்கள் பிள்ளைகளுக்காகவும் அக்குடும்பத்தின் பொருளாதார விருத்திக்காகவும் இறைவனிடத்தில் கேட்கும் பிரார்த்தனைகள் நேரடியாக அங்கீகரிக்கப்படும் எனும் மற்றுமொரு நம்பிக்கையாகும்.

ரொட்டி சுட்டு பகிரும் அன்றய நாள் அந்த குடும்பத்துக்கு ஒரு பெருநாள் போன்ற தினமாக இருக்கும். தாய்மார்கள் தங்களது பிள்ளைகள், குடும்ப அங்கத்தினர்கள், அயலவர்கள், நண்பர்கள் மற்றும் ஏழைகள் சகிதம் ரொட்டி சுட்டு உண்டு மகிழும் ஒரு பாரம்பரிய பண்பாக இருந்து வந்தது.

ரொட்டி தாயாரிக்கும் போது சுடப்படும் முதலாவது ரொட்டிக்கு ஒரு மிகப்பெரிய மூட நம்பிக்கையும் கூடவே பிறந்தது. அதாவது அந்த ரொட்டியை சுடுகின்ற போது அது கீலம் கீலமாக வெடித்து விடக்கூடாது. அவ்வாறு வெடித்தால் குறித்த அந்த குடும்பத்துக்கு மிக விரைவில் பெரும் ஆபத்தொன்று நிகழப்போகும் செய்தியை முன் கூட்டியே அறிவதாக கருதினார்கள். இது போன்ற மூட நம்பிக்கைகள் தான் இந்த ரொட்டி விருந்தோம்பல் பழக்கவழக்கம் முற்றாக மருவி அருகிப்போவதற்கு காரணமாய் அமைந்தன.

ஆபத்து ரொட்டியை மையப்படுத்தி உருவாகிய அளவுக்கதிகமான இவ்வாறான மூடநம்பிக்கைகளை நம்புவதற்கு மக்கள் தயாராக இருக்கவில்லை. கல்வி கற்ற மக்கள் உருவாகியமையால் அறிவுபூர்வமான சிந்தனைகள் பிறந்து விஞ்ஞான விளக்கங்களோடு இவ்வாறான மூட நம்பிக்கைகளை புறந்தள்ளினார்கள்.

மேலும் மக்கள் நவீனத்துவத்துள் உள்வாங்கப்பப்பட்டமையால் புதுவித உணவுப்பழக்கங்களும் மேலைதேய உணவு கலாசாரங்களும் மக்களிடத்தே அவர்களை அறியாமலேயே ஊடுருவியது. இதனால் ஆபத்து ரொட்டி மூலம் உருவாகிய நல்ல மன மகிழ்வும் உணவு பகிர்தல் முறையும் மெதுவாக மறைந்து சென்றதோடு ஆபத்து ரொட்டி அடையாளம் தெரியாமல் அழிந்து போயுள்ளது.

ஜம்சித் ஹசன்

அம்பாறை

மேலே தரப்பட்டுள்ள கட்டுரையின் தகவல்கள் மற்றும் தரவு யாவும் எமது நிறுவனத்தின் புலமைசார் சொத்து அல்ல என்பதுடன் இவ் கட்டுரையை எழுதிய நபரையே அது சாரும். இது எமது நிறுவனத்தின் கீழ் செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றின் பகுதியாகவே வெளியிடப்படுகின்றமையும் குறிப்பிடப்படல் வேண்டும்.