Single Project Image

The Story of Kantale Wewa

தொன்மையும் தொழில்நுட்பமும்
(அருகிப்போகும் கந்தளாய் குளத்தின் வரலாறு)

வளம் கொழிக்கும் நன்நகராம் நிலம் செழிக்கும் திருகோணமலை மண்ணிலே தனக்கென்ற தனியிடத்தை தடமாகப்பதித்திருக்கும் தண்ணீர் விநியோகத்தை தார்மீகக்கடமையெனக்கொண்டு திகழும் “கந்தளாய் குளம்” கந்தளாய் எனும் கிராமத்தின் மூன்றிலொரு பங்காக வியாபித்திருக்கிறது.தொன்மை வரலாற்றை தொடராகக்கூறும் மகாவம்சத்தினது கூற்றுப்படி 2ம் அக்போ எனும் மன்னனாலேயே இக்குளம் நிர்மாணிக்கப்பட்டு வருடங்கள் நகர புதுப்பிக்கப்பட்டதாகவும் புகழ்ந்துரைக்கப்பட்டாலும் “குளக்கோட்டன்” என்ற பெயருடைய ஆட்சியாளன் தான் ஆரம்பத்தில் இக்குளமமைத்தான் என்பது அனுபவத்தால் முதிர்ச்சியுற்ற முதியவர்களினதும் ,பெரியவர்களினதும் கூற்றுக்கள் பறைசாற்றும் அரியவகை தகவலாக திகழ்கிறது.உண்மையில் யார் அமைத்தது என்பது சர்ச்சைக்குரிய பேச்சாக இருப்பினும் கந்தளாய் குளத்தருகே இருக்கும் சிறுகுளம் வேந்தரசன் எனும் தமிழ்ச்சாயலிலே பெயர் சூட்டப்பட்டிருப்பது ,குளத்தை கட்டியதாலே குளக்கோட்டன் எனப்பெயர் பெற்றதாக இக்குளத்தை நிர்மாணித்திருப்பதற்கான சாதகத்தன்மையை சாத்தியமாக்குகின்றது.பல நூற்றாண்டுகள் கழித்த பின்னரும் சரித்திரத்திற்கு சான்று பகரும் இக்குளத்தின் வரலாற்றுச்சுவடுகள் என்றும் அழியாதவை.குளமானது 8°21’18.72″ அகலாங்கிலும் 80°59’1.17″ நெட்டாங்கிலும் அமைந்து காணப்படுவதானது இயற்கையில் இதன் இருப்பை நீடிக்கச்செய்வது போலவே 140.6 மில்லியன் கனமீற்றர் கொள்ளளவு கொண்ட நீரை சேமிக்கக்கூடியதாக சிறப்புற வடிவமைக்கப்பட்டுள்ளது.வேந்தரசன் குன்றினையும் ,நயனாவூற்று மலையையும் இணைத்து கட்டப்பட்ட குளக்கட்டு உயரத்தால் 16.7 மீற்றரும் 2.5 கிலோமீற்றர் நீளமும் கொண்டிருப்பது பண்டையகால தொழில் நுட்பத்திற்கு உதாரணமாகக் கொள்ளப்பட வேண்டியதொன்று.

இக்குளக்கட்டு ஏறத்தாழ 1500 வருடம் பழமையான பாறையை துண்டுகளாக்கி கட்டப்பட்டு மக்களின் பாவனைக்கு விடப்பட்டது. வெவ்வேறு தொழில்நுட்பத்திறன்களால் மேம்படுத்தப்பட்ட ,முன்னேற்றகரமான காலமல்லாத போதும் காலத்தால் அழியாத கந்தளாய்க்குள அமைப்பும் ,அமைவிடமும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு சுகந்தரும் வகையில் இருப்பது இயற்கையின் பெருங்கொடை எனலாம்.திருகோணமலை மாவட்டத்திற்கு முழுதாகத்தேவையான நீர்வழங்கல் இக்குளத்தினாலேயே இடம்பெறுகிறது.இரம்மியமான இயற்கை இரசிகர்களை தன்பால் இழுக்கும் இக்குளக்கட்டிலிருந்தான பார்வை வீச்சு ,புகைப்படக்கவிஞரல்லாதோரைக்கூட புகைப்படம் எடுக்க தூண்டுகோலாயமையும்.

பழமையின் ஓர் பங்காக விளங்கும் இக்குளத்தின் சரிதைகள் தெய்வீகத்தன்மை வாய்ந்தது எனும் ஐதீகமும் பரவலாக எங்கும் காணப்படுகிறது. குடிநீர் மட்டுமல்லாது சிறுபோக,இடைப்போக,பெரும்போக விவசாயத்திற்கு தேவையான நீர் விநியோகமும் 10 மதகுகளைக்கொண்ட வான் கதவுகள் தற்சிறப்பானது.ஏறக்குறைய 23 சதுரகிலோமீற்றர் பரப்பினை உடைய கந்தளாய் குளத்திற்கு ‘கித்துளூத்து’ எனும் ஆற்றினூடாகவே அளப்பெறும் பங்கு நீரினைப்பெறுகிறது.இது அநுராதபுர மற்றும் பொலநறுவை காலமான 1017-1236 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டது.இடையில் மீள்புனரமைப்பு செய்யப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் இக்குளம் புனரமைப்புச்செய்யப்பட்டதாக ஒரு பதிவும் காணப்படுகிறது.

அநுராதபுர காலப்பகுதியிலேயே பெரியளவிலான நீர்ப்பாசனத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதால் இக்குளம் அநுராதபுர காலத்திலேயே கட்டப்பட்டிருக்கலாம் எனவும் ஒரு முடிவுக்கு வரக்கூடியதாகவுள்ளது.1986ம் ஆண்டு ஏப்ரல் 20 அதிகாலை 3.00 மணியளவில் கந்தளாய் அணையானது நீர்மட்ட அதிகரிப்பால் உடைக்கப்பட்டு பெருமளவு நீர் வெள்ளமெனப்பாய்ந்தோடியதில் வயல்வெளிகளும் , கட்டடங்களும் அழிக்கப்பட்டன.இந்நிகழ்வினால் ஏறத்தாழ 120-180 வரையான உயிரிழப்பும்,1600 வீடுகளும்,2000 ஏக்கர் வயல்நிலங்களும் அழிக்கப்பட்டது மட்டுமல்லாது 8000 குடும்பங்களும் பாதிக்கப்பட்டன.இதற்கான முக்கிய காரணமாக அணைக்கட்டின் மீது பார ஊர்திகள் செல்வது எனக் கருதப்படுகிறது. சுவடுகளை இணைத்து குறுக்காகக்கட்டப்பட்ட குளக்கட்டிற்கும் ,மியாந்தர் வளைவுகளை சாதகமாக பயன்படுத்திய அருவியின் திசை திருப்பலுக்கும் கந்தளாய் குளம் சிறந்ததொரு எடுத்துக்காட்டு.நிச்சயமற்ற மழைவீழ்ச்சி,உலர்வலயம்,வருடத்தில் ஒரு பருவம் மட்டும் மழை பெறுதல்,அதியுயர் சனத்தொகை முதலிய காரணத்தால் இக்குளத்தின் தேவைப்பாடு சொல்லால் விபரிக்க முடியாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.பின்னர் மன்னர்களுக்கிடையேயான சிம்மாசனப்போட்டி காரணமாக காலப்போக்கில் குளங்கள் கட்டும் சாத்தியத்தன்மை அழிவை எட்டியது.ஆனாலும் நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குளமானது இன்று வரை பயன் கொடுத்தாலும் குளத்தை கட்டியவர்கள் யார் என்ற கேள்வி இன்னும் எல்லோர் மனதிலும் இருந்து கொண்டுதானிருக்கிறது.

ரி.மு.இஹ்ஸாம்

திருகோணமலை

மேலே தரப்பட்டுள்ள கட்டுரையின் தகவல்கள் மற்றும் தரவு யாவும் எமது நிறுவனத்தின் புலமைசார் சொத்து அல்ல என்பதுடன் இவ் கட்டுரையை எழுதிய நபரையே அது சாரும். இது எமது நிறுவனத்தின் கீழ் செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றின் பகுதியாகவே வெளியிடப்படுகின்றமையும் குறிப்பிடப்படல் வேண்டும்.