Single Project Image

The Story of Mootaikara Theru

மூட்டைக்காரத்தெரு

இன்றைய ஏகாம்பர வீதி முன்பு சின்ன கிடைத் தெரு என்று அழைக்கப்பட்டது. “ரேகு அடி” என்ற இடத்தில இந்திய, மாலைதீவு பாய்மரக்கப்பல் கட்டும் துறைமுகம் இருந்தது. இங்கு வாழ்ந்த முஸ்லிம்களில் சிலர் வியாபாரிகளாகவும், கடை வணிகர்களாகவும், ஏனைய பெரும்பான்மை முஸ்லிம்கள் துறைமுகத்தில் வரும் சரக்கு கப்பல்களில் வரும் சரக்குகளை ஏற்றிஇறக்கும் வேலைகளிலும் மாட்டு வண்டிகளில் சரக்குகளை “தவள” முறையில் கண்டி, அனுராதபுரம் போன்ற பகுதிகளுக்கும், நகரத்தின் ஏனைய பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் வேளையிலும்; ஈடுபட்டு அதில் கிடைத்த ஊதியத்தினால் தம் ஜீவனோபாயத்தை நடத்திவந்த காரணங்களினால் இவர்கள் முழுமையாகவும், உடனடியாகவும் இங்கு குடியேறவில்லை சிறுக சிறுக குடியேறிய இம் மக்கள் பிரதான வீதி அருகில்; ஒரு பள்ளிவாயலை அமைத்தனர். இந்தச் சமயம் இப்பகுதியை “மூட்டைக்காரத்தெரு” என அழைத்தனர்.

அப்பொழுது ஆங்கிலம் அறிந்த ஜாவா மொழி பேசும் மலேசிய, சிங்கப்பூர் முஸ்லீம்மக்களும் பிரித்தானியரால் கொண்டு வரப்பட்டனர் இவர்கள் தம் வேலைகளில் சேர்ந்த போது இஸ்லாமிய மார்க்க கடமைகளைகளிலும்; மத அனுஸ்டானங்களிலும் ஈடுபட முஸ்லிம்கள் வாழ்ந்த இந்த ஜமாலியா என்ற மூட்டைக்காரதெருவில் குடியேறினர்.

ஜமாலியாவில் குடியேறி வாழ்ந்த மக்கள் காலமாற்றத்தில் சன நெருக்கடி எட்டப்பட்ட பொது 1951 களில் ஒரு சிலர் நிலாவெளி வீதியில் 6ம் – 7ம் மைல்களுக்கு இடைப்பட்ட பிரதேசமான இன்றய இக்பால் நகரிலும் தொடர்ந்து 1958 இல்ஒரு சில குடும்பங்கள் உப்புவேலி பிரதேச எல்லைக்குள் ஜின்னாநகரிலும், 1977, 1978 களில் லவ்லேன் சுய உதவி தேசிய வீடமைப்புத் திட்டம் 1 இலும், 1983 களில் தேசிய வீடமைப்புத் திட்டம் 2 இலும், 1991 களில் தக்வாநகர் வீடமைப்புத் திட்டத்திலும் பின்னர் விஜயசேகரபுர, துளசிபுர போன்ற இடங்களிலும் குடியேறி வாழ்ந்தவருகின்றனர்.

இங்கு வாழ்ந்த மக்களிடையே சில நூதன பழக்கவழக்கங்களும், அனுஸ்டானங்களும் இருந்ததை நாம்மறந்துவிடலாகாது. அப்போது திருகோணமலையில்; பெரும்பான்மையாக தமிழரும், இரண்டாம் நிலையில் முஸ்லிம்மலும், விரல் விட்டு ஏண்ணக்கூடிய அளவு சிங்கள மக்களும் வாழ்ந்த காலம். பேரும் பேரும் அரச உத்தியோகங்களில் ஆங்கிலம் கற்ற மக்களே இருந்தனர். “பொசன் மற்றும் வெசாக்” போன்ற நிகழ்ச்சிகள் நம்முரில் நடைபெறாத நேரம் அது.

பொசன் போன்ற வடிவிலான அமைப்பில் சந்தனக்கூடு அல்லது பஞ்சா என்ற பெயரில் தகரங்களிலான கப்பல்கள் செய்து மாட்டு வண்டில்கள்களில் ஏற்றி வீர விளையாட்டுக்கள் சகிதம் அணிவகுத்துச் செல்லும் கண்கொள்ளாக்காட்சியை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பூரிக்கும்.

திருமண நிகழ்வுகளில் போதும், ஏனைய சடங்குகளின் போதும் நடத்தும் சீனஅடி, சிலம்படி, கழிகம்பு என்ற கோலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் மனதை கொள்ளைகொள்ளும் பொழுது போக்குகளான வீர விளையாட்டுகளாகும். பெண்களுக்குரிய நிகழ்ச்சியாக நடைபெறும் நிகழ்வுதான் எமது நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களுடைய அருமை மகளார் பாத்திமா (ரலி) அவர்களை நினைவிற் கொண்டுவரும் “பாத்திமா நீயதும்” , “தலை பாத்திஹா” என்ற நிகழ்ச்சியும் ஆகும். இந்த நிகழ்ச்சி நடை பெறும் வீடுகள் சோடனைகளுடனும், இனிப்பு பலகாரங்களுடனும் களைகட்டும். “சந்தனக்கூடு” அல்லது “பஞ்சா” என்ற விழா எமது கடற்கரை கொடிமரத்தில் தொடங்கி பள்ளிவாசல் வரை அணிவகுக்கும். பள்ளிவாசலாடியில் நடைபெறும் “மௌலூது” உடன் பயணிக்கும் இந்த நிகழ்ச்சி ஊர்வலமாக உப்புவெளியில் இருந்து வடகரை வீதியூடாக பயணித்து பெரியக்கடை வரை சென்று பின் முற்றவெளியில் அமைந்துள்ள முற்றவெளி அப்பா சியம் வரை வந்து கந்தூரி நடத்தி வந்தோரையும், வருவோரையும் உணவு கொடுத்து உபசரித்து மகிழும் மக்களாகவே இம்மக்கள் இருந்து வந்தார்கள்.

இக்கால கட்டத்தில்தான் டொக்யாட் என்ற கடடபடைத்தளத்தின் உள்ளே அமைந்துள்ள 40 முழ அவுலியா என்ற “காலடி அப்பா” சியாரம், கண்ணியாவில் உள்ள 40 முழ அவுலியா சியாரம் , செல்லில் உள்ள 40 முழ அவுலியா சியாரம், சீனக்குடாவில் ஆளி அப்பா சியாரம் ஆகிய இடங்களிலும் மௌலூதுகளும் கந்தூரிகளும், வைபங்களும் வருடந்தோறும் நடத்தி மகிழ்ந்ததோடு வீட்டுக்கு வீடு “முஹைதீன் மௌலுதும்” பள்ளிவாசலில் “சுபஹான மௌலூது” என்ற மீலாது விழாவையும் கொண்டாடி வந்தனர். இவற்றை ஏறக்குறைய மார்க்க சடங்காக கருதியே மகிழ்ந்தனர். இந்த நிகழ்வுகளுக்கு முன்னின்று இவ்வூரின் பெரியார்களும், குடி மக்களும் சேர்ந்து ஒற்றுமையாக நடத்தி வந்தனர்.

ஆரம்ப காலத்தில் வீர விளையாட்டுகள் முக்கியமாக இருந்தாலும் பின்னர் நாடு சுதந்திரமடைந்த பின் 1950 களில் உதைபந்தாட்டம், கைப்பந்தாட்டம் போன்றவையும் விளையாடப்பட்டது. இக்காலகட்டத்தில் முன்னேறியிருந்த எமது உதைபந்தாட்ட விளையாட்டு வீரர்கள் அக்காலத்தில் புகழ் பெற்று இருந்த ஒலிம்பிக், யுனைட்டட், கிலிட்டன்ஸ், சன்ரைஸ், சென்அந்தனீஸ் விளையாட்டு கலகங்களுடனும் ஏனைய பிரித்தானிய, பாகிஸ்தானிய, இந்திய கலகங்களுடனும் உதைபந்தாட்ட போட்டிகளில் கலந்துகொள்ள நேர்ந்த போது எமது கலகத்திட்கும் பிரதேசத்திட்கும் ஓர் தனித்துவமான பெயர் அவசியப்பட்டது.

அப்போது 1950 களில் நடந்த சன சமூக நிலைய கூட்டம் ஒன்றில் இதுபற்றி பேசப்பட்ட போது ஊருக்கு “ஜமாலியா” என்ற பெயரை சூட்டும்படி அந்த நேரம் நமது பள்ளிவாசலில் கடமையாற்றிய காத்திப் ஆன மலையாள ஆலிம் இந்த பெயரை தெரிவு செய்தர். அதே பெயரை விளையாட்டுக் கழகத்திட்கும் வைக்கலாம் என்றும் பிரேரித்து ஏகாமானதாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது ஜமாலியா சன சமூக நிலையம் என்றும், ஜமாலியா விளையாட்டுக்கழகம் என்றும், ஊருக்கு ஜமாலியா என்றும் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டு எல்ல உயர் அதிகாரிகளுக்கும் அறிவித்தபோது அன்றய நகர சபை இதை ஏற்க மறுத்த நேரம் சமூகம் செய்வதறியாது நின்றது.

சன சமூக நிலையத்தில் ஒளிபரப்பு அமைச்சினால் இலவசமாக வழங்கி பரிபாலனம் செய்த வானொலிப் பெட்டியை மாதம் இருமுறை பார்வைடவரும் I.P.T. என்ற பரிசோதிக்கரை சந்தித்த போது ஊரின் பெயர் பற்றி பிரஸ்தாபித்தனர். இதை நன்றாக அறிந்து ஆலோசனை செய்த தபால் மற்றும் தந்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய அதிகாரியான அவர் ஒரு வழிமுறையை அறிவுறுத்தினார். ஊர் மக்களும் அறிவுரையின்படி செயலாற்றிவந்தனர் இதன் அடிப்படையில் பல தூர இடங்களில் இருந்து 50 மேட்பட்ட தந்திகளும் சில நூற்றுக்கணக்கான கடிதங்களும் ஒரு மாதத்துக்குள் ஊரை நோக்கி வரத்தொடங்கியது. இதனால் தபால் திணைக்களம் இதைக் கருத்தில் கொண்டு முதலில் “ஜமாலியா” என்ற பெயரை அங்கீகரித்து பதிவு செய்தது. நம் ஊரில் இருந்து செல்லும் கடிதங்கள் யாவும் ஜமாலியா என்ற முகவரியைத் தங்கி அனுப்பப்பட்டதால் ஜமாலியா என்ற பெயர் உறுதியானபோது அதை நகராச்சி மன்றமும் ஏற்று பெயர் பலகையிட்டு உறுதி செய்தது.

இங்கு பொழுது போக்குகள் இல்லாத அந்த காலத்தில் “காவலிப்” பாடலுடன் கூடிய “பாஜா” என்ற இன்னிசைக் கச்சேரிகள் திருமண சடங்குகளின் போதும் ஏனைய பொதுவைபவங்களின் போதும் நடத்தி மக்களை கவர்ந்தார். மேலும் “கழிகம்பு” எனப்படும் ஒருவித கோலாட்டமும்,”சீனடி”, “செலம்படி” மேலும் “ஜாடி” என்ற கபடி விளையாட்டும் எம் ஊரில் பிரசித்தி பெற்ற வீர விளையாட்டுக்களாக காணப்பட்டது.

அ.ற.பிஹான்

திருகோணமலை

மேலே தரப்பட்டுள்ள கட்டுரையின் தகவல்கள் மற்றும் தரவு யாவும் எமது நிறுவனத்தின் புலமைசார் சொத்து அல்ல என்பதுடன் இவ் கட்டுரையை எழுதிய நபரையே அது சாரும். இது எமது நிறுவனத்தின் கீழ் செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றின் பகுதியாகவே வெளியிடப்படுகின்றமையும் குறிப்பிடப்படல் வேண்டும்.