Single Project Image

The Story of Reed Mats in Sammanthurai

சம்மாந்துறையும் மருகிப்போன பன் பாய் உற்பத்தியும்

கிழக்கிலங்கையில் சிறப்புடன் விளங்கும் பழம் பெரும் நகரங்களில் முக்கிய இடத்தை சம்மாந்துறை வகிக்கின்றது. அதற்கு அதன் அமைவிடமும் புவியியல் நிலைமைகளும் நெல் வயல்களைக் கொண்ட சுற்றுச் சூழலும் அடிப்படையாக அமைகின்றன.

ஜி. சின்னத்தம்பி என்பவர் சம்மாந்துறையினைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையின் மிகப் பழமையான நெல்வயல்கள் கிழக்குப் பிரதேசத்தில் அமைந்திருந்தன. மகாவம்சத்தில் பராக்கிரமபாகு மன்னன் வெளிநாடுகளுக்கு நெல்லை ஏற்றுமதி செய்ததாகக் கூறப்படுகின்றது. அக்காலத்தில் கிழக்கில் அதிகம் நெல் உற்பத்தி இடம் பெற்றிருக்கின்றது என்றும் அவ்வாறாயின் அவ் உற்பத்தி சம்மாந்துறையிலேயேதான் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும், இவ்விடயம் ஏற்றுக் கொள்ளப்படக் கால்கோளாக எகிப்திய புவியியல் ஆய்வாளரான “தொலமி” இலங்கைப் படத்தில் குறிப்பிடும் எனும் இடம் சம்மாந்துறையாகவே இருக்க வேண்டும்” எனவும் கூறப்படுகின்றது.

இக்கூற்றிலிருந்து சம்மாந்துறை பண்டைக்காலம் முதல் ஒரு துறைமுகமாக இருந்துள்ளதையும் நெல் உற்பத்தி, அரிசி ஏற்றுமதியுடன் நேரடித் தொடர்புடைய விவசாயப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட பிரதேசமாக இருந்துள்ளதையும் அவதானிக்கலாம்.

பொதுவாக நோக்குமிடத்து பண்டைக் காலம் முதல் விவசாய பொருளாதார அமைப்பையும் அத்துடன் கைத்தொழில் நடவடிக்கைகள், வர்த்தக முயற்சிகள், அரச வேலைவாய்ப்புகள் என வளர்ச்சியடைய புவியியல் வரலாற்றுக் காரணிகள், கலாசார அம்சங்கள், அரசியல் பின்னணி என்பன சாதகமாக அமைந்ததை இங்கு குறிப்பிடலாம்.

சம்மாந்துறை பௌதீக அமைப்பு.

இவ்வூர் புவியியல் ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்து காணப்படுகின்றது. இவ்வூரைச் சுற்றிவர கண்ணுக்கெட்டிய தூரம் வரை தட்டையான பரந்த சமவெளி காணப்படுகின்றது. வண்டல் மண் கலந்த இத்தரை நெற்செய்கைக்கு பொருத்தமான காலநிலையாக இருப்பதால் இப்பகுதி மக்கள் நெல் உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றனர். 1950க்கு முன்னர் இப்பிரதேச நெற்காணிகள் மழைநீரை நம்பியே விவசாயம் செய்யப்பட்டது. குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் நீர்ப்பாசன நடவடிக்கைகள் துரித முன்னேற்றம் அடைந்து மக்களின் வாழ்க்கையிலும் பல மாறுதல்களும், அபிவிருத்திகளும் ஏற்படலாயின.சம்மாந்துறையின் நிலையம் காரணமாக பல நூற்றாண்டுகளாக கண்டி இராட்சியத்தின் கிழக்கின் முக்கிய துறைமுகமாக சம்மாந்துறை இருந்து வந்துள்ளது. ஐரோப்பியர் இலங்கையில் காலடி வைக்கும் வரை இப்பிரதேசம் கண்டியர்களின் ஆளுகையில் இருந்து வந்துள்ளது மேலும் ஏறாவூர் தொடக்கம் சம்மாந்துறை வரை தெற்காக 50 கி.மீ தெற்கு வரை பரந்து காணப்படும் மட்டக்களப்பு வாவியின் தெற்கு அந்தத்தில் அமைந்திருந்த இவ்வூர் கண்டியரின் பிரதான ஏற்றுமதி, இறக்குமதித் துறையாக இருந்து வந்துள்ளமையை வரலாற்றில் நாம் காணக்கூடியதாகவுள்ளது.

கண்டியிராச்சியத்தின் கிழக்கின் பிரதான துறைமுகமாக விளங்கிய சம்மாந்துறைக்கும் வங்கக் கடலில் நடைபெற்று வந்த அராபிய வர்த்தகர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பல நூற்றாண்டு காலமாக பல தொடர்புகள் இருந்து வந்துள்ளன. இதற்குத் துணையாக மட்டக்களப்பு வாவி நீர்ப் போக்குவரத்து வழியாக இருந்துள்ளது. இந்த வகையில் மத்திய கிழக்கில் இருந்து வர்த்தக நோக்கோடு இந்து மாப்பெருங் கடலில் பிரவேசித்த அராபியர்கள் வங்கக் கடலைக் கடந்து சீனா வரை தமது வர்த்தக இராச்சியத்தை விஸ்தரித்தனர். வங்கக் கடலின் இலங்கையின் கிழக்குப் பக்கமாக மட்டக்களப்பு வாவிக்குள் பிரவேசித்த அவர்கள் தெற்கே நீண்டு காணப்படும் வாவியினூடாக பிரயானம் செய்து இறுதியில் சம்மாந்துறையை வந்தடைந்தனர். இங்கிருந்து மேலும் உள்நாட்டில் தரைவழிப்பயணம் செய்து கண்டி இராச்சியத்துடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்தனர். கண்டி இராச்சியத்தில் பெறப்படும் வாசனைத் திரவியங்கள், மாணிக்கம் சம்மாந்துறையினூடாக வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அரேபியாவில் இஸ்லாம் பரவுவதற்கு முன்பிருந்து நடைபெற்று வரும் நடவடிக்கைகளாகும். இக்கால கட்டத்தில் அரேபிய வர்த்தகர்கள் மட்டக்களப்பு வாவி நெடுகிலும் இங்குள்ள மக்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்து வந்துள்ளமையை அறியக் கூடியதாக உள்ளது. இவ்வாறான மக்கள் தொகுதியினர் வர்த்தகத் துறைமுகமான சம்மாந்துறையிலும் வாழ்ந்துள்ளனர்.

சம்மாந்துறையும் மருகிப்போன பன் பாய் உற்பத்தியும்

சம்மாந்துறையில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைகளில் பன்புல்லினால் இழைக்கப்படும் பாய் வேலைப்பாடானது முக்கியமான ஒரு சமூகப்பேறாகும். பன்பாய் மனிதக் கைக்கும் செப்பனிட்ட பன்புல்லிற்கும் இடையிலான இடைவினைத் தொழிற்பாட்டில் முதலில் உருவான கைவினைகளுள் ஒன்றாகும். வட இந்திய பண்பாட்டில் காணப்படும் கம்பளங்களை ஒத்ததே தென்னிந்திய மற்றும் இலங்கைப் பண்பாட்டில் காணப்படும் பாய்கள் ஆகும்.

காலனியமும், நவீனமயமாதலும் உள்ளூர் பண்பாட்டில் ஏற்படுத்திய தாக்கம் பாரம் பரியத்தின் முக்கிய பல தேவைகளைப் பூர்த்தி செய்யும் கைவினைப் பொருளான பாய்களின் இருப்பிலும் பாரிய மாற்றத்தினை உண்டு பண்ணியது பண்பாட்டில் ஏற்பட்ட இந்த மாற்றம் இயற்கை மூலப்பொருளினாலும் தூய மனிதவலுவினாலும் உருவான பாய்களின் தேவைப்பாட்டினை வலுவிழக்கச் செய்ததுடன் அத்தகைய உற்பத்திகளின் கிரயத்திற்கு போதுமான வருமானத்தின் வளர்சி நிலையை கேள்விக்குள்ளாக்கியது. மற்றும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் இயந்திரத்தினால் பின்னப்பட்ட பல வர்ணங்களையும் அலங்காரங்களையும் ஏற்ற பிளாஸ்ரிக் பாய்களின் வருகை, இலகுவில் தூக்கிச் செல்லத்தக்க இரும்பு மற்றும் பிளாஸ்ரிக் நாற்காலிகள் பயன்பாடு, கட்டில் மெத்தைகளில் வருகை, என்பன பாய்களின் கட்டாயத் தேவைப் பாட்டினை இல்லாமல் பண்ணியதுடன் பன்பாயின் வகைப்பாடுகளையும் அவற்றின் பயன்பாட்டையும் மட்டுப்படுத்தியது. மேற்படி மாற்றங்கள் பாரம்பரிய பாய் பின்னும் கைவினைஞர்கள் வேறு தொழில் நோக்கி நகர்வதற்கும் இளம் சந்ததியினர் பாய் பின்னலில் ஆர்வம் அற்றவர்களாவதற்கும் உரிய நிலமையை தோற்றுவித்துள்ளது. பன் உற்பத்தி, செப்பனிடல். அலங்காரத் திட்டமிடல், இழைத்தல், விற்றல், பயன்பாடு போன்ற படிமுறைகளில் ஒட்டுமொத்த சமூகத்தவரும் இயற்கை மற்றும் சமூக பண்பாட்டுக் காரணிகளில் தங்கியிருந்தனர் அவர்களுக்குக் கிடைத்த சிறந்த கால நிலைகள், மோசமான வரட்சி, தொடர் மழை வெள்ளப்பெருக்குகள் முதலியவற்றால் வாழ் விடமும் தொழிலிடமும் அழிதல் போன்ற இயற்கைச் சம்பவங்களும், யுத்தம் உயிர் அச்சுறுத்தல் அகால மரணங்கள் இடப் பெயர்வுகள், காணிகளை இழத்தல் தற்காலிக குடியிருப்பு வாழ்க்கை, மீள் குடியேற்றம், புது வாம்விட உருவாக்கம், காணிதிருத்தமும் உற்பத்தியும், இராணுவக் கெடுபிடிகளுக்கு நடுவில் நிபந்தனைகளுடன் தொழில் புரிய கிடைத்த அனுமதி வழிப்பறிக் கொள்ளை, திருமணம் வழிபாடு, நிவாரணக் கொடுப்பனவு, மின்சார இயந்திரம் புழக்கத்திற்கு வருதல் என பன்தொழிலாளிகள் கடந்த மறக்கமுடியாத நினைவுகளும் இந்தப் பாய்களின் உற்பத்தி வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளன.

வெறுமனே பன் பாய் உற்பத்தியினாற் கிடைக் வருமானம் மாத்திரம் பன் உற்பத்தியாளாகளின் நோக்கமல்ல மாறாக அவர்களது சுயம் பற்றிய தேடல் சுதந்திரமற்ற வாழ்வின் நெருக்கடிகள் துயரங்கள், தம்மை நிறுவுவதற்கான களம், ஒருவித ஆத்ம திருப்தி மகிழ்ச்சி என பன்னினால் சாத்தியமாகும் எதிர்வினை முயற்சியின் விளைவாகவே பாய்களை உணர முடிகின்றது.

இவ்வகையில் சம்மாந்துறை பன்பாய்களை வாசித்தல் என்பது அவற்றின் வடிவம், இழைப்பு உத்தி நுட்பம், அழகியல் என்பவற்றோடு மட்டுமல்லாது;சம்மாந்துறை சமூக வரலாற்றையும் விழிப்பு செய்யும் ஒன்றாகவும் உள்ளது. பன் பாய்களின் மிகவும் குறைந் தளவிலான பாவனைக்காலம், இது தொடர்பான உரிய ஆவணமாக்கல்கள் இல்லாமை என்பன பன் பாய் தொடர்பான வாசிப்பினை இடர்பாடுடையதாக்குகின்றது எனினும் தொடர்ச்சியாகப் பன்பாய்த் தொழிலில் ஈடுபடுவோரிடையே காணப்படுகின்ற குழுக்குறிச் சொற்களும் பரம்பரை பரம்பரையாகப் அவர்களாற் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறைகளும் அவர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்ட அனுபவங்களும் இவற்றைப் பற்றி ஆய்வு செய்வதற்கான குறைந்தபட்ச ஆதாரங்களினை எமக்குத் தருகின்றன.

பன்பாய்களின் உற்பத்தி வரலாறு

சம்மாந்துறைப் பிரதேசத்தில் வீரமுனை, சென்னல் புரம், மல்வத்தை, மஜீட்புரம் போன்ற பிரதேசங்களில் பன் பாய்த்தொழில் பிரதானமாக இடம்பெற்று வந்தது. பொதுவாக பன்தொழில் புரிவோரை கின்னரை ” என அழைக்கும் வழக்கம் உள்ளது. சம்மாந்துறைப் பொறுத்தவரை ஆரம்பகாலங்களில் பன்புல் உற்பத்தி தொடக்கம். அதனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், அவற்றின் விநியோகம் முதலான யாவும் தமிழ்ச சமூகத்திடமே காணப்பட்டுள்ளது. காலப்போக்கில் உற்பத்திக்கும் நுகர்வுக்கு மிடையில் இடைத்தரகர்களாக முஸ்லிம் வியாபாரிகள் தொழிற்படத் தொடங்கினர். அதேவேளை இதன் தொடர்ச்சியாக முக்குவ சாதியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்களை முஸ்லிம் வர்த்தகர்கள் திருமணம் முடித்தலுடாகவும் தமிழ்ச் சமூகத்திடமிருந்த பன்பாய் உற்பத்தித்துறை இஸ்லாமியர்களிடம் மேலும் பரவிச்சென்றுள்ளதை அறிய முடிகிறது.

இதேநேரம் 1990 களில் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் உருவாகிய இனத்துவப் பதற்றங்களும், அவற்றை அரசியல்வாதி கையாண்ட முறைமைகளும் அவற்றின் விளைவான இடப்பெயர்வுகளும் மேற்படி உற்பத்தில் கட்டமைப்பை மறுபடி மாற்றியமைத்தன. குறிப்பாக, இந்நிலவரம் தமிழ்க் கிராமங்களில் மீண்டும் பன் உற்பத்தி உருவாக வழிசமைத்ததுடன் தொழில் ரீதியாக அது மேம்படவும் வழிவகுத்தது .அவ்வகையில் தமிழர்கள், முஸ்லிம்களாகிய இரு சமூகத்தவரிடையேயும் சமாந்தரமாக பன்உற்பத்திச் செயற்பாடுகள் இக்கால கட்டத்தில் நிறுவனமயப்படுகிறது. இந்தக் கட்டத்தில் பன் உற்பத்தித் தொழிற்துறையானது அதன் குல, இனத்துவ அடையாளங்களைக் கடந்த ஒரு தொழிற்துறையாகவும் வலுப் பெறுகின்றது.

உற்பத்தியில் பாய்

தென்னிந்திய பண்பாட்டு வட்டகையில் பயன்படுத்தப்படும் பாய்கள் பொதுவாக நீளமாக வளரக்கூடிய புற்கள் (உதாரணம் பன்புல், சாப்பைப் புல்) அல்லது நீளமான சமாந்தரமான விளிம்புகளையுடைய செப்பனிடத்தக்க ஓலைகள் உதாரணம் பனை ஒலை தென்னை ஓலை) போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு இழைக்கப்படுகின்றன. மேற்படி மூலப் பொருட்களின் பாவனைத் திறனுக்கேற்ப அவை தற்காலிகப் பாய்களாகவோ நிரந்தரப் பாய்களாகவோ இழைக்கப்பட்டிருக்கின்றன.

முஸ்லீம் சமூகத்தில் தென்னை ஓலைப்பாய்கள் பள்ளிவாசல்களிலும், மரணவீட்டுச் சடங்குகளிலும் அவற்றின் தற்காலிகத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இழைக்கப்படுகின்றன. பனை ஓலைப்பாய்கள் பொருட்களை உலர் வைத்தல், அமர்தல் உறங்குதல் போன்ற பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அதேவேளை வயோதிபர்கள் சுகயீனமுடையவர்கள் ஓய்வெடுப்பதற்கும் உறங்குவதற்கும் சாப்பைப்புல் பாய்கள் அதிகம் இழைக்கப்படுகின்றன. நாளாந்த தேவைகள் அனைத்தினையும் நிறைவு செய்யத்தக்க பாய்களாக பன்பாய்கள் உருவாகின .பன்புல்லின் நெகிழ்வுத் தன்மை மற்றைய ஊடகங்களுடன் ஒப்பிடும்போது அவற்றின் நீண்ட பாவனைக்காலம், மிகக் குறைந்தளவிலான உற்பத்திக்காலம் (சுமார் இரண்டு நாட்கள்) மற்றும் அவற்றின் மேற் பரப்புத்தன்மை ஆகியன அவற்றினை முதன்மைப் படுத்துகின்றன. பன் என்பது வகைப் புல்லினமாகும். இப்புல்லினம் மூன்று தொடக்கம் நான்கு மாதங்களிற்குள் நான்கு அல்லது ஐந்து அடி உயரத்தில் இரண்டு அல்லது மூன்று சென்ரிமீற்றர் சுற்றளவுடைய பருமனில் நேர்த்தியாக வளர்ந்து பூக்கக் கூடியது . வருடத்தில் மூன்று முறை குறித்த ஒரே பன்வயலில் பன் அறுவடை நிகழ்வதுடன் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வயற்காணி பதப்படுத்தப்பட்டு புதிய பன் நடப்படுகிறது.

சம்மாந்துறை பிரதேசத்தின் வளமான சதுப்பு நிலம் மற்றும் மாறிமாறி இருந்த ஈரப்பதன் வெப்பநிலை காலநிலை என்பன பன் உற்பத்திக்கும் பதப்படுத்தலுக்குமான பிரதான சூழலியற் காரணிகளாக அமைந்திருந்தன. வெயிற்காலங்களில் பன் அறுவடை பன்னினை உலர்த்துதல், பன்னிற்கு சாய் மேற்றுதல் மற்றும் மீள உலர்த்துதல் முதலான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. பொதுவாக பன்னினை உலர்த்தும் போது அதன் உலர் திறனுக்கேற்ப அதனை ஐந்து நாட்கள் வெயிலில் உலரவிடுதல் என்பது பொது வழக்கமாக இருந்தது. இதே நேரம் வெயிலில் உலர்த்த முடியாத மழைக்காலங்களில் குளிர்காலங்களிலும்) பருத்திமனை இயந்திரத்தில் பன்கள் பதப்படுத்தப்பட்டு, செப்பனிடப்பட்டு பாய்கள் இழைக்கப்பட்டன். குளிர்காலமே பன்புல்லின் நெகிழ்வுத்தன்மைக்கான கால நிலையாகும். நெகிழ்வுத்தன்மையே நேர்த்தி உறுதியுமான இழைப்புக்கும், சீரான முடிப்பிற்கும் முக்கியமாகையால் அக்காலத்தில் அதை செய்தனர் . மேற்படி காலநிலை பன்னின் வளர்ச்சியிலும், பதப்படுத்துதலிலும் பிரதான பங்கு வகிக்கின்றதாயின், அவர்களது பண்பாட்டு அம்சங்களே பாயினது வடிவத் தினையும், கோல அமைவினையும் தீர்மானிக் கின்றன . அந்தவகையில் அவர்களினது பட்டறிவினது கண்டுபிடிக்கப்பட்ட காண்பிய பிரதிநிதித்துவங்களாகப் பாய்கள் உள்ளன.

பன் பாய்களின் வகைகளும் அவற்றின் வடிவமைப்பும்

பன்பாய் வகை பிரித்தல் என்பது அவற்றின் இழைத்தல் . பயன்பாடு மற்றும் அளவு சார்ந்த ஒன்றாகக் காணப்படுகின்றது.

சம்மாந்துறை பிரதேசத்தின் நீளப்பாயானது பூனொச்சி முனையில் ஒண்டிப்பாய் என அழைக்கப்படுகின்றது. அத்துடன் ஒரே பாய் பண்பாட்டு வேறுபாடுகளுக்கேற்பவும் வேறுபட்ட தேவை களுக்காக பயன்படுத்தப்படும் போதும் வேறு பட்ட பெயர்களில் அழைக்கப்படுவதைக் காணலாம். உதாரணமாக தமிழர்களிடம் அன்னதானம் வழங்கும் போது பயன்படுத்தப்படும் பாயான ‘பந்திப்பாய்’ , ‘ பள்ளிவாசல் பாய் ‘ எனும் பெயரில் முஸ்லிம்களால் பயன் படுத்தப்படுகின்றது அதேபோல ‘தொட்டில் பாய்’ இருதரப்பினருக்கும் பொதுவாக உள்ளது. அதேசமயம் ‘தொழுகைப்பாய்’ எனும் பெயரிலும் முஸ்லிம்களிடம் வழக்கில் உள்ளது.

பாய்களில் நிறங்களின் பங்களிப்பு முக்கியமான ஒன்றாகும் . ஒரு வகையில் இவ்வர்ணங்கள் சம்மாந்துறை பாய்க்கான தனித்துவத்தினை தீர்மானிக்கும் காரணி யுமாகும் . ஆரம்பகாலங்களில் பாரம்பரிய முறையில் தாவர இலை, பட்டைகளை இடித்துப் பெறப்பட வர்ணப்பொருளை நீருடன் சேர்த்து அவித்து மஞ்சள், பச்சை, ஊதா, சிவப்பு கறுப்பு முதலான வர்ணங்களை உருவாக்கியுள்ளனர்.

சிவப்பு நிறம்:- பத்தங்கி மரத்துண்டும் புரவவய தாவரயிலை

மஞ்சள் நிறம:- மரமஞ்சள், பசுமையான மஞ்சள்

ஊதாநிறம்:- தம்பை மரப்பட்டை

பச்சை நிறம்: அலரியும் மலை வேம்பும்

கறுப்பு நிறம்:- சாதிக்காயும் கடுக்காயும்

எனினும் காலனிய காலத்தில், நவீன மயமாதலின் விளைவாக அறிமுகமாகும்.பச்சை, சிவப்பு, ஊதா வர்ணச் சாயங்களின் (இச்சாயங்கள் கோழிகளுக்கு பூசும் வழக்கத் தாற் ‘ கோழிச்சாயங்கள் அழைக்கப்படுகிறது) வருகை மேற்படி இயற்கை வர்ணங்களின் பாவனையினை இல்லாமல் பண்ணியதுடன், பாய்களின் நிறப் பயன் பாட்டினையும் வரையறை செய்தது.

வர்ணப் பிரயோக முறையில் முதலில் புனிக்குரிய வர்ணத்தை தெரிவு செய்து பின்னணியாக வரும் பன்களுக்கு வர்ணத்தினையும், அதன் மேல் முன்துருத்தி வரும் கோலங்களுக்கு மாறிமாறி ஒன்றுவிட்ட இரண்டுவிட்ட ஒழுங்கில் வரத்தக்க வகையில் பின்னணி வர்ணத்திற்கு, எதிர்வர்ணமாக அமையக்கூடிய இரண்டு வர்ணங்களையும் மானிக்கின்றார்கள். (உதாரணமாக : ஊதாப்பன் பின்னணி என்றால் பச்சை மற்றும் வெள்ளை நிறப்பன்கள் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. அதேநேரம் பாயின் பயன்பாட்டை கொண்டும் வர்ண நிர்ணயத்தினைச் செய்கின்றனர்.

அதாவது மணல் அல்லது தரையில் விரிக்கும் நாளாந்த தேவைப் பாட்டிற்குரிய ஒண்டிப்பாய்களாயின் ஊதா, சிவப்பு நிறப்பன்களும் பள்ளிவாசல் பாய் ஆயின் பச்சை வர்ணப்பன்களும் பிரதானப்படுத்தப்படுகின்றன பாய்பின்னலுக்கான வர்ண நிர்ணயத் தினையடுத்து வர்ணச்சமநிலை, ஒழுங்குபடுத்தப்பட்ட உருவத்தொகுப்பு, உருவச் சமநிலை சீர்அடுக்கு, லயம், மேற்பரப்புத் தன்மை என்பவற்றைக் கவனத்திற் கொள்ளும் பொருட்டு பன்களின் தடிப்பத்தின் படையிலான, பன்குத்தும் முறை மற்றும் நேர்த்தியான இழைப்பிலும் கவனம் எடுக்கின்றனர். ஒரே பாய் பலவர்ணங்களிலும், சில சமயங்களில் தனிவர்ணத்திலும் உள்ளன. இதனடிப்படையில் கலைப்பெறுமானம் மிக்க பாய்கள் அலங்காரத் தெரிவு வர்ணத் தெரிவு சீரான பன் நேர்த்தியான கையாள்கை என்பனவற்றின் மூலமே உருவாகின்றது.

அதேநேரம் முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த இளந்தலை முறையினர் பாய் இழைப்பதில் அதிக நாட்டமின்றி ஏனைய கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துகின்றமையும் அவதானிக்க முடிகிறது.

சம்மாந்துறை

மேலே தரப்பட்டுள்ள கட்டுரையின் தகவல்கள் மற்றும் தரவு யாவும் எமது நிறுவனத்தின் புலமைசார் சொத்து அல்ல என்பதுடன் இவ் கட்டுரையை எழுதிய நபரையே அது சாரும். இது எமது நிறுவனத்தின் கீழ் செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றின் பகுதியாகவே வெளியிடப்படுகின்றமையும் குறிப்பிடப்படல் வேண்டும்.