Single Project Image

The Story of Shiyaram

சம்மாந்துறை பிரதேசத்தில் அழிவடைந்து செல்லும் அவுலியாக்களது சியாரங்களும் அவற்றினது எச்சங்களும்.

சம்மாந்துறை பற்றிய அறிமுகம்

இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் முஸ்லீம்கள் பரந்து வாழ்ந்தாலும் சில மாவட்டங்களில் ஐதாகவும் வாழ்கின்றனர். அம்பாரை மாவட்டத்தில் “தென்கிழக்கு” என அடையாளப்படுத்தப் பட்டுள்ள பிரதேசம் முஸ்லீம்கள் செறிந்து வாழும் தனித்துவமான பிரதேசம் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுகளும் இல்லை. சம்மாந்துறையில் வசிக்கும் 90 வீதமான மக்கள் முஸ்லீம்களாவர். ஆறு ஜும்ஆ பள்ளிவாசல்கள் உட்பட 40 பள்ளிவாசல்கள் இவ்வூரின் சிறப்புக்கும் சான்றாக உள்ளது. தீன் ஒளி பரப்ப ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி அறபிக் கலாசாலையும், குர்ஆன் மனனம் செய்ய தனியான குர்ஆன் மனனக் கலாசாலை, 25 ற்கும் மேற்பட்ட முஸ்லீம் பாடசாலைகள், தொழினுட்பக் கல்லூரி, தென்கிழக்குப் பல்கலைக் கழக பிரயோக விஞ்ஞான பீடம் போன்ற ஆண்மீக, லௌகீக தேவைகளை நிறைவேற்றும் தாபனங்கள் நிறைந்த செல்வச் செழிப்புள்ள பகுதியே சம்மாந்துறை. மேலும் வைத்திய கலாநிதிகள், பொறியியலாளர்கள், நிருவாக சேவை உத்தியோகத்தர்கள், கணக்காளர்கள், ஆசிரியர்கள் என்று நூற்றுக் கணக்கானோர் இவ்வூரை அழகுபடுத்துகின்றனர். இங்குள்ள மக்களில் 75 வீதத்திற்கும் மேற்பட்டோர் விவசாயிகளாக உள்ளனர். ஏறக்குறைய 40000 ஏக்கருக்கும் மேற்பட்ட இருபோக செய்கைக்கு உட்பட்ட காணிகள் இவ்வூரின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. (“பட்டறை” சம்மாந்துறைப் பிரதேச சாகித்யவிழா நினைவு மலர் (2009, 2012))

சம்மாந்துறையின் வரலாறு.

கிழக்கிலங்கையில் சிறப்புடன் விளங்கும் பழம் பெரும் நகரங்களில் முக்கிய இடத்தை சம்மாந்துறை வகிக்கின்றது. அதற்கு அதன் அமைவிடமும் புவியியல் நிலைமைகளும் நெல் வயல்களைக் கொண்ட சுற்றுச் சூழலும் அடிப்படையாக அமைகின்றன (“மீலாத் மலர்”, 2008)

ஜி. சின்னத்தம்பி என்பவரின் புத்தகத்தில் சம்மாந்துறையினைப் பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“இலங்கையின் மிகப் பழமையான நெல்வயல்கள் கிழக்குப் பிரதேசத்தில் அமைந்திருந்தன. மகாவம்சத்தில் பராக்கிரமபாகு மன்னன் வெளிநாடுகளுக்கு நெல்லை ஏற்றுமதி செய்ததாகக் கூறப்படுகின்றது. அக்காலத்தில் கிழக்கில் அதிகம் நெல் உற்பத்தி இடம் பெற்றிருக்கின்றது என்றும் அவ்வாறாயின் அவ் உற்பத்தி சம்மாந்துறையிலேயேதான் இடம் பெற்றிருக்க வேண்டும். இக்கூற்றிலிருந்து சம்மாந்துறை பண்டைக்காலம் முதல் ஒரு துறைமுகமாக இருந்துள்ளதையும் நெல் உற்பத்தி, அரிசி ஏற்றுமதியுடன் நேரடித் தொடர்புடைய விவசாயப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட பிரதேசமாக இருந்துள்ளதையும் அவதானிக்கலாம்.

பொதுவாக நோக்குமிடத்து பண்டைக் காலம் முதல் விவசாய பொருளாதார அமைப்பையும் அத்துடன் கைத்தொழில் நடவடிக்கைகள், வர்த்தக முயற்சிகள், அரச வேலைவாய்ப்புகள் என வளர்ச்சியடைய புவியியல் வரலாற்றுக் காரணிகள், கலாசார அம்சங்கள், அரசியல் பின்னணி என்பன சாதகமாக அமைந்ததை இங்கு குறிப்பிடலாம்.

சம்மாந்துறை பௌதீக அமைப்பு.

இவ்வூர் புவியியல் ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்து காணப்படுகின்றது. இவ்வூரைச் சுற்றிவர கண்ணுக்கெட்டிய தூரம் வரை தட்டையான பரந்த சமவெளி காணப்படுகின்றது. வண்டல் மண் கலந்த இத்தரை நெற்செய்கைக்கு பொருத்தமான காலநிலையாக இருப்பதால் இப்பகுதி மக்கள் நெல் உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றனர். 1950 க்கு முன்னர் இப்பிரதேச நெற்காணிகள் மழைநீரை நம்பியே விவசாயம் செய்யப்பட்டது. குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் நீர்ப்பாசன நடவடிக்கைகள் துரித முன்னேற்றம் அடைந்து மக்களின் வாழ்க்கையிலும் பல மாறுதல்களும், அபிவிருத்திகளும் ஏற்படலாயின. சம்மாந்துறையின் நிலையம் காரணமாக பல நூற்றாண்டுகளாக கண்டி இராட்சியத்தின் கிழக்கின் முக்கிய துறைமுகமாக சம்மாந்துறை இருந்து வந்துள்ளது.

ஐரோப்பியர் இலங்கையில் காலடி வைக்கும் வரை இப்பிரதேசம் கண்டியர்களின் ஆளுகையில் இருந்து வந்துள்ளது மேலும் ஏறாவூர் தொடக்கம் சம்மாந்துறை வரை தெற்காக 50 கி.மீ தெற்கு வரை பரந்து காணப்படும் மட்டக்களப்பு வாவியின் தெற்கு அந்தத்தில் அமைந்திருந்த இவ்வூர் கண்டியரின் பிரதான ஏற்றுமதி, இறக்குமதித் துறையாக இருந்து வந்துள்ளமையை வரலாற்றில் நாம் காணக்கூடியதாகவுள்ளது.

கண்டியிராச்சியத்தின் கிழக்கின் பிரதான துறைமுகமாக விளங்கிய சம்மாந்துறைக்கும் வங்கக் கடலில் நடைபெற்று வந்த அராபிய வர்த்தகர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பல நூற்றாண்டு காலமாக பல தொடர்புகள் இருந்து வந்துள்ளன. இதற்குத் துணையாக மட்டக்களப்பு வாவி நீர்ப் போக்குவரத்து வழியாக இருந்துள்ளது. இந்த வகையில் மத்திய கிழக்கில் இருந்து வர்த்தக நோக்கோடு இந்து மாப்பெருங் கடலில் பிரவேசித்த அராபியர்கள் வங்கக் கடலைக் கடந்து சீனா வரை தமது வர்த்தக இராச்சியத்தை விஸ்தரித்தனர்.

வங்கக் கடலின் இலங்கையின் கிழக்குப் பக்கமாக மட்டக்களப்பு வாவிக்குள் பிரவேசித்த அவர்கள் தெற்கே நீண்டு காணப்படும் வாவியினூடாக பிரயாணம் செய்து இறுதியில் சம்மாந்துறையை வந்தடைந்தனர். இங்கிருந்து மேலும் உள்நாட்டில் தரைவழிப்பயணம் செய்து கண்டி இராச்சியத்துடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்தனர். கண்டி இராச்சியத்தில் பெறப்படும் வாசனைத் திரவியங்கள். மாணிக்கம் சம்மாந்துறையினூடாக வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அரேபியாவில் இஸ்லாம் பரவுவதற்கு முன்பிருந்து நடைபெற்று வரும் நடவடிக்கைகளாகும். இக்கால கட்டத்தில் அரேபிய வர்த்தகர்கள் மட்டக்களப்பு வாவி நெடுகிலும் இங்குள்ள மக்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்து வந்துள்ளமையை அறியக் கூடியதாக உள்ளது. இவ்வாறான மக்கள் தொகுதியினர் வர்த்தகத் துறைமுகமான சம்மாந்துறையிலும் வாழ்ந்துள்ளனர்.

ஸியாரங்களும் அவற்றின் அழகியல் வெளிப்பாடுகளும்

  1. கலந்தார் சிக்கந்தர் அவுலியா அப்பா

இச் சியாரம் சம்மாந்துறையின் மல்க்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது .நெய்னாக்காடு என்று அழைக்கப்படும் வீதியில் இச் சியாரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவ் வீதியானது ஆரம்பகால கண்டிக்கான பாதையாக காணப்பட்டது .ஆரம்பகால இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இப்பாதையை பயன்படுத்தினார்கள். இதில் அவுலியாக்களும் வருகை தந்தார்கள். அவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்த சிக்கந்தர் மக்களின் நன் மதிப்பினால் கலந்தரப்பா என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டார். இவர் மக்களுக்கு வைத்தியம் செய்தல், இவ் நற்பண்புகளை கற்றுக்கொடுத்தல், அற்புதங்களை செய்து காட்டுதல் போன்ற செயல்களில் தன்னை ஈடுபடுத்தினார்.

இங்கு 5 அடக்கஸ்தலங்கள் (புதைக்கப்பட்ட இடம்) காணப்படுகின்றது. இது கலந்தர் அப்பாவினதும் அவருடன் பணியாற்றிய, ஆன்மீகத்தை கற்ற அவரின் சீடர்களும் என நம்பப்படுகின்றது. இவர்கள் அனைத்து மதத்தவர்களும் நன்மதிப்பை பெற்ற இறைநேசர்களாவார்கள் என்று இன்று வரைக்கும் சில தரப்பின் மதிப்புக்குரியவர்களாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் கற்களை கொண்டு எளிய முறையில் எ வடிவில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் இச் சியாரம் 1780 சதுர அடி பரப்பு கொண்டதும் உயரம் கட்டிடத்தின் வளை வரை 10 அடிகளும் மேல் வளை வரை 14 அடிகளும் கொண்டு காணப்படுகின்றது. மூன்று பக்கம் விறாந்தைகளையும் கலந்தரப்பாவின் அடக்கஸ்தலத்தைக் கொண்ட உள் அறையும் காணப்படுகிறது. இவற்றில் பள்ளிவாசல் கட்டிடக்கலையின் மரபியல் வடிவமான குப்பா வடிவம் சுவரின் உட்கார்ந்தவாறு குதிரை லாட வடிவிலான வளைவு மாடம் காணப்படுகின்றது.

.மேலும் கலந்தரப்பாவின் சமாதி இருக்கும் அறையானது அன்பு எழுத்தணிக்கலை பொறிக்கப்பட்ட துணி காணப்படுவதுடன், இதன் மேல் இருக்கும் பச்சை துணியில் மொசைக் வேலைப்பாடுகளும் கலைநயத்துடன் காட்சியளிக்கின்றது.

மற்றும் சியாரம் இருக்கும் காணியில் மேலும் சில அவுலியாக்கள் அடக்கப்பட்டதாகவும் அவற்றின் அடையாளங்கள் மறைந்துவிட்டதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன. மற்றும் கலந்தர் சிக்கந்தர் அப்பாவின் சியாரத்திற்குத்திற்கு மேற்குப்புறமாக காணப்படும் காட்டுப்பக்கிர் அப்பாவின் சியாரமும் மிக எளிமையான வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் மிகச் சிறிய குப்பா வடிவிலான காற்றோட்டைகள் இரண்டும் காணப்படுகின்றது. இவ் நியாயம் அமைந்துள்ள காணியில் ஆலிம் மர்வானுல், பாத்திமா அஸ்ஸாலி போன்ற இறைநேசர்களும் அவர்களின் அடக்கஸ்தலங்களும் காணப்படுகின்றன.

இவ் நியாயங்கள் காணப்படும் எல்லைப் பகுதியிலும் தொழுகைக்கான பள்ளிவாசல் ஒன்றும் காணப்படுவதனுடன் மிக எளிமையான இஸ்லாமியக்கலை வெளிப்பாடுகளையே கண்டு கொள்ளக்கூடியதாக உள்ளது. மல்கம்பிட்டியில் அமைந்திருக்கும் இச் சியாரங்களின் நுழைவாயில் கட்டிடக்கலையில் மினாராவின் தோற்றம் மிக அழகாக காட்சியளிக்கின்றது.

மேற்கண்டவாறு காணப்படும் இச் சியாரந்தின் நுழைவாயில் பள்ளிவாசல்களின் கட்டடக்கலை மரபினை பின்பற்றியதாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. எண் கோண வடிவிலான நான்கு தூண்களின் மேலும் மினாராவை பிரதிபலிக்கும் 4 வட்டாக்களும் காணப்படுகின்றன. மேலும் அவற்றின் மேல் உருளை வடிவிலான கும்மட்டமும் அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் இடதுபுறம் இருக்கும் இரு தூண்களுக்கும் இடையில் சிறிய கூர்நுணிப்பாகமும் அவற்றின் கீழ் உள்ள சுவர்களில் குப்பாவை பிரதிபலிக்கும் வண்ணம் 4 காற்றோட்டைகளும் மிகச் சரியான திட்டமிடலின்படி கட்டிட கலைஞன் மேற்கொண்டுள்ளான் மற்றும் இவற்றின் நுழைவாயில்களில் காணப்படும் கதவு நுழைவாயிலோடு கட்டப்பட்டிருக்கும் மதில்சுவர் என்பவற்றில் இஸ்லாமிய கட்டிடக்கலை வடிவங்கள் காட்சியளித்து கொண்டிருக்கிறது.

மேலே காணப்படும் கட்டிட அமைப்பு ஆரம்பகாலத்தில் சியாரம் இருக்கும் இடத்தை கண்டு கொள்வதற்காகவும், பக்தர்களின் வருகை அதிகரிக்க செய்யவும் பயன்படுத்தப்பட்ட ஒருவகை தொடர்பாடல் குறியீடாகவே அடையாளப்படுத்தலாம். இவற்றில் அழகியலை உருவாக்கிய கலைஞனின் தொழில்நுட்ப அறிவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும். செவ்வக வடிவிலான நான்கு சுவர் பரப்புகளை தூண் வடிவில் இணைத்து அவற்றின்மேல் பிரமிட் வடிவத்தினை பிரதிபலிக்கும் வகையில் படிக்கட்டு அமைத்து சுவருக்குள் குடைந்தவாறு துளையிட்டு விளக்கு (தீ) எரியவைத்து அடையாளம் காட்டப்பட்டது.

இத் தீச்சுடர் மழையினால் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக மேலே கூரை அமைக்கும் தொழில்நுட்ப அறிவும் அக்கலைஞனிடம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டிட சமிஞ்சை விளக்கின் கூரை அழிந்து சென்றாலும் பழமை பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக அவற்றில் அண்மைக்காலத்தில் எளிமையான கூரை வடிவமைப்புக்களை மக்கள் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  1. குறுந்தடியப்பா ஸியாரம்

கண்டிக்கால வீதிகளில் ஒன்றில் அமைந்திருக்கும் இச் ஸியாரம் குருந்தை மரங்களை உள்ளடக்கிய அழகிய வயற் காட்சிகளின் நடுவில் அமைதியாய் காட்சி அளிக்கின்றது. சம்மாந்துறையின் வயல் காணிகளில் ஒன்றான குடா வட்டை என்று அழைக்கப்படும் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இச் ஸியாரம் பக்தர்களின் மன அமைதியின் இல்லமாக காணப்படுகின்றது. விவசாயிகளின் ஓய்வெடுக்கும் அழகிய இடமாகவும் இச் சியாரம் இதுமிகச் சிறிய கட்டிடம் ஆகவும் மரத்தின் முன் மண்டபமாகவும் காணப்படுகின்றது. இதிலும் சுவரில் குப்ப வடிவம் குடையப்பட்டு இருப்பதோடு இஸ்லாமிய கலை மரபினை வெளிக்காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் மொத்த பரப்பு 115 சதுர அடி பரப்பு, சுற்றி 15 சதுர வடிவான தூண்களும் சுவருடன் ஒட்டி அமைக்கப்பட்டிருக்கின்றன . பச்சை கட்டிடமாக காட்சியளிக்கும் இந்த சியாரத்தின் வடக்குப் புறத்தில் கொடிக்கம்பம் ஒன்றும் காணப்படுகின்றது. விசேட நாட்களில் அதில் கொடியேற்றி பக்தர்கள் கொண்டாடும் பழக்கமும் காணப்பட்டதுடன், கந்தூரி கொடுத்தல், சியாரத்தை தரிசித்தல் போன்ற செயல்களில் பக்தர்கள் ஈடுபட்டனர்.

  1. காட்டவுலியப்பா சியாரம்

இந்த சியாரம் சம்மாந்துறையில் சேனை வட்ட கண்டத்தில் அமைந்துள்ளது. இவரது உண்மையான பெயர், எங்கிருந்து வந்தார் என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. இவரது அடக்கஸ்தலத்தை சுற்றி வயல் நிலங்கள் காணப்பட்டாலும் ஒரு மேட்டு நிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் இவர் தனியாக தவம் செய்து இருந்துள்ளார். எவ்வளவு காலம், இவ்வாறு உணவு, உறக்கமின்றி இருந்தார் என்பது இறைவனுக்கு மாத்திரமே தெரியும். இவ்வாறு காட்டில் தவத்தில் இருப்பது மக்களால் அறியப்பட்டது. இதன் பிற்பாடு அக்காடு துப்பரவு செய்யப்பட்டு அவருக்காக குடிசை அமைக்கப்பட்டு மக்கள் அவரை காட்டவுலியப்பா என்று அழைத்து வந்தனர். இன்று அழிவுற்றுக் கொண்டிருக்கும் இந்த சியாரம் ஒரு காலத்தில் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற சியரமாக இருந்தபோதிலும் இன்று இது அழிவடைந்து கொண்டிருக்கின்றது. சம்மாந்துறையின் பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றான இவ்வழகிய கட்டிடம் வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட ஒரு சாரார் இவற்றுக்கு அண்னமையில் பள்ளிவாயல் கட்டிடக்கலை பிரதிபலிக்கும் வண்ணம் உறுதியான கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இவை எதிர்காலத்தில் முஸ்லிம்களின் வணக்க ஸ்தலமாக பயன்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 900 சதுர அடிப் பரப்பைக் கொண்ட காட்டவுலியபா சியாரத்தின் உட்புறத்தில் அவுலியாக்களின் வெற்றிக் கொடிகளும், பிறை வடிவமும் சீமெந்து சாந்து கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக எளிமையாகக் காணப்படும் இச் சியாரம் அவ்லியாவின் நினைவுச் சின்னமாக கருதப்படுகின்றது. இங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் காட்டவுலியப்பாவின் சமாதியை போர்த்தி வைத்திருக்கும் பச்சை துணியில் மொசைக் அலங்கார வேலைப்பாடுகள் காட்சியளிக்கின்றன.

இவ்வாறு கட்டப்பட்டுக் காணப்படும் இந்த சியாரங்களை மக்கள் தரிசிப்பதுடன் பல நம்பிக்கைகளையும் கொண்டுள்ளனர். இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்தால் அவர்கள் அல்லாஹ்விடத்தில் தமது தேவைகளை தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஒரு சாரார் கபூர் வணக்கத்தையும் நோக்கி இட்டுச் சென்றுள்ளது. அவுலியாக்கள் உயிருடன் இருந்த போதும் செய்த அற்புதங்களும் மக்களுக்கு செய்த உதவிகளும் இறந்தவர்கள் எப்போதும் நம்மிடம் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் மக்கள் மனதில் வேரூன்றியுள்ளது.

அவர்களின் ஆத்மா உலகில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஆத்மாவுக்கு அழிவு கிடையாது. நிச்சயமாக எங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய உதவி செய்வார்கள். என்ற பூரண நம்பிக்கை கொண்ட ஒரு சாரார் பாரம்பரிய சொத்துக்களையும், வணக்க ஸ்தலங்களையும் பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்களினால் ஸியாரங்கள் இன்று வரைக்கும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

வெளிநாடுகளில் கட்டப்பட்டிருக்கும் சியாரங்களில் சில மன்னர்களினதும் அவர்களின் அன்பை பெற்று கொண்டவர்களினதும் ஸியாரங்கள் காணப்படுகின்றன. இவற்றிற்கு உதாரணமாக ஷாஜகான் தனது காதலிக்கு கட்டிய தாஜ்மஹாலை கூறலாம். ஆனால் சம்மாந்துறை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட அனைத்து சியாரங்களிலும் காணப்படும் எல்லா சமாதிகளும் இறைநேசர்களின் சியாரங்கள் ஆகும். இவற்றில் மக்கள் கொடியேற்றி கந்தூரி (சமைத்த உணவு அல்லது அன்னதானம்) கொடுத்து இந்துக்களும் முஸ்லிம்களும் கலந்து ஒற்றுமையாக வழிபட்ட தளங்களாக நோக்கப்படுகின்றன.

அம்பாறை

மேலே தரப்பட்டுள்ள கட்டுரையின் தகவல்கள் மற்றும் தரவு யாவும் எமது நிறுவனத்தின் புலமைசார் சொத்து அல்ல என்பதுடன் இவ் கட்டுரையை எழுதிய நபரையே அது சாரும். இது எமது நிறுவனத்தின் கீழ் செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றின் பகுதியாகவே வெளியிடப்படுகின்றமையும் குறிப்பிடப்படல் வேண்டும்.