Single Project Image

The Story of Temple Girihandu

தொன்மை

(இலங்கையில் மருகிப் போன விகாரையின் வரலாறு)

 

கே.அஸீம்

திருகோணமலை

இலங்கை, இந்து சமுத்திரத்தின் முத்து என சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படும் இலங்கை 09 மாகாணங்களையும் 25 மாவட்டங்களையும் கொண்ட இந்திய துணைக் கண்டத்தின் தென் கீழ்க் கரைக்கு அப்பால் இந்திய பெருங்கடலின் ஏறத்தாழ 20 மில்லியனிட்கும் அதிகமான மக்கள் வாழும் ஒரு தீவு ஆகும்.

கிழக்கிலங்கையின் ஒரு பகுதியான திருகோணமலை வெறுமனே விடுமுறை தினத்தை கழிக்க மட்டுமல்லாமல் தனக்கென ஒரு தொன்மையையும் புராதனத்தையும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு சான்றுகள் பல இருந்தாலும் நாம் பார்ப்பது திருகோணமலை நகருக்கு வடக்கே சுமார் 47 கிலோ மீட்டர் தொலைவில் திரியாய் எனும் கிராமத்தில் அமைந்துள்ள தூபி கிரிகண்டு சாய.
கிரிகண்டு சாய இதற்கு நிதுபற்பான எனும் இன்னும் ஒரு பெயரும் உள்ளது. நிதுபற்பான எனப்படுவது கி.பி. 67 தொடக்கம் 111 வரை கிரிகண்டு சாய அமைந்துள்ள இடத்தில் வசப மன்னனால் கட்டப்பட்ட ஓர் குளத்தின் பெயர் ஆகும். இது பூஜாவலிய என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. மேலும் இது திரியாய் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு பௌத்த ஆலயம் ஆகும். இலங்கையின் முதலாவது ஸ்தூப வழிபாட்டுத்தலமாக இந்த கிரிகண்டு சாய விஹாரை தான் கருதப்படுகிறது. கிரிகண்டு சாய விகாரையை நிர்மாணித்ததாக இரண்டு கடல் மார்க்க வியாபாரிகள் அடையாளபடுத்தப்படுகின்றனர்.
அவர்கள் திரிப்பூசா மற்றும் பஹளிக்க அல்லது தபசு மற்றும் பள்ளுக என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

இலங்கைக்கு அரச மரத்தினை கொண்டு வந்த சங்கமித்தையின் வருகைக்கு முன்னரே இவர்களின் வரலாறு பதிக்கப்பட்டுள்ளது. கௌதம புத்தர் இலங்கைக்கு வருகை தந்த போது கௌதம புத்தர் அவர்களை சந்திக்கச் சென்று தங்களிடம் இருந்த வியாபாரப் பொருட்களை வழங்கியதாகவும் வரலாறுகள் பேசுகின்றன.
மேலும் தபசு மற்றும் பள்ளுக வழங்கிய வியாபாரப் பொருட்களை பெற்றுக் கொண்டு கௌதம புத்தர் அவர்கள் தன் தலை முடியை அவ்விருவருக்கும் பரிசாக கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் கௌதம புத்தர் பரிசாக கொடுத்த தலை முடியை வைத்துக் கொண்டு கி.மு. 528 ஆம் ஆண்டு கிரிஹன்டு சாய அமைந்துள்ள இடத்தில் ஒரு சிறிய வணக்கஸ்தலம் ஒன்றை ஸ்தாபித்தனர். இதனை சிங்களத்தில் தபாவ என்றும் அழைப்பர்.

இவர்கள் இருவரின் பெயர்களும் இன்றும் கூட கிரிகண்டு சாய விகாரையில் பொறிக்கப் பட்டிருப்பதை எம்மால் காண முடிகின்றது. கிரிகண்டு சாய விகாரையில் அமைந்துள்ள வணக்க வழிபாட்டுக்கான பகுதி வட்டதாகய என்ற ஒரு சிறந்த கட்டிடக்கலையை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. இந்த வட்டதாகய கட்டிடக் கலை அமைப்பானது அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள தூபராம, லங்காராம போன்ற கட்டிடக்கலையை ஒத்த வடிவமாக காணப்படுகின்றது.

இந்த வட்டதாகய கட்டிடக்கலை ஆனது நான்கு பக்கமும் திறந்ததாக தான் காணப்படுகின்றது. மேலும் இந்த கிரிகண்டு சாய கல்வெட்டுக்கள் பற்றி பார்க்கும் பொழுது இது 08 ஆம் நூற்றாண்டுக்குரியது என்று பரன விதான சூரியண்ண எனும் வரலாற்று ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் கூறுகையில் கிபி. 733 ஆம் ஆண்டு தொடக்கம் 772 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரஜ கல சிலாமேசய எனும் அரசனால் இது புனர் நிர்மாணம் செய்ததாகவும் கூறுகின்றார்.இது 20 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டிருப்பதால் இந்தியா வில் உள்ள பல்லவ அக்ஷர இராஜ்யத்தை ஒத்திருப்பதாக கூறுகின்றார்.
மேலும் மகா வம்சம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கிபி. 1055 தொடக்கம் 1110 இந்தக் காலப்பகுதியில் ஆட்சி செய்த மன்னன் மகா விஜயபாகு கிரிகண்டு சாய வின் சிதைவுப் பகுதிகளை புனர் நிர்மாணம் செய்ததாக கூறப்படுகின்றது.

இந்த புனித பூமியானது மரங்கள் மூலமாகவும் வரலாறுகள் பேச வைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த கிரிகண்டு சாயவில் சுற்றி அமைந்துள்ள மரங்களில் ஓர் வேம்பு மரம் வருடத்தில் ஒரு சில தினங்களில் மட்டும் தன் கசக்கும் தன்மையை இழந்து தனக்கென ஒரு தொன்மையை பதித்துக்கொண்டிருக்கிறது. இதுவே கிரிகண்டு சாய அனைவரையும் தன் பக்கம் அழைக்க முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து விகாரை மண்டபத்தினதும் அதனைச் சூழவுள்ள கட்டிடங்களினதும் இன்றளவும் சிதைவுகள் இருப்பதை எம்மால் உணர முடிகிறது.

கே.அஸீம்

திருகோணமலை 

மேலே தரப்பட்டுள்ள கட்டுரையின் தகவல்கள் மற்றும் தரவு யாவும் எமது நிறுவனத்தின் புலமைசார் சொத்து அல்ல என்பதுடன் இவ் கட்டுரையை எழுதிய நபரையே அது சாரும். இது எமது நிறுவனத்தின் கீழ் செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றின் பகுதியாகவே வெளியிடப்படுகின்றமையும் குறிப்பிடப்படல் வேண்டும்.