Single Project Image

The Story of Unspoken History

கிழக்கிலங்கையின் வடகிலங்கும் திருகோணமலையிலே எழிலெங்கும் எழுந்தோங்க, தொழுபுவியும், எழுகடலும், அழு முகிலும், விழு மழையும் கண்ணெதிரே எதிர்கொள்ள கதிர்வட்டம் நோட்டமிடும் கொட்டியாரக்குடாவின் கரையோர முஸ்லிம் கிராமமே கருமலையூற்று.

கடல் வளத்தை வாழ்வாதாரமாக்கி மீன்பிடியை ஜீவனோபாயமாக்கிய 110 குடும்பங்களை கொண்ட இக் கிராமம் கவர்ச்சிமிகும் கடற்கரைக்குத் தற்சிறப்புற்றது. ஆர்பரிக்கும் ஆழ்கடல் அலைகளெல்லாம் கருமலையூற்று கடற்கரையைக் கண்டதும் ஆரவாரமில்லாது அடங்கி ஒடுங்கி கரையைத் தாண்ட தீண்டிச் செல்லும் அழகு சொல்லுக்கு அப்பாற்பட்டது. அடுக்கடுக்காய் அமையும் அலைகள் மீது மீன்பிடி வள்ளங்களின் சீரிய வரிசைகள் அபரிமித அழகுக்கு அங்கம் வகிக்கும் விதத்தினை விபரித்திட வார்த்தைகளும், வர்ணிப்புக்களும் கோர்த்திட முடியாது.

பளிங்குக் கடற்கரையின் பங்கினையும், செங்கடல் பாங்கினையும் தன்னுளடக்கிய கடலினுள் தெரியும் வெண்மணல் பரப்பும் வனப்பும் பெரும் வியப்பு. தென்னை இளங்கீற்றுக்களை தாலாட்டி, அடம்பன் கொடியிலைகளை மெல்ல வருடி வரும் தென்றல் கருமலையூற்று முன்றலில் எப்போதும் நிலை கொண்டிருக்கும். பெரிய, கரிய பாறைகளும், இயற்கையின் இன்னோரன்ன இயல்புகளும், காண்போரை கண் குளிர செய்யும் பசுமையின் பாத்திரமுமே இக் கிராமத்தின் இருப்பை இன்று கேள்விக் குறியாக மாற்றியிருக்கிறது.

அழகுக்கு அப்பால் அங்கே ஓர் அதிசயம் உண்டு. அது தான் தன் கம்பீரத் தன்மையினால் தன்னையொரு அடையாளமாக்கிய வழிபாட்டுத்தலமொன்றின் தடாகத்தை நிரப்பும் நீரூற்றின் இருக்கை. 4 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்டு இன்று நிர்மூலமாக்கப்பட்டிருக்கும் இக் கட்டட வளாகத்தில் நின்றும் ஊற்றாகும் நீரின் மூலமே தனித் தலைப்பில் ஆய்வுக்குட்படுத்தப்படுமளவிற்கு ஆச்சரிய மிக்கது. வற்றாத அவ்வூற்றின் மூலமே வணக்கஸ்தலத் தடாகத்திற்கு நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதென்பது வியப்பன்றி வேறொன்றில்லை.

பள்ளிவாசல் வளாகத்திற்குள் இருக்கின்ற கற்பிளவொன்றிற்குள்ளேயிருந்து ஒரு நீர் ஊற்று காலாதிகாலமாக வந்து கொண்டிருக்கிறது. மிகவும் தெளிவான, சுவையான, துய்மையான தண்ணீராக அது விளங்குகிறது. அதன் மூலம் எதுவென்று இதுவரை அறிய முடியாதிருக்கின்றது. மட்டுமல்லாமல் அப்பள்ளிவாசலின் சுற்றாடலில் முஸ்லிம் பெரியார்கள் பலரின் அடக்கத்தலங்களும் அங்கே காணப்படுகிறது. இதன் காரணமாக டெண்மென்போ என்று ஆரம்பத்தில் இக்கிராமம் அழைக்கப்பட்டதாக வாய்வழி செய்திகளும் உள்ளன……………………………………………………………………………………………………………………………..

இந்திய சிற்பக்கலையை ஒத்த கட்டட அமைப்பில் உருவாக்கப்பபட்ட இப்பள்ளிவாசலில் தொழுதுகொண்டு, மீன் பிடியை தொழிலாக மேற்கொண்டு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களை உள்நாட்டுக்கலவரம் எதுவும் பெரிதாகத் தாக்கியது கிடையாது. காரணம், இப்பிரதேசம் முப்படைகளின் பாதுகாப்பை எப்போதும் பெற்றுக் கொண்டிருந்தமையும் அடங்கப்பட்டிருக்கும் நற் பெரியார்களின் நல்லுதவி கின்றதென்ற நம்பிக்கையுமாகும்.

உள்நாட்டுப்பாதுகாப்பு தரப்பினால் ஆபத்தேதும் அப்போது இல்லாதிருந்த மக்களுக்கு ஆபத்து வெளிநாட்டில் இருந்து வந்தது. 1988ல் இந்திய அமைதிகாக்கும் படையினர் (IPKF) இலங்கைக்கு வந்தபோது, கருமலையூற்றுக் கிராமத்திலும் அவர்கள் ஒரு முகாமமைத்தனர்.

இதனால் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ஒரு தொகுதி இருப்பிடங்களை இழந்த மக்கள் அகதியாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதுடன் மிகுதி மக்களை பாலியல் சேஸ்டைகளை மேற்கொள்ள முற்பட்டு வெளியேற்றினர்.

எனினும், இந்திய ராணுவத்தினரின் வெளியேற்றத்துடன் அம்மக்கள் தம் பூர்வீக தாயகத்தில் மீள்குடியேறி வாழ்தனர். இவ்வாறு ஒரு தொல்லை தீர மறுபுறம் 1994ம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையயினர் அங்கு வந்து ஒரு முகாமமைத்து, மீன்பிடியில் பாஸ் நடைமறைகளைப்பிரயோகித்து ஜீவனோபாயத்தில் பல கெடு பிடிகளைக் கொண்டு வந்தனர்……………………………………………………………………………………………………………..

இவ்வாறு மிகுந்த கஸ்டங்களோடு வாழ்ந்து கொண்டிரக்கையில் 2004ல் ஏற்பட்ட சுனாமியின் கோரத் தாண்டவத்தினை சந்தித்து தாண்ட வேண்டி ஏற்பட்டது. இதில் இருபத்தைந்து குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் பழமைவாய்ந்த கருமலையூற்றுப் பள்ளியை ஆக்கிரமித்த இந்திய ராணுவத்தினரிடமும், இலங்கைக் கடற்படையினரிடமும் ஒரு பொதுத்தன்மையை நாம் காணலாம். அதாவது, இரதரப்பினருமே அப்பள்ளியில் தொழுகை நடாத்த அனுமதிக்காத அதே நேரம் வருடாந்த கந்தூரியை நடாத்த அனுமதித்திருந்தனர். அன்றைய தினம் மாத்திரம் கம்பிவேலிகள் தற்காலிகமாக அகற்றப்பட்டு பள்ளியுள் சென்று கந்தூரி நடைமுறைகள் எல்லாம் மேற்கொண்டு அவை முற்றுப் பெற்று பிற்பகல் நான்குமணிக்கு மக்கள் வெளியேற்றப்பட்டு விடுவார்கள்.

நிலைமைகள் இவ்வாறு போய்க்கொண்டிருக்கையில், கருமலையூற்றுக் கிராமத்தை நிருவகித்துவரும் பள்ளிவாசல் பரிபாலனசபை, நிலைமைகளை ஜம்மியதுல் உலமாசபைக்கும், வக்புசபைக்கும் அவ்வப்போது எழுத்து மூலம் அறிவித்துக்கொண்டேயிருந்த அதேநேரம், உரிமைக்காவலர்களான அரசியல் வாதிகளுக்கும் அறிவித்துக் கொண்டேயிருந்தனர். அவர்களும் தவறாமல் வழமைபோல தட்டிக்கேட்போம். கட்டிக்காப்போம் என வழமையான வாக்குறுதிகளை இவர்களுக்கும் வழங்கத்தவறவில்லை.

ஆனால் புத்திசாலிகளான இம்மக்கள் அரசியல் வாதிகளிடம் கூறிவிட்டோம் அவர்கள் பேரம் பேசி சாதித்துவிடுவார்கள் என முட்டாள் தனமாக இருந்து விடாமல் கடற்படையினரோடு சந்திப்புக்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தம்வாழ்வை விடுவிக்கக் கோரிக் கொண்டே இருந்தனர்.

அத்தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தின் விளைவாக ‘02ம் திகதி முதலாம் மாதம் 2011ல் உங்கள் கிராமத்தை முழுமையாக தந்து விடுகின்றோம்’ என கடற்படையினர் வாக்குறுதி வழங்கியிருந்தனர். அவ்வாறே அந்நாளும் நெருங்கிவர மக்களும் எதிர்பார்ப்புகளோடும், கனவுகளோடும் காத்திருக்க எண்ணை திரளத் தாழி உடைந்த கதையாக கடற்படை போக இராணுவம் அங்கு வந்து சேர்ந்தது.

அவர்கள் அங்கு ஒரு முகாம் அமைக்க முற்பட்டபோது கடற்படை தாம் மக்களுக்களித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியுள்ளதால் ராணுவத்தினரின் முயற்சியை தடுத்தனர். மேலும், மக்களுக்கு கிராமத்தை வழங்குவதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பே கடற்படையினர் கம்பி வேலிகள் போன்ற தடைகளை நீக்கியிருந்தனர். ஆனால் எல்லாவற்றையும் மீறி ராணுவத்தினர், முன்பு கடற்படையினர் கம்பிவேலிகள் போட்டிருந்த அதே அளவில் கம்பிவேலிகள் போட்டு தமது ஆக்கிரமிப்பை தொடர்ந்துள்ளனர்.

எனினும் சளைக்காத பள்ளிப்பரிபாலனத்தார், மீண்டும் தம் போராட்டத்தை உற்சாகத்துடன் ஆரம்பித்து ராணுவத்தினருடன் பேசிய போது ‘தாம் இப்பிரதேசத்தில் பத்து நாள் பயிற்சி முகாம் ஒன்றையே நடாத்தப்போவதாகவும் பின்பு புறப்பட்டுவிடுவதாகவும்’ கூறியுள்ளனர். ஆனால் இன்றுவரை ஆக்கிரமிப்புத்தொடர்ந்த வண்ணமேயுள்ளது. நாளுக்ககு நாள் பிடி இறுகிக் கொண்டே வருகிறது.

தற்போது கருமலையூற்றுக் கிராமத்தின் சில பகுதிகளை சுற்றி கம்பிவேலி போடப்பட்டுள்ளது. இதனால், பள்ளிவாசலை யாரும் அணுகவோ, சுத்தப்படுத்தவோ, தொழுகை நடாத்தவோ, பெரியார்களின் அடக்கத்தலங்களை சுத்தப்படுத்தவோ, கந்தூரி கொடுக்கவோ மீன்படிக்கவோ, சென்று தம் இருப்பிடங்களில் வாழவோ முடியாதபடி மக்களின் வாழ்க்கை பறிக்கப்பட்டுள்ளதுமட்டுமல்லாமல் தற்போது பொதுமக்களுடனான எந்தவொரு சந்திப்பையும் இராணுவம் தவிர்த்து வருகிறது.

அதற்கு ஒரு பின்னணி இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கருமலையூற்றுக் கிராமத்திற்கு வருகை தந்த ராணுத்தின் உச்ச அதிகாரம் பொருந்திய ஒருவரின் வருகையின் பின்பே இராணுவத்தின் இக்கடும்போக்கு அதிகரித்துள்ளதாக மக்கள் நம்புகின்றனர். மேலும் மக்களது இல்லிடங்களை அழித்து, ஜீவனோபாயமாகிய மீன்பிடியையும் தடுத்து இங்கு உல்லாச ஹோட்டல்கள் அமைத்து காசு சம்பாதிக்கும் பின்னணி இடம்பெறுவதாக மக்கள் கருதுகின்றனர்.

ஏனெனில், தற்போது ஆக்கிரமிக்கப்பட்டள்ள பகுதிக்குள் உள்ள வீடுகள் அனைத்தும் JCB வாகனங்களால் அழிக்கப்படுகின்றன. மக்கள் கூட்டம் ஒன்று நூற்றாண்டு காலமாக வாழ்ந்ததுக்கான அடையாளம் எதுவும் தெரிந்து விடாதபடி வீடுகள் அழிக்கப்பட்டு, அதன் மிச்சம்மீதங்கள் அம்மக்களின் கண்முன்னாலேயே டெக்டர் வாகனங்களில் அள்ளிச்செல்லப்படுவதைக் கண்டு கேட்பார் பார்ப்பாரின்றிக் கண்ணீர்வடித்துக் கொண்டிருக்கின்றனர். இனி கருமலையூற்றுக் கிராமம் என்ற ஒன்று இல்லை எனும் அளவுக்கு காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனாலும் இம்மக்கள் தம் மண்ணுக்கான போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. கருமலையூற்றுக்கான பூர்வீக உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களை அவர்கள் சேகரித்தவண்ணமுள்ளனர். அந்தவகையில் பல தரப்பட்ட ஆவணங்கள் அவர்களது கைவசமுள்ளன.

ஆக, மிகப்பழைமை வாய்ந்த பள்ளிவாசலும் அதனோடினைந்த அதிசய நீருற்று, பெரியார்களின் அடக்கத்தலங்கள் உட்பட ஒரு கிராமமே அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால், ‘இலங்கை எல்லோருக்குமானது. எல்லோரும் தம் கிராமங்களில் சுதந்திரமாக மீள் குடியேறி வாழலாம்’ என்ற அறைகூவல் நாளாந்தம் ஒலித்தக் கொண்டேயிருக்கிறது. அதேநேரம் உள்ளுர் உரிமைக்காவலர்கள் முதல் தேசிய மட்ட உரிமைக்காவலர்கள் வரை அறிக்கைகளுடனேயே அடங்கிப் போகும் கேவலமே இன்னும் தொடர்ந்த வண்ணமுள்ளது.

போருக்குப்பிந்திய இலங்கையில் முஸ்லிம்களின் இருப்பு நாளாந்தம் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் ‘போரொழிந்தது. இனி எல்லாம் சுகமே…’என்ற சூழ்நிலை அல்லது எதிர்பார்ப்பு என்பது முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. ஆக, வெடியும் முழக்கங்களும் தான் ஓய்ந்திருக்கிறதே தவிர முஸ்லிம்களது மீள்குடியேற்றமானது, அச்சுறுத்தல் நிறைந்ததாகவே தொடர்கிறது.

மாற்றத்தை உற்று நோக்கியதாகவே கழிகின்றன இக் கிராமத்து பூர்வீகக் குடிகளின் பொழுதுகள். விடியலுக்காய் விண் நோக்கி அண்ணார்ந்து பார்த்திருக்கும் இவர்களின் கதையே இன்னும், இன்றும் பேசப்படாத வரலாறு. …………………………………………………………….

பேசப்படாத வரலாறு

திருகோணமலை

மேலே தரப்பட்டுள்ள கட்டுரையின் தகவல்கள் மற்றும் தரவு யாவும் எமது நிறுவனத்தின் புலமைசார் சொத்து அல்ல என்பதுடன் இவ் கட்டுரையை எழுதிய நபரையே அது சாரும். இது எமது நிறுவனத்தின் கீழ் செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றின் பகுதியாகவே வெளியிடப்படுகின்றமையும் குறிப்பிடப்படல் வேண்டும்.