அதிகளவில் அரசல் புரசலாகவும் ஆங்காங்கே ஆழமானதாகவும் தற்போதைய நாட்களில் திரும்பிய திசையெல்லாம் அரசியல் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. பலரது பதிவுகள் சிரிக்கச் செய்தாலும் சில சிந்திக்க வைக்கவும் தவறுவதில்லை. நாட்டின் இந்த அரசியல் ஸ்திரமற்ற நிலை அனைவரையும் அதைப்பற்றி பேச வைத்திருப்பது ஆரோக்கியமானதே….
“வேப்பம்பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி” என்ற வரியை மேற்கூறிய சந்தர்ப்பத்துடன் சம்பந்தப்படுத்திக் கொண்டு விடயத்தினுள் நுழைகிறேன்.

இன்றைய நம் நாட்டின் பிரச்சினை என்ன ? சற்றே சிந்தியுங்கள்….
“ஒன்றா ? இரண்டா ? எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா ?” என்கின்ற உங்கள் உள்ளக் குமுறல்கள் என் செவிகளுக்கு எட்டாமல் இல்லை. வினாவை வாசிக்கையில் எனக்கும் அதே வரிகள் தான் வாயில் வந்து செல்கின்றன.
சரி கேள்விக்கு என்ன பதில் எனக் கேட்டால் பஞ்சம் என்பதே பலரின் கருத்தாக இருக்கும்.

இங்கே நம் நாட்டின் பிரச்சினை ‘பஞ்சம்’ என்பதை ஏற்றாக வேண்டிய சூழ்நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கிறேன்…இல்லை நாம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம். ஆசியாவின் அதிசயம் என்றும் இந்து சமுத்திரத்தின் இரத்தினம் என்றும் எல்லோராலும் கொண்டாடப்பட்ட வல்லரசுகளின் செல்லப்பிள்ளை இன்று உலகுக்கே தொல்லைப் பிள்ளையாய் போன கதையைக் கேட்டால் இதயம் இலேசாய் கனக்கத்தான் செய்யும். இதற்கான காரணங்களை ஆராயப் போனால் அடுக்கிக் கொண்டே போகலாம் ஆனால் அதை ஆவணப்படுத்த தனிப்படை அமைத்தாலும் கூட சற்றே சிரமம் தான்…..ஏனெனின் ஆரம்பம் முதல் அழிவு வரை அத்தனை காரணங்களும் இணைந்து தான் இன்றைய இந்த இழிநிலையை எமக்கு பரிசளித்து இருக்கின்றன. இதைவிடுத்து தனியொரு மனிதனையோ, தனிப்பட்ட தரப்பினரையோ சாடிக்கொள்வதில் எனக்கு கடுகளவும் உடன்பாடில்லை.

நாட்டின் இந்நிலைக்கு நாம் அனைவருமே பொறுப்பென்ற உண்மையை உணர்வதே உசிதம். எமது நாட்டிலே ஏற்பட்டிருப்பது பெரும் பஞ்சம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் எதில் பஞ்சம் ? இன்று பொருளாதார ரீதியாக ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி மட்டும் அதிகம் அலட்டிக் கொள்வதால் பயனில்லை. அடி முதல் நுனி வரை அனைத்திலும் பஞ்சம் என்பதே நிராகரிக்க முடியாத நிஜம். அரசியலில் பஞ்சம், தலைமைத்துவத்தில் பஞ்சம், கல்வியில் பஞ்சம், கலையிலும் பஞ்சம் இவ்வாறு பஞ்சத்துக்கு மாத்திரமே இங்கு பஞ்சமில்லை. பொருளாதார நிலையில் ஏற்பட்ட வங்குரோத்து நிலைக்கு அரச இயந்திரங்களையும் அதிகாரத்திலுள்ளவர்களையும் குற்றம்சாட்டினாலும் ஏனைய பஞ்சங்களுக்கான எல்லாப் பொறுப்பையும் நானும் நீயும் ஏற்றாக வேண்டும். இயலாதவர்களாக நாமிருந்து கொண்டு இருப்பவர்களை இகழ்வது சிறுபிள்ளைத்தனமே.

அரசியலை ஆபாசம் போல் ஆக்கி அதை பொதுவெளியில் பேச மறுத்தது யார் தவறு ?
அரசியலை அழுக்கு என்று அடையாளப்படுத்தி எட்ட நின்று வேடிக்கை பார்த்தது யார் தவறு ?
அது ஒரு சாக்கடை என்று சாக்குப்போக்கு சொல்லி கால் வைக்க பயந்தது யார் தவறு ?
தலைமைத்துவம் என்பதன் பொருளறியாதவர்களை தலைவர்கள் என்று கொண்டாடியது யார் தவறு ? ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான ஒரு தொழிலாக அரசியலை ஆக்கிவிட்டு அழகுபார்த்தது யார் தவறு ?
கொள்கைகளை மறந்து தேர்தல் நேரத்து தீனிகளுக்கு விலைபோனது யார் தவறு ?

தவறுகள் ஏராளம் தனக்குள் இருக்க பிறரை நோக்கி விரல் நீட்டுவது வீண் செயல் என்பதை உணராவிடின் உய்வது சிரமமே. கதிரைகளைச் சூடாக்குவது தான் அரசியல் என்ற அடிமுட்டாள்தனமான கருத்தை உங்களிடமிருந்து தூர எறியுங்கள். தேர்தல் அரசியலோடு தேங்கி விடாமல் அரசியலின் ஆழத்தை அறிந்து அதைப் பொதுவெளியில் பேச தொடங்குங்கள். அரசியல் என்பது ஆட்சியாளர்களின் தனியுடமையல்ல அது ஒவ்வொரு குடிமகனுக்குமான உரிமை, கூடவே தேசக்கடமையும். அரசியல் தெளிவு அனைவருக்கும் ஏற்படின் ஒழுங்கீனங்கள் குன்றி ஆரோக்கியமான ஆட்சி மலரும் என்பதில் ஐயமில்லை. அரசியல் பொதுவுடமையாக்கப்படும் வரை மேலும் மேம்பட வாய்ப்பில்லை
நாமும் தான் அரசியலும் தான்.