Single Project Image

The story of Agrarian Traditions

(சம்மாந்துறையில் நவீனத்துவ வருகையினால் மருகிப்போன விவசாய பாரம்பரியங்கள்)

சம்மாந்துறையில் நவீனத்துவ வருகையினால் மருகிப்போன விவசாய பாரம்பரியங்கள்

உலகப் பொருளாதார வரலாற்றில் வளர்ச்சி பெற்று முன்னிலை வகிக்கின்ற முதலாம், இரண்டாம் மண்டல நாடுகளில் அனேகமானவை விவசாயத் துறையினுடாக வளர்ச்சியடைந்த நாடுகளாகவே காணப்படுகின்றன. இதேவேளை அபிவிருத்தி அடைந்து வருகின்ற மூன்றாம் மண்டல நாடுகள் இன்றும் கூட விவசாயத்துறையைச் சார்ந்த நாடுகளாக காணப்படுகின்றமை அவற்றினது பொதுப்பண்பாகும். இவ்வகையில் இலங்கையும் இதற்கு விதி விலக்கல்ல .

இலங்கையின் புவியியல் அமைப்பு, காலநிலை என்பன யாவும் விவசாயத்திற்கு ஏற்றனவாகக் காணப்படுவதுதான் இன்றும்கூட இலங்கை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடாகக் காணப்படுவதற்குப் பிரதான காரணமாகும். இத்தகைய இலங்கைத் தீவில் உள்ளடக்கப்பட்டுள்ள விவசாயத்திற்குப் பெயர்பெற்ற மிக முக்கிய மாவட்டங்களில் ஒன்றுதான் அம்பாறை மாவட்டமாகும். நெற்செய்கையில் பிரதான பங்கை வகிப்பதுவே அம்பாறை மாவட்டம் விவசாயத்தில் முன்னுரிமை வகிப்பதற்கான காரணமாகும. இலங்கையின் மொத்த நெல் உற்பத்தியில் 20 சதவீதத்தை அல்லது 1: 5 பங்கை இம்மாவட்டமே வழங்குகின்றது.

அத்துடன் இங்கு வாழும் மொத்த சனத்தொகையில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இப்பயிர்ச் செய்கையுடனேயே இணைந்து காணப்படுகின்றனர். இம்மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கிராமங்களில் ஒன்றுதான் சம்மாந்துறைக் கிராமமாகும். இம்மாவட்டத்தின் கரையோரப்பகுதிக்கு மேற்குப் புறமாக இக்கிராமம் அமைந்துள்ளது. நெற்களஞ்சியமாக விளங்கும் சம்மாந்துறையைச் சுற்றிவர முற்றிலும் நெல் வயல் நிலங்கள் காணப்படுகின்றமை விடே அம்சமாகும். சம்மாந்துறையில் அன்று வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையினர் இப்பயிர்ச் செய்கையுடனேயே நெருக்கமாக இருந்துள்ளனர் என்பதற்கு இது தகுந்த சான்றாகும் .

ஆதிகாலம் தொட்டு மன்னர் கால ஆட்சி வரையில் நாட்டின் முக்கிய கைத்தொழில் நடவடிக்கையிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் விவசாயம் முக்கிய இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.இந்த வகையில் இந்த விவசாயம் இனிமேல் எனும் நெற்பயிர்ச்செய்கையானது ஆரம்பகட்டம் தொடக்கம் அறுவடை என்னும் இறுதிக்கட்டம் வரை நவீனத்துவ வருகை காரணமாக பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது.

விவசாயத்தின் முக்கிய நோக்கம் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதே ஆகும் நெல் மூலம் அரிசி உருவாக்கி உணவுத்தேவையை பூர்த்தி செய்வதே பிரதான தொழில் .அரிசி என்பது இலங்கையின் பிரதான உணவாகும் .மேலும் விவசாய தொழிலில் நெல் சாகுபடிக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. மற்றும் பாரம்பரிய விவசாயிகள் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றவர்கள் மற்றும் பண்டை இலங்கை உலகில் நெல் ஏற்றுமதியாளர்களில் முன்னணி இருந்ததாக கூறப்படுகின்றது. இலங்கை மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் நெல் உற்பத்தி செழித்தது. அவர்கள் பல்வேறு வழிகளில் உற்பத்தியை வளர்த்து வந்தனர். குறிப்பாக பெரிய அளவிலான நீர்ப்பாசன குளங்களை முன்வைப்பதன் மூலம் நீர் வழங்கல் இலங்கை பிரபலமாக தி கிரேட் பார்ன் ஹைற்றொலிக் கட்டுமானம் மற்றும் விவசாயத்திற்கு உதவுவதற்காக புதுப்பித்தல் ஆகிவற்றில் புகழ்பெற்ற மன்னர் பராக்கிரமபாகு ஆட்சிகாலத்தில் பண்டைய மற்றும் பாரம்பரிய நெல் சாகுபடி முறைகள் முற்றிலுமாக இருந்தன. சுற்றியுள்ள சூழலுக்கும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை.

மேலும் பண்டைய காலங்களில் இருந்து விவசாயிகள் நெல் பயிரிடும் நிலங்கள் “கும்புறா அல்லது கேதா “என்று அழைக்கப்பட்டது. ஒரு கும்புறாவின் ஒரு பகுதி அல்லது ஒரு விவசாயிக்கு சொந்தமான ஒரு பெரிய நெல் பாதை வண்டு வீதி என்று அழைக்கப்படும். பண்டைய காலங்களில் கும்புறா இரண்டு முனைகளிலும் 2 கன்னெட்டி அமைந்துள்ளது. ”குருலுபாலுவ” என்று அழைக்கப்படும் இந்த பகுதிகள் பறவைகளுக்கு உணவு அளிக்க அர்ப்பணிக்கப்பட்டவை. பறவைகளுக்கு இந்த உணவளிக்கும் இடங்களை வழங்குவதன் மூலம் நெல் மீதான அச்சுறுத்தல் குறைக்கப்படும் என்று பண்டை விவசாயிகள் நம்பினர். பண்டைய விவசாயிகள் கடைப்பிடிக்கும் பல நடைமுறைகளுள் குருலுபாலுவ ஒன்றாகும். பண்டைய விவசாயிய நடைமுறைகளுள் பெரும்பாலானவை இயற்கையோடு இணக்கமாக காணப்பட்டன. அத்தோடு சுற்றுச்சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் எந்த சேதமும் ஏற்படாத வகையில் காணப்பட்டன. இன்றைய காலகட்டங்களில் காணப்படும் வயல் நிலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் ஒன்றும் காணப்படுவதில்லை.நவீனத்துவ விவசாயத்தில் இயற்கைக்கு புறம்பாகவே காப்படுகின்றது.

நெல் விவசாயத்தில் முதற்கட்டமாக நிலத்தை பண்படுத்தல் நிலத்தைத் தயார் போன்ற செயற்பாடுகள் நடைபெறும். இது அன்றைய காலத்தில் “சாமா” என்று அழைக்கப்பட்டது. இது பண்டைக் காலங்களில் ஏர் மற்றும் எருதுகளை பயன்படுத்தி நிலம் பண்படுத்தப்பட்டது.இந்த செயற்பாட்டை செய்வதற்கு முன்னர் அக்கால மக்கள் திருவிழாக்களில் சாமா சடங்கு என்று பல மத சடங்குகள் கடைபிடிக்கப்பட்டன.

இன்றைய காலத்தில் அப்படியான சடங்குகள் சம்பிரதாயங்கள் மூட நம்பிக்கைகள் என்று சொல்லி அழிந்து விட்டது. இன்றைய காலத்தில் நிலம் பதமான நிலையில் இருந்தால் உழவு இயந்திரம் மூலம் கூறிவிட்டு வந்து விடுகிறார்கள்.

நிலத்தை பண்படுத்தல் பிரதான நோக்கம் ஆரம்பத்தில் நெற்செய்கை நிலத்திற் காணப்படும் புற்களை வேறு வகையான நெற் பயிர்கள் எல்லாவற்றையும் அழித்தற்கும் மற்றும் மண்ணின் காற்றிடைவெளிகளை அதிகரிப்பதற்கும், பயிர்களில் வேர்கள் ஊடுருவி நிலத்தில் பற்றிப்பிடிப்பதற்கும் இச் செயற்பாடு செய்யப்படுகின்றது.

அடுத்ததாக மண்ணை வளப்படுத்தும் செயற்பாடு காணப்பட்டது. அதற்காக அன்றைய கால மக்கள் நெல்வயல்களில் மண்ணை வளப்படுத்த எதுவித இரசாயனங்களோ அல்லது நச்சுக்களோ பயன்படுத்தவில்லை.பண்டைய மற்றும் பாரம்பரிய விவசாயிகள் தங்கள் நிலத்தை வளப்படுத்த சேதனக் கழிவுகள் இலைகள் மற்றும் சிதைந்த வைகோல் ஆகியவற்றை பயன்படுத்தினர்.மதத்தினர் மேலும் இந்த சேதன உரங்கள் மண்ணின்; நுண்நுயிர்; செயல்பாட்டை மேம்படுத்தின. பீடைகளை கொல்லுவதற்காக உயிர்ப் பொறிகளையும் நிர்மாணித்தனர்.இன்றைய ;கால மக்கள் இயற்கை உரங்களுக்கு பதிலாக செயற்கையாக தயாரிக்கப்படும் உரங்களை பயன்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக நெற்பயிர்களை நடுவதற்கு முன் பயன்படுத்தப்படும் உரங்களாக யூரியா டிஎஸ்பி போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

அடுத்ததாக பண்படுத்தி;க் காணப்படும்; நிலத்தை மட்டமாக்கல் செயற்பாடு நடைபெறும். இச் செயற்பாடு அக்கால மக்களால் அழைக்கப்பட்ட பெயர் போகு காமா என்று அழைக்கப்பட்டது. இந்த செயற்பாடு நெல் வயல்களை பண்படுத்தி உரமாக்குவதற்கு சில வாரங்களுக்குப் பிறகு செய்யப்படுகின்றது. இந்த செயற்பாட்டின் நோக்கம் காணியின் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான நீரோட்டத்தை ஏற்படுத்துவதற்காகும்.

அக்கால மக்கள் நெற்பயிர்களை நடுவதற்கு முன் வயல்களில் வாடி என்று அழைக்கப்படும் சிறு குடிசை அமைத்து தண்ணீர் வசதிக்காக கிணறு போன்றவற்றை தமது வயல்களில் அமைக்கும் பழக்கத்தை கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இதன் நோக்கம் அவர்களுடைய களைப்பான நேரங்களை; கழிப்பதற்கும் வயல்கள் விதைப்பு, அறுவடையின்போது பிராணிகளிடமிருந்து எத்தனை காப்பாற்றுவதற்கு காவல் காக்கும் இடமாகவும் பாவித்தனர். மேலும் வரம்புகளில் கிளிசரிடியா போன்ற தாவரங்களை நட்டார்கள். அக்கால மக்கள் வாடி அமைப்பதற்கு வயல்களில் சிறு பகுதியை அமைப்பாய் பேக் அமைத்தனர். இக்காலத்தில் அப்படியான ஒரு செயற்பாடு மருகி போய்விட்டது. சீனாவில் இக்கால மக்கள் ஓய்வு நேரம் என்கின்ற ஒன்று இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்தகட்டமாக விதைகளை விதைத்தல் அல்லது மரக் கன்றுகளை நடுதல் காணப்பட்டது. மரக்கன்றுகளை நடும் செயற்பாடு ஆதி காலங்களில் காணப்பட்டது இந்த செயற்பாடானது பயிர் கன்றுகளை ஓரிடத்தில் விதியை இட்டு முளைக்க வைத்து அதன் பிற்பாடு அதனை தேவையான இடத்தில் பெண்களைக் கொண்டு கையால் நாட்டினார்கள். ஆனால் இவ்வாறான செயற்பாடு இன்று எங்களது பிரதேசத்தில் மருகி போய்விட்டது. இதற்குப் புறம்பாக கைகளினால் விதைகளை வீசி விதைக்கும் செயற்பாடு காணப்படுகின்றது.

அன்று மக்கள் குண்டா மாற்று இன்னும் முறையை எல்லா செயற்பாடுகளிலும் கடைப்பிடித்தனர் உதாரணமாக உணவு வேலை போன்றன. குறிப்பாக குறிப்பிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒருவருடைய வயலில் சென்று அவருடைய வேலைகளை செய்து முடிப்பர். அடுத்த நாள் எல்லோரும் அடுத்த ஒருவரின் வயலில் சென்று ஒற்றுமையாக காணப்பட்டனர். இவ்வாறான செயற்பாடு இன்றைய காலத்தில் அழிந்து போய்விட்டது. பணம் படைத்தோர் மட்டும் வேலையாட்களைக் கொண்டு தங்கள் வேலைகளை செய்து முடிக்கின்றனர். பயிர்களை நடும் முறையில் விதைகளை வீசி விதைக்கும் செயற்பாடு காணப்பட்டது. இந்த முறையை இன்றைய கால மக்கள் பயன்படுத்துகின்றனர். விதைத்தல் செயற்பாடானது இரண்டு பிரிவாக காணப்படுகின்றது. சேட்டு, அடிப்பு மறுத்தல் என இரண்டு வகையாக காணப்படுகின்றது.

மறுத்தல்

இந்த செயற்பாடானது மாரி காலங்களில் செய்யப்படும் விவசாய முறையாக காணப்படுகின்றது. இது தண்ணீர் இல்லாமல் வரண்டு காணப்படும் நிலங்களில் நிலத்தை உழுது விட்டு நெல்மணிகளை வீசி எறிந்த பின் மீண்டும் நிலைத்திணை உழுது நெல்மணிகளை மண்ணினால் மூடிவிடும் செயற்பாடு ஆகும். இந்த செயற்பாட்டில் புட்கள் மற்றும் கலை விதைகள் என்பன கட்டுப்படுத்தப்படும். மேலும் இந்த செயற்பாடு மழை நீரை மட்டுமே நம்பி செய்யப்படும் முறை இது மாரி காலங்களில் மட்டுமே பெரும்பாலும் செய்யப்படும். இதன் முக்கிய அம்சம் ஆதி காலங்களில் ஏர் மற்றும் எருதுகளைக் கொண்டு நடைபெற்றது. இன்று இயந்திரங்களின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

சேற்று விதைப்பு

வயலில் ஒரு முறை பண்படுத்திவிட்டு நீர்பாய்ச்சப்படும். இதன் மூலம் களைகள் அளிக்கப்படும். அதன் பிற்பாடு மீண்டும் ஒரு முறை நிலத்தினை பண்படுத்துவார்கள். இது இரண்டாம் அடிப்பு எனப்படும். இதற்கு விவசாயிகள் அரவு என்றும் சொல்லுவார்கள். இதன் பிற்பாடு நீரில் 24 மணித்தியாலங்கள் இழகிய விதைகளை மீண்டும் ஒரு முறை நிலத்தினை பண்படுத்தி அதன் பிற்பாடு எருதுகளைக் கொண்டு பல்லு கலப்பை மூலம் நிலத்தினை மட்டமாகச் செய்து விதைகளை வீசி விதைப்பார்கள்.

பண்டைய கால சில நடைமுறைகள்

காணிக்கு சொந்தக்காரனான போடியார்களிடம் கூலிக்காரர்கள் வயல் வேலைகளை செய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே போடியார்களிடம் போக்குவரத்து செய்து குறிப்பிட்ட வயலில் செய்கை பண்ண கேட்பார்கள். வயல் சொந்தக்காரர்களும உடன் பதில் சொல்லாமல் பார்ப்போம் எப்போ என்று சொல்லி நாட்களை கடத்துவார்கள். இதற்கு இடையில் அவரது பெயர் விபரம் மனைவி பிள்ளை என்று குடும்ப விபரத்தினை வயல் சொந்தக்காரர்கள் கேட்டு அறிவார்கள். வயல் கேட்டு வருபவரிடம் வயல் சொந்தக்காரர்கள் சிறுசிறு குடும்ப வேலைகளை சொல்லுவார்கள். இதை வைத்து அவனை மதிப்பீடு செய்து கொள்ளுவார்கள்.

மேலும் அவரது மனைவி வரச்சொல்லி மா இடித்தல், தேங்காய் துருவுதல் போன்ற வேலைகளை செய்யச் சொல்லுவார்கள். வயல் சொந்தக்காரரின் மனைவி திருப்திப்படுத்துமாறு இருந்தாள் அப்போடியாரின் நேர்முகப் பரீட்சையில் சித்தி அடைந்தால்தான் அவனுக்கு விவசாயம் செய்கை பண்ண கிடைக்கும்.

  1. நாளுக்கு மண் வைத்தல்

    போடியார் வயல்காரனிடம் மண்வெட்டியை கொடுத்து குறிப்பிட்ட நாளைச் சொல்லி அந்த நாள் நல்ல நாள் மண் வைத்து விட்டு வா என்று சொல்லுவார். போடியார் சொன்ன நாளில் வைட் காரன் மண்வெட்டியுடன் வயலுக்கு சென்று கிழக்கு மேற்காக செல்லும் நேர் வரம்பில் கிப்லா திசையில் வரம்பு ஓரமாக வலது புறமாகக் இறங்கி மூன்று முறை வயலில் மண்வெட்டி மூலம் மண்ணை வெட்டி பிஸ்மி சொல்லி மண்ணை வைப்பார் இதுதான் நாளுக்கு மண் வைத்தல் என்பர்.

    பின்னர் வயதுக்காரன் வீடு வந்து குளித்துவிட்டு மனைவி தயாராக வைத்திருக்கும் ரொட்டியை பள்ளிவாசல் முஅத்தின் மௌலவி இடம் கொடுத்துவிட்டு துஆ ஓதிய பின்பு வீடு திரும்புவார். மேலும் ஆரம்ப காலத்தில் முருங்கைக்காயன், பச்சை பெருமாள் போன்ற 4மாத நெல் இனங்களே பயன்படுத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து கொழும்பு வெள்ளையன் மூன்று மாதம், வெள்ளை இலங்கலையன், சீனெட்டி இரண்டரை மாதம், குறவன் கசட்டை, பகருத்த வண்ணன், கருப்பு வெள்ளையன்இ போன்ற நெல் இனங்களே பொதுவாக விதைக்கப்பட்ட நெல் இடங்களாகும். விதைத்து {8-10 நாட்களுக்குள் பக்குவ தண்ணீர் கட்டுவார்கள். கண்கள் முளைப்பதை கட்டுப்படுத்தும். பின் நீரை வடியவிட்டு பயிரை சிறிது வளரவிட்டு மீண்டும் கண் அளவு நீர் கட்டுவார்கள். அதாவது வேளாண்மையில் மிகச்சிறிய பகுதி மட்டும் வெளியில் தெரிய நீரை கட்டுவதாகும் களை மிக சிறப்பாக கட்டுப்படும்.

    நோய்

    ஆரம்ப காலங்களில் அம்மு கன்னி, புழு தாக்கம் ஆகி நோய்களே அதிகளவில் காணப்பட்டன. இவற்றுக்கு எமது பண்டைய கால மக்கள் பல்வேறு வகையான மருந்துகளை கண்டு பிடித்திருந்தனர். தண்ணீர் ஓதி அத்தண்ணீரை தண்ணீர் பாயும் இடத்தில் ஊற்றி விடுவார்கள். அனேகமானோர் சாம்பல் மற்றும் கோழியின் மலத்தையும் பயன்படுத்தினர் அக்கால மக்கள் நோய்களுக்கு இயற்கையான மருந்துகளை பயன்படுத்தினர் மேலும் வேம்பு மரத்தின் இலையும் இதுக்காக பயன்படுத்தப்பட்டனர்.

    1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்று இரசாயன மருந்து உபயோகமாகும். இதன் பின்னரே மக்கள் பழைய நடவடிக்கைகளை கைவிட்டனர். தற்போது சம்மாந்துறையில் 100% விவசாயிகளுக்கு இரசாயன மருந்துகளை உபயோகிக்கின்றனர்.

    வட்டைக் கந்தூரி

    வயல் அறுவடை செய்யும் காலம் வந்தவுடன் அறுவடைக்கு முன் கந்தூரி கொடுப்பது வழக்கமாக இருந்தது. வயல் உரிமையாளர் யாவரிடமும் காசு அறவிட்டு மாடு மற்றும் ஏனைய சாமான்களும் வாங்கப்பட்டு கந்தூரி கொடுப்பதற்கு முதல் நாள் பக்கீர்சாயிப் சகிதம் சம்மாந்துறையிலிருந்து மல்கம்பிட்டியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்குச் செல்வர். மறுநாள் கந்தூரி கொடுப்படும். இக்கந்தூரியில் பொதுவாக வட்டையில் உள்ள சகலரும் தவறாது பங்குபற்றுவர். சிறப்பானதும் கல கலப்பான நாளாக இந்நாள் அக்காலத்தில் காணப்பட்டது. பின் ஒவ்வொரு வட்டையும் அந்தந்த வட்டையில் கந்தூரி கொடுத்து அப்போக விளைச்சலைத் தந்த இறைவனை நன்றி கூறிப் பிரார்த்திக்கும் நடைமுறை இருந்தது. தற்போதும் சில இடங்களில் சிறிய அளவில் இது செய்யப்படுகின்றது. விவசாயிகள் சாப்பிட்டுவிட்டு வீடுகளுக்கும் எடுத்துச் சென்று குடும்பத்தவருக்கும் கொடுத்து உண்டு மகிழ்வதும் வழக்கமாகக் காணப்பட்டது. இக்கந்தூரி நடைமுறை இன்றும் கூட ஒரு சில வட்டைகளில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

    அறுவடையும் சூடடிப்பும்

    வேளாண்மை விளைந்தவுடன் அறுவடை செய்யப்படும் . அறுவடை செய்வது வழமையாக தத்திக்காரர்கள் ஆகும் . தத்திக்காரர்கள் என்பது வேளாண்மை அரிகின்ற நடவடிக்கையில் ஈடுபடும் ஒரு குழுவினரைக் குறிக்கும். இக்குழுவினது எண்ணிக்கை தத்திக்கு தந்தி வேறுபட்டுக் காணப்படும். பொதுவாக 15 பேருக்கு மேல் காணப்படும். வயல்காறர் போடியின் அனுமதியுடன் தந்தியை ஆயத்தம் செய்வார். அவர்கள் போடியுடன் பேசி வயலை அரிந்து சூடு வைத்துக் கொடுப்பர். இவர்களுக்கான கூலியானது சூடு மிதித்தலின் பின்னரே வழங்கப்படும். தற்போதைய நிலைமையைப் போலல்லாது கூலி நெல் வடிவில் மாத்திரமன்றி விளைச்சலுக்கு ஏற்பவும் வழங்கப்பட்டது.

    சூடு மிதித்தலின் பின் முகாமைக்காறர் போடியின் வீட்டுக்கு சாக்குடன் செல்வார். பொதுவாக ஏக்கருக்கு 4 அல்லது 5 அவணம் விளைந்தால் வெட்டுக் கூலி 4 அல்லது 5 மரைக்கால் வழங்கப்படும் . 1925ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு ஏக்கருக்கான கூலி விதைப்பாக நிரணயிக்கப்பட்டிருந்தது. அதாவது வெட்டிக் கட்டி சூடு வைக்க விதைப்பு அளவு நெல் கொடுக்கப்பட்டது. .

    குடு மிதித்தல் அறுவடை செய்து சூடு குவித்ததன் பின்பு வயற்காரர் களவெட்டியைச் சுத்தம் செய்வார் இ களவெட்டி என்பது சூடு மிதிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு இடமாகும். இது சூடு வைக்கப்பட்டிருக்கும் வரவையில் அமைக்கப்படும் . இது வட்டவடிவமாகக் காணப்படும். இதன் விட்டம் சுமார் 60 – 70 அடியாகும். இக்களவெட்டி உரிய வயற்காரரினால் நன்றாகச் செருக்கப்பட்டு சூடு மிதிப்பதற்கு ஏற்றவாறு நன்றாகச் சத்தம் செய்யப்படும். இதற்காக வயற்காரர் காட்டுக்குச் சென்று பன்ன மலாறு வெட்டி வந்துகோலம் இ கட்ட மலாறு போன்றவற்றைத் தயார்செய்து அதன் துணையுடன் சுத்தம் செய்வது பொதுவான வழக்கமாகக் காணப்பட்டது. இதன்பின் தண்ணீர் தெளித்து மாடு சாய்த்துக் களவெட்டி செப்பனிடப்படும். இதன் பின்புதான் வயற்காரர் போடியிடம் வந்து சூடு மிதிக்க ஆயத்தம் செய்யுமாறு வேண்டிக் கொள்வார். அதன்பின் சூடு மிதிப்பதற்காக 5 பேர் ஆட்களும் 5 பிணையல் மாடு மற்றும் அதனைச் சாய்ப்பதற்காக ஒரு பெடியளையும் தயார்படுத்திக் கொண்டு ஏனைய சகல சாப்பாட்டுக்குரிய சாமான்களுடன் பின்னேரம் 3 மணியளவில் மாட்டு வண்டிலில் சாமான்களை ஏற்றிக் கொண்டு செல்வர் இ செல்லும் போது லெப்பைமாரிடம் எழுதி எடுக்கப்பட்ட 8 இஸ்ம் எடுத்துக் கொண்டு செல்வது வழக்கம், வயலுக்குச் சென்றவுடன் 4 இல்ம்களைக் களவெட்டி வரலையின் நான்கு மூலைகளிலும் கம்பு நாட்டி அதில் கட்டித் தொங்க விடப்படும்.

    ஏனைய நான்கும் பொலிக் கும்பத்தைப் பாதுகாப்பதற்காகப் பின்னர் பயன்படுத்தப்படும் . பொலி என்பது நெல் ஐக் குறிக்கும். சூடு மிதிக்கச் செல்லும்போது பொலி முட்டி ஒன்றும் எடுத்துச் செல்லப்படும். இதில் தண்ணீர் எடுத்து முடக்கத்தான் கொடி, பத்திரக் கொத்து போன்றவற்றை எடுத்து தன் ணீரில் தொட்டு தெளிப்பதன் மூலம் களவெட்டி வரவை முதலில் காவல் செய்யப்படும். இதன் பின்புதான் சூடு மிதிப்பு வேலைகள் ஆரம்பமாகும் .5 பேரில் இருவர் சூட்டின் மேல் ஏறி சூட்டை இழுவைக் கம்பில் தள்ளுவார். இழுவைக் கம்பென்பது நெற்கதிரைக் கொண்ட உப்பெட்டிகளை எடுத்துச் சென்று களவெட்டியில் குவிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கம்பாகும். இதன் நீளம் சுமார் 10 அடியாகும். கீழே ஏனைய நான்கு பேரும் இருவர் இருவராக உப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு குவிப்பர் . ஒரு நாள் சூடு மிதிப்பதற்காக மொத்தமாக 40 45 இழுவை கொண்ட உப்பெட்டிகள் பயன்படுத்தப்படும் . நிச்சயமாக ஒரு இழுவை கொண்ட உப்பெட்டிகள் இன்றைய கால கட்டத்தில் மூன்று நெற்கதிர் கட்டுகளுக்குச் சமம் எனலாம்.

    இவ்வகையில் ஒரு நாள் சூடு மிதிக்க ஒரு நபருக்கு 25 கட்டுகள் மூலம் மொத்தமாக 125 கட்டுகள் பயன்படுத்தப்படும். நெற்கதிர்கள் களவெட்டியில் குவிக்கப்பட்டபின் வயற்காரர் முதலில் ஒரு பிணையல் மாட்டுடன் குவியலின் மேல் ஏறி பொலியம்மா பொலி, பொலிவம்மா பொலி என்று மாட்டைச் சாய்ப்பார் சற்று நேரத்தின் பின் மாடு சாய்ப்பதற்காகக் கூட்டி வரப்பட்ட பெடியளிடம் சாய்ப்பதற்காகக் கொடுக்கப்படும். இதனிடையே தேநீர் பரிமாறப்படும் பின்பு இருவர் மீன் பிடிக்கச் செல்வர் இ மற்றவர்கள் சமைக்கும் வேலைகளில் ஈடுபடுவர். சமைத்து சாப்பிட்டதன் பின் மற்றவர்கள் எல்லோரும் சேர்ந்து கந்தை கிண்டிப் போடுவர். அதன்பின் ஒவ்வொருவராக மாடு சாய்ப்பர். மாடு சாய்க்கும் போது பின்வரும் பாடலைப் பாடுவர்:

    பொலியம்மா பொலி

    மாதா பொலி தாருமம்மா

    மகிண்டு பொலி தாருமம்மா…………..

    இப்பாட்டு மாடுகளைச் சந்தோசப்படுத்தி விரைந்து நடந்து குடுதிரளெழும்பப் பாடும் பாட்டு எனச் சொல்லப்படுகின்றது. இதனால் மாடுகள் உசார்படுத்தப்பட்டு விரைவாக நடக்கும். விடிவதற்கு முன் வைக்கோலை அப்புறப்படுத்திப் பொவியைக் கூட்டிவிடுவர். அதன் பின்பு போடியாருக்காக ஒவ்வொரு கட்டு வைக்கோல் அடித்துக் கட்ட வேண்டும். விடிந்தவுடன் அதனை வண்டியில் ஏற்றிப் போடியாரின் வீட்டுக்கு அனுப்பவேண்டும். பொதுவாக ஒவ்வொரு வட்டையிலும் ஆங்காங்கே புளிச்சப்பணியாரம் சுடும் சிறு கொட்டில்கள் காணப்பட்டன. விடியும் முன்னரே அக்குடிசைகளில் சூடான புளிச்சம் பணியாரம் தயராக இருக்கும். களவெட்டியில் சூடு போடுபவர்கள் புனிச்சப் பணியாரம் மற்றும் மாட்டுக்காலையில் முதியங்கண்டு பாலும் வாங்கி வந்து பாலைக் காய்ச்சி புளிச்சம் பணியாரத்தை அதில் தொட்டு சுவைக்க சுவைக்கச் சாப்பிடுவர்.

    அதன் பின்னர் இருவர் மீன் பிடிக்க செல்வர், மற்றுமிருவர் பொன்னான கீரை பிடுங்க செல்வர். ஓரிரு மணித்தியாலங்களின் பின்னர் எல்லோரும் ஒன்று சேர்ந்து சமைத்துச் சாப்பிட்டபின் மதியமானதும் பொலி தூற்றுவதற்குக் காற்று வீசம் வரை சிறு துக்கம் துங்குவர். காற்று ஆரம்பித்தவுடன் பொலி தற்ற ஆரம்பிப்பர், காற்றி முடிந்தவுடன் பட்டறையில் நெல்லைக் கொட்டிப் பாதுகாப்பாக வைத்து விட்டும் குளிக்கச் செல்வர். அதன்பின்னர் குடு இருந்தால் அடுத்த நான் சூட்டுக்கான வேலைகளை ஆரம்பிக்கத் தொடங்குவர்

    நெல் சந்தைப்படுத்தல்

    அறுவடை செய்து வீட்டுக்குக் கொண்டு வந்து ஒவ்வொரு போடியும் பட்டறை, அட்டுவம், கொட்டு போன்றவற்றில் தங்களுடைய நெல்லைச் சேமித்தும் பாதுகாத்தும் வைத்திருந்தனர். படிப்படியாகத் தங்களது தேவைக்கேற்ப அவற்றை விற்பனை செய்வர். 19ஆம் நூற்றாண்டுக்கு முன்னரும் 20 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலும் கொட்டுக்களில் வைக்கும் முறை காணப்பட்டது. 1070 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை பட்டறையில் வைக்கும் முறை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை பெரும் போடிமார் வீட்டிற்குள்ளே நெல்லை பட்டறை, கொட்டுகளில் வைத்து பாது காப்பதை விடவும் மிகையாகக் காணப்பட்டால் தங்களது வீட்டு வாசலில் அட்டுவம் அமைத்து அதில் நெல்லைச் சேமித்து வைத்து பாதுகாப்பர், அட்டுவம் என்பது நில மட்டத்துக்கு மேல் பட்டறை அமைப்பதாகும் . மழையினாலோ வெயிலினாலோ நெல்லுக்கு இம்முறை மூலம் எவ்விதத் தாக்கமும் ஏற்படாது.

    இன்றைய காலத்தைப் போன்று சில்லறையாகக் கொப்வனவு செய்யும் வியாபாரிகளும் அன்று காணப்பட்டனர், கல்முனையிலிருந்து வருகின்ற பெண்கள் ஒவ்வொரு தெருத் தெருவாகச் சென்று “நெல் இருக்கோ, தெல் இருக்கோ” என்று கூவித் திரிவர். இவர்களைப் ‘பெட்டிக்காறிகள்’ என எமது மக்கள் அழைத்தனர். பெட்டியைக் கையோடு எடுத்துச் செல்வதனால் இவர்கள் அவ்வாறு அழைக்கப்பட்டவர். இவர்கள் சில்லறையாக நெல்லை வாங்கி எடுத்துச் சென்று அவற்றைக் குற்றி அரிசியை விற்பனை செய்பவர்களாகும். இவர்கள் ஊரில் சில்லறையாக வாங்கும் நெல்லை ஒரு இடத்தில் சேர்த்து பின்னர் அவற்றை ஒரு வண்டில்காரரின் உதவியுடன் கரவாகுக்கு எடுத்துச் செல்வர். 1930 – ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு மரைக்கால் நெல்லின் விலை 10 சதமாகும். மேலும் காத்தான்குடி, நாவல்குடா போன்ற ஊர்களிலிருந்து மாட்டு வண்டிலில் வந்து சின்னப்பள்ளியடியில் இருந்த குளத்தடியில் தங்கி நிற்பர் நெல் விற்பனை செய்ய விரும்புபவர்கள் இவர்களுடன் விலை பேசி வீட்டுக்குக் கூட்டிச் சென்று அளந்து விற்பனை செய்வர். சில வேளைகளில் எமதூர் மக்கள் மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று மட்டக்களப்பு, காத்தான்குடி போன்ற ஊர்களில் விற்பனை செய்துவிட்டு வருவதும் உண்டு.

    அம்பாறை

    விவசாய பாரம்பரியம்

    மேலே தரப்பட்டுள்ள கட்டுரையின் தகவல்கள் மற்றும் தரவு யாவும் எமது நிறுவனத்தின் புலமைசார் சொத்து அல்ல என்பதுடன் இவ் கட்டுரையை எழுதிய நபரையே அது சாரும். இது எமது நிறுவனத்தின் கீழ் செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றின் பகுதியாகவே வெளியிடப்படுகின்றமையும் குறிப்பிடப்படல் வேண்டும்.