Blog

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் (STEM) பாலின இடைவெளி

Feb 11, 2022

0

“என்னோட இன்ஜினீரிங் வகுப்பில நான் ஒருத்தி தான் பொண்ணு. மத்தவங்க எல்லாம் ஆம்பள பசங்க தான்” -பாரதி பாஸ்கர், பேச்சாளர்,2018.

“வேலைவாய்ப்பைப் பெறுவதை விட பணியிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே பட்டம் பெற்ற பின்னரான எனது எண்ணமாக இருந்தது” -Marlee Kopetsky, a biomedical engineering student (CNBC, 2021)

“இங்கு மருந்து துறை (pharmaceutical field) பெண்களுக்கு சவாலான ஒன்றாக இருக்கிறது” -Tasika Fernandopulle, Brand manager, 2021

நிலைத்து நிற்கும் அபிவிருத்தி நோக்கி பயணப்படும் உலகில் பாலின சமத்துவம் இன்மை மிகப்பெரிய சவாலாகும். உலகலாவிய ரீதியில் 15 மில்லியன் பெண்பிள்ளைகள் எழுத, வாசிக்க என அடிப்படை கல்வி வசதியைப் பெறமுடியாத நிலை காணப்படுகிறது (UN). குறிப்பாக, உலக சனத்தொகையில் 50% அளவில் பெண்களின் குடித்தொகை காணப்பட்ட போதிலும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுகிறது:  பொறியியல் பட்டதாரிகளில் 28%, கணினி அறிவியல் மற்றும் தகவல் துறைப்  பட்டதாரிகளில் 40% ஆனவர்களே பெண்களாக உள்ளனர் (UNESCO science report,2021). கஸ்தூரி செல்லராஜா வில்சன் போன்ற தலைமை நிர்வாகப் பொறுப்புக்களில் (Managing Director of Hemas Pharmaceuticals PVT LTD and Hemas Surgicals and Diagnostics PVT LTD; subsidiaries of Hemas Holdings PLC) பெண்கள் காணப்பட்டாலும் ஆண்களுடன் ஒப்பிடும் போது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித (STEM)  துறைசார் பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுகிறது. 

STEM கல்வி என்பது சமூக அறிவியல், மானிட அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சம்பந்தப்பட்ட துறைகளைக்  குறிக்கிறது. இத்துறைகளில் ஆண்களின் பங்களிப்பு அதிகமாகக் காணப்படுவதுடன், பெண்களின் பங்கு முக்கியமாகக் கருதப்படுகிறது. காரணம் வேலைத் தளங்களில் விரும்பப்படும் பன்முகத் தன்மைக்கு பெண்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. அது தவிர புதிய சிந்தனைகளை வளப்படுத்த இப்பன்முகத்தன்மை அவசியமாகும். பெண்களும்        STEM         துறையில் காணப்படும் போது அவர்கள் சார்ந்த சிந்தனை மற்றும் புத்தாக்கங்களும் உருவாக்கப்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. அது மாத்திரமின்றி பெண்கள், குழந்தைகள் என சமூகம் பற்றிய புரிதலுடனான வளர்ச்சிக்கு                    STEM துறையில் பெண்களின் பங்களிப்பு அவசியமாக உள்ளது. உதாரணமாக சீட்பெல்ட் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​​​அது ஆண் உடலுக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதுடன் , இங்கு பெண்களின்  உடல் வகைகளை கருத்தில் கொள்ளாததால் பல பெண்கள் மற்றும் குழந்தைகள் இறந்த சம்பவங்கள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளன (The head foundation). 

அதுமாத்திரமன்றி,          STEM துறையில்  சிறுபான்மையினராக உள்ள பெண்கள்  பிற பெண்களுக்கு வழிகாட்டியாக (Role Models/ guidance) அமைவதால்                            ஆர்வமுள்ள பெண்கள் இத்துறையில்  இணைவதற்கான ஊக்கம் கிடைக்கப்பெறுகிறது . உதாரணமாக, இலங்கையின் முதல் கடல்சார் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமான ஓசியன்ஸ்வெல்லின் (oceanswell) ஸ்தாபகரான ஆஷா டி வோஸ் (Asha de Vos ) ஒரு  கடல் உயிரியலாளர், கடல்சார் கல்வியாளர் மற்றும் தீவில் நீல திமிங்கல ஆராய்ச்சிக்கான முன்னோடியாக  உள்ளார். அத்துடன், பிக் பேங்கைப் (Bing Bang) பற்றி ஆய்வு செய்யும் விஞ்ஞானியாக  உள்ள ஹிரண்யா பீரிஸ் (Hiranya Peiris)   அறிவியலைப் பற்றிய பொதுப் புரிதலை எளிதாக்கும் வலுவான ஆர்வத்துடன் ஒரு வெற்றிகரமான ஆராய்ச்சியாளராகவும் ,லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் வானியற்பியல் பேராசிரியராகவும், ஸ்டாக்ஹோமில் உள்ள ‘Cosmo Particle Physics’ க்கான ஆஸ்கார் க்ளீன் (Oskar Klein Centre) மையத்தின் இயக்குநராகவும் செயற்படுகிறார். 

சக பணியாளர்கள் பெண் சக ஊழியர்களிடம் பேசும் விதம், ஒதுக்கப்பட்ட பொறுப்புகள், சம்பளம் மற்றும் வழங்கப்படும் பதவி உயர்வுகள் வரை பணியிடத்தில் பாலினப் பாகுபாடு பல வழிகளில் நிகழலாம். இதனால் பணியிடத்தில் பெண்கள் மன அழுத்தத்திற்கு உட்படுகின்றனர். குறிப்பாக, ஆண்களின் மேலாதிக்கம் கொண்ட  STEM துறைகளில் இதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகினறன. இவ்வாறு சமூகங்களில் நிலவும் பால்நிலை வேறுபாடுகள் காரணமாக பெண்களுக்கு சமமான வாய்ப்புக்கள் வழங்கப்படாமை, பெண்களுக்கு ஆண்களை விட குறைவான  சம்பளம் வழங்கப்படல் (gender pay gap), வழிகாட்டுதலில் உள்ள  பற்றாக்குறை/ வழிகாட்டிகள் இன்மை (lack of mentorship) , STEM துறைகளில் பாலினம் (sexism in STEM) என்பன STEM துறைகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாகக் காணப்பட காரணமாகின்றன. இத்தகைய சவால்களுக்குத் தீர்வு காண்பதன் மூலமே இத்துறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும்.

STEM துறைகளில் பெண்களின் வரலாற்றுப் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்த ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்படுவதன் மூலம் அத் துறைகளில் பங்காற்ற ஆர்வமும், வழிக்காட்டலும் இள வயதினருக்கு ஏற்படும்.  STEM துறையில் பெண்களின் பங்களிப்பு, பெண் விஞ்ஞானிகளைப் பற்றி பேசுவது ஆண்களும் பெண்களும் முக்கியமான பங்களிப்பைச் செய்து எதிர்காலத்தைக் கட்டியெழுப்பியுள்ளனர் என்பதை தெளிவுபடுத்த உதவுகிறது. 

உதாரணமாக, மிக குறைந்தளவு பெண்களின் பங்களிப்பைக் கொண்ட விமான/ வான்  போக்குவரத்துத் துறையில் சாதனைபடைத்த இலங்கையின்  முதல் பெண் கேப்டன் ஆக அறியப்படும் அனுஷா சிறிரத்ன போன்றோரின் வாழ்க்கைப் பயணம் அத்துறையில் பணியாற்ற விரும்பும் பெண்களுக்கு உந்துசக்தியாக அமையும். இதனை விடவும் பள்ளி நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, STEM முகாம்கள் மற்றும் பள்ளி செயல்பாடுகள் அனைத்தும் STEM துறைகளில் எவரும் சிறந்து விளங்கலாம் என்ற எண்ணத்தை வலுப்படுத்த உதவுகின்றன. அத்துடன் இலங்கையில் STEM துறை வளர்ச்சிக்காக ‘Yarl IT hub/ Uki life’,  ‘STEM UP’, “STEM LABS’  போன்ற நிறுவனங்கள்/ அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதுடன் மூலமும் பாடசாலைக் காலத்திலேயே மாணவர்கள் இத்துறைகளில் உள் நுழைவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். 

பல்கலைக் கழகங்களும் பணியிடங்களும் பாலியல் தொடர்பான எந்தவொரு புகாருக்கும் விரைவாகவும் நியாயமாகவும் செயல்படுவதன் மூலம் பாலின வேறுபாடுகளுக்கு எதிராக செயற்பட  முடியும். குறிப்பாக STEM துறைகளில் பாலினத்தை எதிர்த்துப் போராட நிறுவனங்களும் தனிநபர்களும் ஒன்றிணைவதால், அனைவரும் பயனடைவார்கள். STEM துறைகளில் அதிக பன்முகத்தன்மை ஏற்படும் போது   ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உதவும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான  சாத்தியக்கூறுகள் திறக்கப்படலாம். இது தவிர, தங்களின் மதிப்பு உணர்ந்து அதற்குரிய சம்பளங்களை பெறுதல் தமது உரிமை என்ற வலுவான எண்ணம் பெண்கள் மத்தியில் வளர்க்கப்படல் அவசியமாகும். 

எனவே குடும்பம் முதல் கல்வி நிறுவனம், பணியிடம் என சமூக நிறுவனங்களில் பாலின வேறுபாடுகள் களையப்படும் போது பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ள STEM போன்ற துறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்து ஆக்கப் பூர்வமான சமூகத்தை உருவாக்க முடியும். 

About the Author:

Share This Entry

Array