Blog

சமூக கவலை கோளாறு மற்றும் மன அழுத்தம்

Apr 04, 2022

0

“மன ஆரோக்கியம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் முற்றிலும் அடிப்படையானது” – Tedros Adhanom Ghebreyesus (பொது சுகாதார ஆய்வாளர்,எத்தியோப்பியா)

“ஸ்ட்ரெஸ்ஸா (Stress) உணரும் போது அந்த குறிப்பிட்ட இடத்தை விட்டு வேறு ஒரு இடத்துக்குப்  போக வேணும். அப்பிடி போற இடம் எங்களை ஆறுதல்படுத்தலாம் இல்லாட்டி, இதுக்கு முதல் இருந்த இடமே பரவாயில்லை என்கிற எண்ணத்தையாவது  தரலாம். எதுவாகினும் அழுத்தம் தருகிற  இடத்தில இருந்து கஸ்டப்படாம ஒரு மாற்றத்தை நாங்க ஏற்படுத்தனும்” – கரு.பழனியப்பன் (இயக்குநர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், இந்தியா)

இவ்வாறு நாடு, இனம், மொழி எல்லாம் கடந்து அனைவருக்கும் பொதுவானது உள ஆரோக்கியம், குறிப்பாக ஒரு மனிதன் சமூக, பொருளாதார, உணர்வு ரீதியான அழுத்தங்களுக்கு இரையாகாமல் இருக்க மன நலத்தை (Mental Wellbeing) பேணுவது என்பது முக்கியமானது. ஆனால் அது பற்றிய புரிதலும், அதற்காக நாம் கொடுக்கும் முக்கியத்துவமும், மன ரீதியில் நாம் பாதிக்கப்படும் போது அதிலிருந்து மீள நாம் கையாளும் பொறிமுறைகள் பற்றிய தெளிவு என்பன கேள்விக்குறியாகவே இருக்கின்றன. ஆகவே மனநலம் பற்றிய புரிதல், அது  பற்றிய கலந்துரையாடல், விழிப்புணர்வு மிக அவசியமானதாகும். அத்தகையதொரு அவசியத்தை உணர்ந்து    Youth Matters தமிழ் மொழி மூலமான நிகழ்ச்சியானது மன நலம் பற்றி பேசுவதற்கான  ஒரு வாய்ப்பை தமிழ் பேசும் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அவ் இளைஞர்கள் பகிர்ந்து கொண்ட சில விடயங்கள் உங்களுடன் இங்கு பகிரப்படுகிறது.

மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் உடல், சமூக, கலாச்சார, ஆன்மீக  ரீதியிலும் ஆரோக்கியமாக இருக்க முடியும். நாம் அடிக்கடி கூறும் மன அழுத்தம்  (Stress) என்பது  நேர்மறையானதாகவும், எதிர்மறையானதாகவும் காணப்படுகிறது.  Eustress எனப்படும் நேர்மறை விளைவை ஏற்படுத்தும் மன அழுத்தம்  மூலம் உற்சாகம், நிறைவு, திருப்தி மற்றும் நல்வாழ்வு ஆகிய நேர்மறையான உணர்வுகள் உருவாகிறது. உதாரணமாக, முதல் நாள் வேலையில் ஏற்படக்கூடிய அழுத்த  நிலை வேலையை சிறப்பாக செய்ய வழி வகுக்கிறது, அதே போல் பரீட்சை காலங்களில் வரும் அழுத்த  நிலை பரீட்சைக்கு  படிக்கத் தூண்டுகிறது. இவை மூலம் வாழ்வின் சில முக்கிய தருணங்களை இழக்காமல் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. இதற்கு மாறாக,  அதிக மன அழுத்தம் , பதற்றம் (anxiety), குழப்ப நிலையில் மனம் உள்ள போது தெளிவான முடிவுகளை எடுக்க முடியாது.  உணர்ச்சிசார் / உளம் சார் அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் இருப்பது போன்ற உணர்வு குறிப்பாக மனச் சோர்வு (depression) ஏற்படுகின்ற போது அது தற்கொலை வரை இட்டு செல்லக் கூடிய வாய்ப்புகளும் உள்ளது. மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாழ்வியல் போக்கு, சுற்றுச்சூழல், நெருங்கியவர்களின் இழப்பு அல்லது அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் போன்ற பல காரணங்கள்  உள்ளன. உதாரணமாக, இன்றைய நாட்டு சூழலில் பொருளாதார நெருக்கடியின் மத்தியில்  மக்கள் மன அழுத்தத்திற்கு உட்படும் நிலை காணப்படுகிறது. அது போல், போர்ச்சூழல், கோவிட் பெருந்தொற்றுக்  காலம்,   இயற்கை அனர்த்தங்கள் போன்றன சமூக பொருளாதார தாக்கங்களை மட்டுமல்ல, உள  ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்திய ஒன்றாக காணப்படுகின்றன. 

இத்தகைய உள்ளம் சார்ந்த நெருக்கடி நிலைகளை எதிர்கொள்ள, அவற்றிலிருந்து மீண்டுவர ஒவ்வொரு தனிநபரும் ஏதோவொரு உத்தியைக் கையாள்வர். அத்தகைய உத்தி ஆரோக்கியமானதாக, மன நலத்தை பேணுவதாக இருக்க வேண்டும். மனம் அமைதி இழக்கும் நேரங்களில் அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லல், நல்லிசை கேட்டல்,உடற் பயிற்சிகளில் ஈடுபடல் நண்பருடன் கதைத்தல், தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடல், வீட்டுத் தோட்டத்தை பராமரித்தல், ஓவியம் வரைதல் போன்ற  மனதை ஆறுதல்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன், எதிர்மறையான எண்ணத்தை விட்டு நேர்மறையான எண்ணத்தை உருவாக்கல் அவசியமாகிறது. அதிலும் குறிப்பாக எம்மில் பலர்  இன்னொருவருடன் மனம் விட்டுக் கதைப்பதன் மூலம் மன ஆறுதலைத் தேடுகிறோம். அவ்வாறு கதைக்கும் போது யாருடன் எம் கதைகளை, பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும். நாம் மனம் விட்டு பேச எண்ணும் நபர் நம்பிக்கைக்குரியவராக, நேர்மறை சிந்தனை உடையவராக, நம்மையும் நம் பிரச்சனையையும்  புரிந்து கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும். இத்தகைய நபர்கள் எமது நண்பர்களாக, நலன் விரும்பிகளாக இருப்பதை நாம் விரும்புவதுடன் நாமும் இத்தகைய ஆதரவுமிக்க நபர்களாக எமது உறவுகள், நண்பர்களுக்கு இருக்க வேண்டும். 

மன நலம் என்பது தினந்தோறும் நாம் பேண வேண்டிய ஒன்று. அது நம்மையும் நம்மை சூழ்ந்தோரையும் ஆரோக்கியமானதொரு சூழலில் வைத்திருப்பதுடன், இன்னல்கள் வரும் போது அவற்றைக் கடந்து செல்ல, பிரச்சனைகளுக்கான தீர்வை தேடும் தெளிவான மனநிலையை உருவாக்கவும் உதவுகிறது. எனவே, உடல் ஆரோக்கியம் போன்றே  மன ஆரோக்கியமும் முக்கியமானது என்பதை உணர்ந்து எம் மன நலம் காப்போம்.

About the Author:

Share This Entry

Array