Blog

“மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரத்தை வலிமைப்படுத்துவதில் உலகளாவிய போக்கு”

Shahana Vijekumaran

Mar 24, 2024

0


மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரமானது மனிதனின் மதம் அல்லது நம்பிக்கைளில் ஒன்றாக காணப்படுகிறது. இவ்வாறான சுதந்திரமானது வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு பரிணாமங்களை ஏற்படுத்தி வளர்ந்தமையை முன்னைய வரலாற்றுக் கட்டுரையினூடாக அறிந்திருப்போம். இந்த கட்டுரையினூடாக “மதம்/நம்பிக்கை மீதான சுதந்திரத்தை வலிமைப்படுத்துவதில் உலகளாவிய போக்கு” தொடர்பாக பின்வரும் உபத்தலைப்புக்களின் மூலம் விரிவாக நோக்குவோம்.


மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரம் தொடர்பான நேர்மறையான போக்கு


சர்வதேச சமூகம் மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரம் மீது அதிக கவனம் செலுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மதமானது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் மதம்/நம்பிக்கையின் சுதந்திரம் 1948இல் வரைவு செய்யப்பட்ட மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் (UDHR) பிரிவு 18 இல் பொறிக்கப்பட்டது. அவ்வகையில் பிரிவு 18ன் படி மத உரிமையானது பின்வருமாறு கூறப்பட்டுள்ளமையையும் இங்கே அடையாளப்படுத்தலாம். (டொப்ட் மற்றும் கிறீன் 2018: 4: 4)


• ஒவ்வொருவருக்கும் சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரத்திற்கான உரிமை உண்டு.
• தனது மதம் அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரம் உண்டு. தனியாகவோ அல்லது சமூகமாகவோ இருக்கலாம்.
• பொது அல்லது தனிப்பட்ட முறையில், தனது மதம் அல்லது நம்பிக்கையை கற்பித்தல், நடைமுறைப்படுத்துதல் வழிபாடு மற்றும் அனுசரிப்பு உரிமையுண்டு போன்றவற்றை கூறலாம்.


அதனை தவிர. சர்வதேச சமூகமானது மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வில் அதிக கவனத்தை செலுத்துவதை சமீப காலமாக அவதானிக்க முடிகிறது. உதாரணமாக மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரத்திற்கான சிறப்புத் தூதர்கள் அதிகரிப்பு, மற்றும் அக்டோபர் 27ஆம் திகதியை சர்வதேச மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரத்திற்கான நாளாக அறிவித்தமை, வெளிப்புற நடிகர்கள் மதம்/நம்பிக்கை மீதான சுதந்திரத்தை ஊக்குவிக்க பல பாத்திரங்களை வகிக்கின்றமை, பல்வேறு நாடுகளில் உள்ள மதம்/நம்பிக்கையுடனான சுதந்திரம் தொடர்பான நிலைமையை கண்காணித்தல் மற்றும் அறிக்கை செய்தல்;, வெளிநாட்டு இராஜதந்திர மற்றும் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தத்தை கூட மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரம் கொண்டு வருவதற்கு பயன்படுத்துதல்; போன்றவற்றை அடையாளப்படுத்த முடியும்.


மதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான தற்போதைய முயற்சிகள் முதன்மையாக சர்வதேச சமூகப் பொறிமுறைகளைகளுடன் இணைந்ததாக காணப்படுகின்றது. அவை மீறல்களுக்கு தேசிய அரசாங்கங்களை பொறுப்பாக்குகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் அதிக ஆதார அடிப்படையிலான அணுகுமுறைகளுக்கான அழைப்புகளும் அதிகரித்துள்ளன. இத்தகைய அணுகுமுறைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, United states institute of Peace மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரத்திற்கும் ஆட்சி வகை, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்கும் இடையேயான உறவு குறித்து இரண்டு வருட ஆய்வை நடத்தியுள்ளது.


மதம்/நம்பிக்கை மீதான சுதந்திரம் தொடர்பான நேர்மறையான முன்னேற்றங்கள் பல நாடுகளில் காணப்படுகின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக சூடான் மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளை குறிப்பிடலாம். சூடான் மற்றும் உஸ்பெகிஸ்தான், இவை இரண்டும் USCIRF குறிப்பிட்ட அக்கறை கொண்ட நாடுகளிலிருந்து (CPCs) குறைந்த தீவிர சிறப்பு கண்காணிப்பு பட்டியலுக்கு (SWL) முன்னேறியுள்ளமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.

சூடான் முன்னாள் ஆட்சியாளர் உமர் அல் பஷீரின் கீழ் இஸ்லாமிய சட்டத்திற்கு மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட விளக்கத்தைக் கொண்டிருந்தது. அவர் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு புதிய அரசியலமைப்பு சாசனம் வரையப்பட்டதானது மதம்/நம்பிக்கை மீதான சுதந்திரத்தை பாதுகாப்பதாக அமைந்தது. மேலும் நாட்டின் சிறுபான்மை கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான மோசமான துன்புறுத்தல்களை இல்லாதொழிக்கும் வகையில் இடைக்கால அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவந்ததுடன், இஸ்லாம் அரச மதம் என்பதிலிருந்து நீக்கப்பட்டது.


உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி கரிமோவின் கீழ் மதம்/நம்பிக்கை மீதான சுதந்திரம் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது, ஆனால் 2016 இல் அவரது மரணத்தை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மிர்சியோயேவ் அதிகாரத்தை பெற்று பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார், எ.கா. உஸ்பெக் மொழியில் பைபிள்களை அச்சடித்து விநியோகித்தல், அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை தொழுகையை அனுமதித்தல், மதக் கல்வியைத் தழுவுதல், மதக் கைதிகளை விடுவித்தல் மற்றும் ஜ.நா மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து மதம்/நம்பிக்கை மீதான சுதந்திரத்தில் ஈடுபடுதல். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டு சட்டத்தைப் பெறவும், நாட்டின் சர்வதேச பெயரை மேம்படுத்தவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும் வழிவகுத்தது.


அதேப்போல, பங்களாதேஸில் அகமதியர்களுக்கு எதிரான சட்டத்தை இரத்து செய்தல், பாகிஸ்தானில் கிறிஸ்தவ மற்றும் இந்து திருமணங்களை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் தன்சானியா மற்றும் கென்யாவில் அல்-பாப் தீவிரவாத வன்முறைகள் குறைதல் போன்றவற்றையும் இங்கே சான்று பகிரலாம். (கிரே மற்றும் பலர்). தொடர்ந்து ஜக்கிய அமெரிக்காவது சர்வதேச மத சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான நிர்வாக ஆணையை (2020) வெளியிட்டது. இது மத சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் இந்த உரிமையை மேம்படுத்துவதையும் வலியுறுத்தும் ஒரு நிர்வாக ஆணை என்ற ரீதியில் அமெரிக்கா வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.


மேலும், தற்போது மதம்/நம்பிக்கையுடனான சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் ஈடுபாடு முதன்மையானது. இவை முதன்மையான ஆதாரங்களைப் பயன்படுத்தி, மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரம் தொடர்பான கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் போன்றவற்றை மேற்கொள்ளப்படுகிறது, எ.கா. USCIRF மற்றும் மதம் மற்றும் நம்பிக்கையின் சுதந்திரம் குறித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் போன்றவை சர்வதேச மனிதநேயவாதிகளுக்காக ஊக்குவிப்பை செய்கின்றன. இது தவிர மற்றைய நிறுவனங்கள் முக்கியமாக இரண்டாம் நிலை ஆதாரங்களைப் பயன்படுத்துகின்றனர், எ.கா. பியூ(Pew) ஆய்வு மையத்தை கூறலாம். இத்தகையன மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரம் தொடர்பான கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் சீர்திருத்தத்திற்கான அழுத்தத்தை உருவாக்குவதோடு பயனுள்ள விளைவுகளையும், தலையீடுகளையும் உருவாக்கவும் உதவுகின்றன.


வெளிப்புற அழுத்தங்கள் பிரதானமாக இலக்கு நாடுகளில் அரசாங்க முடிவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உதாரணமாக மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரம் மீறல்களை முன்னிலைப்படுத்தவும், உரிமை சார்ந்து பணியாற்றுகின்ற ஆர்வலர்களைப் பாதுகாக்கவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற பதவிநிலை சிறந்ததாக உள்ளது. மேலும் அழுத்தம் கொடுப்பவர்கள் மக்களால் முறையான முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும், மேலும் அந்த அழுத்தம் சீராகவும் நீடித்ததாகவும் இருக்க வேண்டும். இவ்வாறான அழுத்தங்கள் இன்று அதிகரித்துள்ளமை கண்கூடு.


அரசாங்க அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுடனான ஆக்கபூர்வமான ஈடுபாடு (நீண்ட கால உறவுகளை கட்டியெழுப்புதல் மற்றும் படிப்படியான வற்புறுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில்) இன்று அழுத்தத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. அழுத்தங்களாக, அரசாங்கங்கள், பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச/தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் உரையாடல்கள், சட்டங்கள் தொடர்பான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் முறைகள் ஆகியவற்றை கூறலாம். அதுப்போல ஆக்கபூர்வமான ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பு என்பது பரந்த சமூக சகிப்புத்தன்மை மற்றும் விரோதத்தை மாற்றுவதற்கு அரசுசாரா நிறுவனங்களுடன் எடுக்கப்படும் பொதுவான அணுகுமுறையாகவும் தற்போது உள்ளது.


தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் செயற்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதியளிப்பதன் மூலம், மதங்களுக்கு இடையிலான உரையாடல் மற்றும் செயல்பாடுகள் போன்றவற்றை கட்டமைக்கப்படும் நடைமுறை சமீப காலங்களில் அதிகரித்துள்ளமை காணக்கூடியதாக உள்ளது. முக்கிய எடுத்துக்காட்டாக, உள் சூழல்களுக்கு ஏற்ப மொழியைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துதல், பரந்தளவில் உள்ளார்ந்த ரீதியில் முனைப்பாக பணியாற்றுகின்ற குழுக்களின் கூட்டணிகளை உருவாக்குதல் மற்றும் ஒரு குறிப்பிட்ட குழுவை விட அனைத்து வகையான குழுக்களையும் முன்னிலைப்படுத்தி மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரத்தை ஊக்குவித்தல் மற்றும் தொடர்ச்சியான மற்றும் நீண்டக்கால ஆதரவை உறுதிச்செய்தல் போன்றவற்றை அடையாளப்படுத்தலாம்.


மேற்குறிப்பிட்ட வகையில், மதம்/நம்பிக்கை மீதான சுதந்திரம் தொடர்பான நேர்மறையான போக்கு வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு தரப்பினரின் உதவியினூடாக வலிமைப்படுத்தப்பட்டுள்ளமையை அடையாளப்படுத்தலாம்.


மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரம் தொடர்பான எதிர்மறையான போக்கு


உலகளவில், மதம்/நம்பிக்கை மீதான சுதந்திரம் தொடர்பான ஒட்டுமொத்த போக்கு சில நாடுகளில் எதிர்மறையாகவே உள்ளது அவ்வகையில்; கடந்த சில தசாப்தங்களாக மதக் கட்டுப்பாடுகளும் விரோதங்களும் சீராக உயர்ந்துள்ளன. பொதுவாக சமீபத்திய ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் மதம்/நம்பிக்கை மீதான சுதந்திரம் தொடர்பான மீறல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கான காரணங்களில் மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரம் தொடர்பான மீறல்களின் உலகளாவிய அதிகரிப்பு பிரதான இடத்தை வகித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இவ்வாறான நிலை காணப்படுவதாக கூறப்படுகின்றது.


உதாரணமாக இந்தியாவில் மதக் குழுக்களிடையே வகுப்புவாத வன்முறை சம்பவங்களும் நடந்தன. 2021ல் 857 வகுப்புவாத வன்முறைகள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. மதத்தலைவர்கள், கல்வியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத சிறுபான்மையினரைப் பற்றி ஆவேசமான பொதுக் கருத்துகளை வெளியிட்டனர். உதாரணமாக யதி நரசிங்கானந்த் சரஸ்வதி, இந்து மத தீவிரவாதி என்று வர்ணிக்கப்படுகிறார், அவர் நாட்டில் மத மாற்றம் மற்றும் முஸ்லீம் ஆட்சியின் அச்சுறுத்தலுக்கு எதிராக இந்துக்களை “ஆயுதத்தை எடுக்க” வலியுறுத்தினார்; பாஜக மாநில அரசியல்வாதியான ஹரிபூன் தாக்கூர் பச்சௌல், முஸ்லிம்களை “எரிக்க வேண்டும்” என்று கூறியுள்ளமை பி.சி. ஜார்ஜ், கேரள மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முஸ்லிம்கள் நடத்தும் உணவகங்களில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சாப்பிடக்கூடாது என்று ஊக்குவித்தமை மற்றும் முன்னாள் பாஜக ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர் கியான் தேவ் அஹஜா, பசுவைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் முஸ்லிம்களைக் கொல்ல இந்துக்களை ஊக்குவித்தமை போன்றவற்றை கூறலாம்.


இதேப்போன்று, மியன்மாரில், ரோஹின்கயா என்ற இஸ்லாமிய சிறுபான்மையின குழுவானது பாகுபாடு, வன்முறை போன்றவற்றை எதிர்நோக்குவதாக கூறப்படுகின்றது. இதற்கு மதம், அரசியல், மற்றும் இனம் சார்ந்த காரணிகள் இதற்கு ஏதுவாய் இருந்ததாக கூறப்படுகின்றது. சீனாவிலும். உய்குர் முஸ்லீம்கள் துன்புறுத்தப்படுவது நடந்து வருகின்றமை பேசும் பொருளாக உள்ளது. அதாவது சின்ஜியாங்கில் உள்ள உய்குர் முஸ்லீம்களை சீனா நடத்தும் விதம் தொடர்பான வெகுஜன தடுப்புகள், மத அடக்குமுறை மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பு போன்றன இதற்கு காரணமாகலாம் என்ற குற்றச்சாட்டு அறிக்கைகள் தற்போது வெளிவருகின்றன.


அதுப்போலவே இலங்கையில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் (2019) பல்வேறு வகையான தாக்கத்தை எற்படுத்தி சென்றுள்ளன. அதாவது ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றமையானது மதத்தீவிரவாதம் மற்றும் மதச்சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து அதிருப்தியான நிலைமை உருவாக்கியுள்ளமையை காணக்கூடியதாக இருந்தது. நைஜீரியாவில் இடம்பெற்ற மத மோதல்களானது குறிப்பாக கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே, வன்முறை மற்றும் சமூகங்களின் இடப்பெயர்ச்சிக்கு வழிவகுத்தது.


மேலும் சில வகையான மதச் சுதந்திர மீறல்கள் அரசியலின் உறுதியற்ற தன்மையுடன் நேரடியாகயும் அல்லது குறிப்பிடத்தக்க அளவில் தொடர்புள்ளதாகவும் இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளது. இது ஒரு நாட்டின் பொருளாதார அளவிலான வளர்ச்சியுpல் பாரிய தாக்கத்தை செலுத்துவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மதப்பாகுபாடு உள்ளார்ந்த பொருளாதாரங்களை எவ்வாறான ரீதியில் பாதிக்கலாம் என்பது தொடர்பாக ஆய்வுகள் விளக்குகின்றமையும் குறிப்படத்தக்கது. அதுப்போல. உள் சமூகங்கள் மதம் தொடர்பான வெறுக்கத்தக்க பேச்சுகளைப் பயன்படுத்துதல் மற்றும் வன்முறையில் ஈடுபடுதல் போன்றவற்றில் ஈடுப்படுகின்றன. இது தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனங்களின் வெளிப்புற அழுத்தம் குறைவாகவே உள்ளது. எ.கா. தீவிரமான குழுக்களின் நிதிகளை நிர்வகிக்கும் வங்கிகள்/நிதி நிறுவனங்கள் அல்லது சமூக ஊடக நிறுவனங்கள் வெறுக்கத்தக்க செய்திகளைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.


மேற்குறிப்பிட்டவற்றை அறிவுச்சார்ந்த ரீதியில் அணுகுகின்ற போது ஏதோவொரு குறித்த பகுதியில் ஏதோவொரு மத்தரப்பினர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். அத்தகையோரை முன்னிலைப்படுத்துவதாகவே மேற்குறித்த எதிர்மறையான போக்குகள் இடம்பெறுகின்றமையை காணமுடிகிறது. இவ்வாறான எதிர்மறையான போக்குகள் காணப்பட்டாலும், மேலே நாம் அடையாளப்படுத்திய வகையில் மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரத்தை வலிமைப்படுத்துவதில் நேர்மையான போக்கு காணப்படுகின்றமையையும் மறந்து விட முடியாது.

எனவே மேற்குறிப்பிட்ட நேர்மறையான போக்கை மேலும் வலுப்படுத்துகின்ற போது எதிர்மறையான போக்கு காலப்போக்கில் மறைய வாய்ப்புண்டு.
அதற்காக பின்வரும் பரிந்துரைகளை முன்வைக்க முடியும். அவ்வகையில், மதச்சுதந்திரம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரம் தொடர்பான நேர்மறையானதாக வலிமைப்படுத்தலுக்கு கொள்கை வகுப்பாளர்கள், சமாதானத்தை உருவாக்குபவர்கள் போன்றோர் ஒன்றிணைந்து மதச்சுதந்திரத்திற்காக ஜனநாயகத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடல் மற்றும் பரந்த மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலில் மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான சிறப்பாக முன்னுரிமைகளை கொண்டுவர உதவுதல் போன்றவற்றை செய்ய முடியும். அதனைப் போல ஆய்வாளர்கள் ஆதாரம் நிறைந்த ஆய்வுகளை மேற்கொள்ளல், மதச்சுதந்திரம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரம் தொடர்பான சிறந்த கொள்கைகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டல், அக்கொள்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்குதல் போன்றவற்றை செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேற்குறிப்பிட்டவை தவிர, சமூக ஆர்வலர்கள் மதச்சுதந்திரம் தொடர்பான விமிப்புணர்வுகளை பாமற மக்களும் புரிந்துக்கொள்ளும் வகையிலான மொழிநடையை பின்பற்றி செய்தல், எடுத்துக்காட்டாக வீதி நாடகங்களை குறிப்பிடலாம். அதுப்போல அனைத்து மதத்தவர்களும் இணைந்து சிறப்பிக்கும் வகையிலான நிகழ்வுகளை நடாத்துதல், கதைச்சொல்லும் அமர்வுகள், மற்றும் இடைவினை பட்டறைகள் போன்றவற்றை நடாத்த முடியும். இதனை போலவே பாடசாலைகளில் அனைத்து மாணவர்களையும் ஒரே இடத்தில் வழிப்பாட்டு முறைகளை மேற்கொள்ள வழிப்படுத்துகின்ற போது அனைத்து மதம் தொடர்பான புரிதலையும் அனைத்து மாணவர்களும் பெற்று கொள்ளும் வாய்ப்பு உருவாகின்றது இதனூடாக ஏனைய மதம் தொடர்பான மதிப்பளிக்கும் பண்பு மாணவர்களிடையே உருவாகும். அதளை தவிர இணை-மத விழாக்களை ஒழுங்குச் செய்தல், மதம் ஒரு அடிப்படை உரிமை என்பதனை விளக்குதல் போன்றவற்றையும் செய்ய முடியும்.


மேற்குறிப்பிட்ட பரிந்துரைகளுக்கு அமைய மதம் அல்லது நம்பிக்கை மீதான சுதந்திரத்தை நேர்மையான வகையில் வலிமைப்படுத்தலாம். அது போல நாம் ஒரு சமூக பிராணி என்ற வகையில் எமக்கான சுதந்திரத்தை நாம் அனுபவிக்கும் அதே நேரத்தில் அதனை அடுத்தவருக்கு தீங்கிழைக்காத வகையில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உயரிய பண்பினை ஒவ்வொரு தனிமனிதனும் பின்பற்றுகின்ற போது மதச்சுதந்திரம் என்ற விடயம் எதிர்மறையான விளைவுகளை நோக்கி எம்மை நகர்த்தாது என்பதையும் மறந்து விட முடியாது. ஆக நாமும் சமூகம் சார்ந்த ரீதியில் சிந்தித்து மதச்சுதந்திரத்தை பயனுள்ள வகையில் பகிர்வோமாக.


திறவுச்சொற்கள்
மதச்சுதந்திரம், நம்பிக்கை மீதான சுதந்திரம், உலகளாவிய போக்கு. வலிமைப்படுத்தல்

உசாத்துணைகள்

  1. Alesina A., Devleeschauwer A., Easterly W., Kurlat S., Wacziarg R. (2003) ‘Fractionalization’, Journal of Economic Growth, 8 (2), 155–94.
  2. Idris, I. (2021). Promotion of freedom of religion or belief. K4D Helpdesk Report 958. Brighton,
    UK: Institute of Development Studies. DOI: 10.19088/K4D.2021.036.
  3. How Globalization Affects Religious Practices and Beliefs. (2023, September 16). Grades Fixer. Retrieved from January 23, 2024, from https://gradesfixer.com/free-essay-examples/how-globalization-affects-religious-practices-and-beliefs/
  4. https://www.pewresearch.org/religion/2016/06/23/trends-in-global-restrictions-on-religion/
  5. https://olire.org/global-trends-and-challenges-to-protecting-and-promoting-freedom-of-religion-or-belief/
  6. https://parliamentofreligions.org/reports/global-trends-improving-on-religious-freedom-data/
  7. https://acninternational.org/religiousfreedomreport/reports/global/2023
  8. https://www.uscirf.gov/countries/2023-recommendations
  9. https://www.state.gov/reports/2021-report-on-international-religious-freedom/sri-lanka/

About the Author:

Shahana Vijekumaran

Shahana Vijekumaran

I'm Shahana Vijekumaran, Who is working as a Human rights defender at International Youth Alliance for Peace.

Share This Entry

Array